மேலும்

லலித் அத்துலத்முதலியின் படுகொலை குறித்து மீள் விசாரணை செய்யக் கோருகிறார் சகோதரர்

lalith-athulathmudaliசிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் படுகொலை தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அவரது சகோதரர் தயந்த அத்துலத்முதலி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், பந்தோபஸ்து அமைச்சராகவும் இருந்த லலித் அத்துலத் முதலி, பிரேமதாச அரசாங்கத்திலும் அங்கம் வகித்தார்.

பின்னர், முன்னாள் அதிபர் பிரேமதாசவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து தனிக்கட்சி அமைத்து மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட போது, 1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று கொழும்பில் நடந்த லலித் அத்துலத் முதலில் நினைவுப் பேருரையின் போதே, அவரது சகோதரர் தயந்த அத்துலத் முதலி, லலித் படுகொலை தொடர்பாக புதிய விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

“எனது சகோதரர் கொல்லப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நிலையில் அவரது கொலை தொடர்பாக புதிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன்.

ஏனென்றால் அவரது கொலை ஊடகவியலாளர்கள் லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட கொலைகள் போன்று மர்மமானது.

லலித் அத்துலத் முதலியின் இறுதிச்சடங்கில் எவ்வாறு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன? நாம் மயானத்தைச் சென்றடைந்த போது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன.

லலித் அத்துலத் முதலிக்கு சிங்கப்பூர் குடியுரிமையும், தமது நாட்டு அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் வழங்க அந்த நாட்டுப் பிரதமர் முன்வந்தார்.

அப்போது அவர் சி்றிலங்கா குடியுரிமையை விட்டுக் கொடுத்து, சிங்கப்பூர் குடியுரிமையைப் பெறுவதற்கு இணங்கியிருந்தால், அவர் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்.

1987ஆம் ஆண்டு வடமராட்சி ஒப்பரேசன் மூலம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க நெருங்கிய போது, அதனை நிறுத்துவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டது.

அந்தக் கட்டத்தில் நான் அவருடைய வீட்டுக்குச் சென்ற போது, லலித் கடுமையான மனஉளைச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அப்போதைய சிறிலங்கா அதிபர் மீது அவர், நான்கு எழுத்து வார்த்தையை கூறினார். நான் அமைதியாக இருக்கும்படி கூறினேன்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்டதற்குரிய பொறுப்புடன் அமைதியாக இருக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *