மேலும்

தமிழ்நாட்டில் மழையால் குறைந்தது வாக்களிப்பு – யாருக்குச் சாதகம்?

vote-tnதமிழ்நாட்டில் நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில், 73.85 வீதமான வாக்காளர்களே வாக்களித்திருப்பதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 232 தொகுதிகளுக்கு நேற்றுக்காலை 7 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை வாக்களிப்பு இடம்பெற்றது.

தமிழ்நாட்டில் நேற்று பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. 11 மாவட்டங்களில் கடுமையான மழை பெய்த போதிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கச் சென்றனர்.

எனினும், நேற்றுமாலை 6 மணியளவில் வாக்களிப்பு முடிவுக்கு வந்த பின்னர், வெளியிடப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரபூரவ அறிவிப்பில், 73.85 வீதமான வாக்காளர்களே வாக்களித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 78.01 வீத வாக்குகள் பதிவாகியிருந்தன. எனினும், இம்முறை, சுமார் 4 வீத வாக்குகள் குறைவாகவே பதிவாகியிருக்கின்றன.

100 வீத வாக்களிப்பை வலியுறுத்தி, கடுமையான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மழை காரணமாக வாக்களிப்பு வீதம் குறைந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 85 வீதம் வாக்களிப்பு இடம்பெற்றது. சென்னை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 60.47 சதவீத வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

வாக்குகள், நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதனிடையே, தேர்தலுக்குப் பின்னர், நேற்றிரவு ஐந்து தொலைக்காட்சிகளால் வெளியிடப்பட்ட கருத்துகணிப்பு முடிவுகளின்படி, திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று நான்கு தொலைக்காட்சிகளும், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பு முடிவும் கூறுகின்றன.

டைம்ஸ் நவ்- சி வோட்டர், இந்தியா ருடே, ஏபிபி, நியூஸ் நேசன், நியூஸ் எக்ஸ் ஆகியவற்றின் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணிக்கு 139, திமுக கூட்டணிக்கு 78, மற்ற கட்சிகளுக்கு 17 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் – சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணிக்கு 95, திமுக கூட்டணிக்கு 132, பாஜகவுக்கு 1, மற்ற கட்சிகளுக்கு 6 இடங்கள் கிடைக்கும் என ஏபிபி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணிக்கு 95- 99 இடங்களும், திமுக கூட்டணிக்கு 114- 118 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என நியூஸ் நேசன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணிக்கு 89- 101 இடங்களும், திமுக கூட்டணிக்கு 124- 140 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4-11 இடங்களும் கிடைக்கும் என இந்தியா ருடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணிக்கு 81- 99 இடங்களும், திமுக கூட்டணிக்கு 129- 151 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 2- 6 இடங்களும் கிடைக்கும் என நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *