மேலும்

வெல்லப் போவது யார்? – சி. சரவணன்

tamilnadu election1967-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி அரசியல் உருவானது. 1977-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி உறுதி செய்யப்பட்டது.

1991-ல் திமுகவும், 1996-ல் அஇஅதிமுகவும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்தாலும், தங்களின் வாக்குவங்கியை இழக்கவில்லை.  தமிழகத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை கொள்கைகள், கோட்பாடுகள், தேர்தல் அறிக்கைகள், அலைகள் எதுவும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. திமுக மற்றும் அஇஅதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைக்கும் கட்சிகளின் வாக்குவங்கி, இரண்டு கட்சிகளுக்கும் சமநிலையை ஏற்படுத்தியுள்ளன.  ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்மறை வாக்குகள்தான் கடந்த 5 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானித்துள்ளன.

ஆனால் இந்த முறை, கூட்டணியாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் பிரிந்து நிற்கின்றன. அதனால், வாக்குவங்கிச் சமநிலை பாதிக்கப்பட்டு, ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளும் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வாக்குவங்கி என்பது தமிழகம் முழுமைக்குமான சதவிகிதமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், வாக்குவங்கியைத் தீர்மானிப்பது வாக்குச் சாவடிகள்தான்.  ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் 1300 வாக்காளர்கள் இருந்தால், அவர்களில் 300 – 350 பேர் அஇஅதிமுகவினராகவும், 275 – 325 பேர் திமுகவினராகவும் உள்ளனர்.  பணவலிமையால், வாக்குச் சாவடி வாக்குவங்கியைத் திமுகவும் அஇஅதிமுகவும் உறுதிப்படுத்தி விட்டன. பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாகக் கூடினாலும், 150 – 250 பேர் வரை மட்டுமே உள்ளனர். 125 – 175 பேர் நடுநிலையாளர்களாக உள்ளனர். மீதி பேர் வாக்களிக்கமாட்டார்கள்.

தமிழக வாக்குச்சாவடிகளில் 85 சதவிகிதம், மேற்படி கணக்கீட்டின்படிதான் கட்சிகளின் பலம் உள்ளது.

தேமுதிகவின் வாக்குவங்கி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பரவலாக இருந்தாலும், திமுகவையும் அஇஅதிமுகவையும் முந்துகிற அளவுக்கு இல்லை. மதிமுக, பாஜக, பாமக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் யாவருக்கும்  குறிப்பிட்ட சில வாக்குச் சாவடிகளில் வாக்குவங்கி வலிமையாக உள்ளது. ஆனால், அதேபோன்ற வலிமையான வாக்குச் சாவடிகள் தொகுதி முழுவதும் இல்லையென்பதால்தான், அவர்களால் தனித்து வெற்றி பெற முடியாத சூழல் உள்ளது.

மேற்படி வாக்குவங்கிக் கணக்கீட்டைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திப் பார்த்தால், அதிமுகவுக்கு 30 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரையிலும், திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு 28 சதவிகிதம் முதல் 33 சதவிகிதம் வரையிலும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகாவுக்கு 15 முதல் 20  சதவிகிதம் வரையிலும், பாஜக மற்றும்  பாமகவுக்கு 3 முதல் 6 சதவிகிதம் வரையிலும் வாக்குவங்கி  பதிவாகலாம். நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கி இந்தத் தேர்தலில்தான் தெரியவரும்.

மேற்படி வாக்குவங்கியைக் கொண்டிருந்தால் மட்டும், திமுகவும் அதிமுகவும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. ஏனெனில், நடுநிலையாளர்கள் 15 சதவிகிதம் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதுதான் இப்போதைய முதன்மையான எதிர்பார்ப்பாகும்.

நடுநிலையாளர்களைப் பொறுத்தவரையில், மூன்று விதமாகச் சிந்தித்துத்தான் இதுவரை வாக்களித்து இருக்கிறார்கள்,

  1. நேர்மையானவர்களுக்கும் புதியவர்களுக்கும் வாக்களிப்பது.
  2. வெற்றிபெறப்போகும் அணிக்கு வாக்களிப்பது.
  3. ஆளுங்கட்சிக்கு எதிராக, எதிர்மறையாக வாக்களிப்பது.

பாஜக மற்றும் பாமகவைப் பொருத்தவரை, தொகுதி வாரியாக 30 முதல் 35 சதவிகிதம் வாக்குகளைப் பெறுவதற்குரிய வாக்குவங்கி இல்லை என்பதால், இவர்களால் ஆட்சியைப் பிடிக்கமுடியாது. ஆனால்,  குறிப்பிட்ட சில வாக்குச் சாவடிகளில் பலமான வாக்குவங்கியைப் பெற்றுள்ளதால், அந்தக் குறிப்பிட்டத் தொகுதிகளை வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், திமுக மற்றும் அஇஅதிமுக இந்தத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா, அஇஅதிமுக மற்றும் திமுகவுக்கு அடுத்து வாக்குவங்கியைப் பெற்றுள்ளன. ஆனால், இவர்கள் வசமுள்ள 20 சதவிகித வாக்குகள் 35 சதவிகிதமாக மாறுவது எப்படி?

புதிய வாக்காளர்கள் தங்கள் அணிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறார்கள். நேர்மையானவர்களுக்கும் புதியவர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிற நடுநிலையாளர்கள், இவர்கள் பக்கம் சாய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அதேசமயம்,  ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்மறை வாக்குகளும் இவர்களுக்குச் செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. எனினும்,  குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழக்கப்போகும் தொகுதிகள் இவர்களுக்கு நிறையவே உள்ளன.

திமுக, அஇஅதிமுகவுக்கு மாற்றானவர்கள் வேண்டும் என்ற புதிய புரட்சி அலை ஒன்று தமிழக மக்கள் மனத்தில் உருவாகி இருக்குமேயானால், இவர்கள் வெல்வதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் ஆறு மாதத்தில் அந்தப் புரட்சி அலை ஏற்பட்டிருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தாலும், திமுக, அஇஅதிமுகவின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப்போகும் ஆற்றல் உடையவர்கள் என்பதை உறுதியாக மெய்ப்பிக்கப்போகிறார்கள்.

அஇஅதிமுகவைப் பொறுத்தவரை அம்மா குடிநீர், அம்மா உணவகம் போன்ற நல்ல திட்டங்களுக்கும், இலவசத் திட்டங்களுக்கும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று ஆளுங்கட்சியினர் நினைக்கலாம். ஆனால், கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும் எதிர்மறையாளர் வாக்குகளே வெற்றி தோல்வியை நிர்ணயித்துள்ளன என்பதை மறந்துவிட முடியாது.

2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்று வெற்றிபெற்றதும் அஇஅதிமுகவின் தன்னம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், மக்களவைத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என்பதைத்தான் தமிழக மக்கள் பல்வேறு தேர்தல்களில் பாடமாகச் சொல்லியிருக்கிறார்கள்.  வாக்குவங்கி வலிமை இல்லாத கட்சிகளுடன் கூட்டணியும் ஆளுங்கட்சிக்குப் பின்னடைவைத் தரலாம்.

எளிதில் சந்திக்க முடியாமை, இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லாமல் செய்துவிட்டது, தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்திப்பது, ஊழல் குற்றச்சாட்டுகள், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் போன்ற பரப்புரைகளைத் தாண்டி அஇஅதிமுக வெற்றிபெற்றுவிட்டால், அக்கட்சியின் வாக்குவங்கி அசைக்க முடியாத ஆற்றலாகிவிட்டது என்று உறுதியாக நம்பலாம்.

திமுகவைப் பொறுத்தவரை, 2014 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாமல் போனாலும், தங்களுக்கான 90 லட்சம் வாக்குகளைப் பெற்றுவிட்டதால், தனது வாக்குவங்கி பழுதாகிவிடவில்லை  என்ற நம்பிக்கையுடன் உள்ளது.

இலங்கைத் தமிழருக்கு எதிரான கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட பிறகும், காங்கிரஸ் கட்சி 2014 மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் 17 லட்சம் வாக்குகளைப் பெற்று, தன்னுடைய வாக்குவங்கியை சிறுகளவேனும் மெய்ப்பித்துள்ளது. ஆனால், தமாகாவின் பிரிவு எந்த அளவுக்கு வாக்குவங்கியைப் பிரித்திருக்கிறது என்பது இந்தத் தேர்தலில்தான் தெரியும்.

தமிழக நடுநிலை வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு உள்ளது. ஆனால், குடும்ப அரசியல், 2ஜி அலைக்கற்றை முறைகேடு குற்றச்சாட்டு, இலங்கைத் தமிழர் படுகொலையின்போது மெத்தனம் போன்ற நிகழ்வுகளை நடுநிலையாளர்கள் மறந்துவிட்டிருந்தால், இவர்களின் வெற்றியும் கேள்விக்குறியை எழுப்பாது.

தமிழகத் தேர்தல் குறித்து வருகிற கருத்துக் கணிப்புகள் நம்புகிற வகையில் இல்லை. ஏனெனில், நடுநிலையாளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. 15 சதவிகித நடுநிலையாளர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமும் ஒரே அணிக்கு விழுந்துவிடப்போவதில்லை. அந்த வாக்குகளும் சிதறப்போகின்றன. நோட்டாவிலும் விழப்போகின்றன.

ஆனால், அரசியல் கட்சிகளின் வாக்குவங்கியை வெற்றிவங்கியாக மாற்றக்கூடிய வல்லமை இவர்களிடம் மட்டும்தான் உண்டு. இதுவரை வெற்றிபெறப்போகும் அணிக்கே வாக்களித்து வந்த நடுநிலையாளர்கள், இந்த முறை  தங்களின் வாக்குகள் மூலம் வெற்றிபெறும் அணியைத் தீர்மானிக்கப்போகிறார்கள்.

– சி. சரவணன்

வழிமூலம் – தினமணி

ஒரு கருத்து “வெல்லப் போவது யார்? – சி. சரவணன்”

  1. Karunakaran says:

    DMK & ADMK is anti Tamil elements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *