மேலும்

உலக வங்கியின் கறுப்புப்பட்டியலில் உள்ள சீன நிறுவனத்துடன் சிறிலங்கா அரசு உடன்பாடு

Srilanka-chinaகொழும்பு துறைமுக நகரக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும், சீன நிறுவனம், உலக வங்கியால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், கொழும்புத் துறைமுக நகர கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.

இந்தக் கட்டுமானப் பணிகளை புதிய அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடைநிறுத்தியது.

எனினும், தற்போது அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு எதிராக சிறிலங்கா உச்சநீதிமன்றத்தில், சிறிலங்கா மீனவர் சங்கத்தினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று இடம்பெற்ற போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான, சட்டவாளர், துறைமுக நகர கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் சீன நிறுவனம் உலகவங்கியால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டது என்ற தகவலை வெளியிட்டார்.

உலக வங்கியால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனம் ஒன்றுடன், சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு உடன்பாடு செய்து கொண்டது என்று கேள்வி எழுப்பினார் மனுதாரரின் சட்டவாளர்.

அதற்கு சீன நிறுவனத்தின் சார்பில் முன்னிலையான சட்டவாளர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், சட்டரீதியாக இந்த மனுவை விசாரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

எனினும், சீன நிறுவனத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையை நிராகரித்த தலைமை நீதியரசர் சிறிபவன், ஆட்சேபனைகளுக்கு அடிபணிந்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் அடுத்தமாதம் 17ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *