மேலும்

பரபரப்பான சூழலில் சிறிலங்காவின் மே நாள் பேரணிகள் – பிளவுபடும் சுதந்திரக் கட்சி?

Labour-Dayஉலகத் தொழிலாளர் நாளான- இன்று சிறிலங்காவின் பிரதான கட்சிகளில் ஒன்றான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பிளவுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே நாள் பேரணி காலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அதற்குப் போட்டியாக, கிருலப்பனையில் மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியினர் மாபெரும் பேரணியை நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

கிருலப்பனை சாலிகா மைதானத்தில் இந்தப் பேரணி நடத்தப்படவிருந்த போதிலும், நீதிமன்ற தடை உத்தரவை அடுத்து, கிருலப்பனை லலித் அத்துலத் முதலி மைதானத்தில் அதனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிருலப்பனை பேரணியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் பங்கேற்கக்கூடாது என்றும், அதனை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துள்ளது.

எனினும் தடையை மீறி அதில் கலந்து கொள்ளப் போவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்திருக்கிறார். இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இன்று பிளவுகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் மகிந்த ஆதரவாளர்களைக் களையெடுத்து வரும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மே நாளுக்குப் பின்னர் முக்கிய முடிவுகளை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் பரபரப்பான சூழலில், இன்றைய மே நாள் பேரணிகள் சிறிலங்காவில் இடம்பெறுகின்றன.

அதேவேளை, ஐதேகவின் மே நாள் பேரணி கொழும்பு கம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே நாள் பேரணி மருதனார்மடம் இந்து மகளிர் கல்லூரி மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *