மேலும்

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா அமைச்சர்

Champika ranawakkaபோர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில், எந்தச் சந்தர்ப்பத்திலும் அனைத்துலக தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள  சமரவீர வொசிங்டனில் தெரிவித்துள்ள நிலையிலேயே, சிறிலங்கா அரசின் மற்றொரு அமைச்சரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“போரில் இரு தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்களும், சிங்கள மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.  ஆனால் அனைத்துலகம் குற்றம் சுமத்தும் அளவுக்கு எந்தவித மனித உரிமை மீறல்களும் இறுதிப்போரில் போது இடம்பெறவில்லை.

மனிதாபிமான நடவடிக்கைகளே எமது இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான நிலையில் எமது இராணுவத்தை போர்க்குற்றவாளிகள் என அடையாளப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

எமது இராணுவம் துணிந்து பயங்கரவாதத்தை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் இன்று நாடு மிகவும் அச்சுறுத்தலான நிலையிலேயே இருந்திருக்கும். வடக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழுகின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.

இன்று அனைத்துலகம் வியந்து பார்க்கும் வகையில் எமது நாடு மாற்றம் கண்டுள்ளது என்றால் அதற்கு எமது இராணுவமே பிரதான காரணம்.

எனினும் அனைத்துலக மட்டத்தில் எழுந்துள்ள சந்தேகம், போர்க்குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்து எமது இராணுவத்தை நியாயப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது.

அதற்கான உள்ளக பொறிமுறையை எமது அரசாங்கம் முன்னெடுத்து செல்ல தயாராக உள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் சிறிலங்கா வந்திருந்த போதும் உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாளுமாறே வலியுறுத்தினார்.

அனைத்துலக தலையீடுகள் இல்லாத எமது சுயாதீன விசாரணை பொறிமுறை மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. எமது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள்  தொடர்பான விசாரணைகளுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனைத்துலக தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்.

ஒருசிலர் தெரிவிக்கும் கருத்துகளை நிலையான கருத்தாக கொள்ள முடியாது.

அனைத்துலக விசாரணைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டன. எமது உள்நாட்டு விசாரணை பொறிமுறை மூலமாகவே அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்படும்.

அதற்காக அனைத்துலக உதவிகளை நாம் பெறமாட்டோம் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. தேவையான சந்தர்ப்பத்தில் அனைத்துலக உதவிகளை பெற்று  எமது உள்ளகப் பொறிமுறையை மேலும் பலப்படுத்த முடியும்.

அது ஆரோக்கியமான விடயமாக அமையும். எனினும் தனிப்பட்ட எவரது தலையீட்டையும் எம்மால் அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *