மகிந்தவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியின் தென்னந்தோட்டத்தில் மண்ணை அகழ்ந்து தேடுதல்
மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்குச் சொந்தமான தென்னந்தோட்டத்தில், சிறிலங்கா காவல்துறையினர் நிலத்தை தோண்டி தேடுதல் நடத்தி வருகின்றனர்.
மெதமுலானவில் உள்ள மேஜர் நெவில் வன்னியாராச்சியின் மூன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்திலேயே இந்த தேடுதல் நடத்தப்படுகிறது.
மண்அகழும் இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை தோண்டி தேடுதல் நடத்தப்படுகிறது.
பணம், நகைகள், ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் நடத்தப்படுகிறது. மண் அகழப்படும் பகுதிக்கு எவரும் அனுமதிக்கப்படவில்லை.
சுமார் 20 வரையிலான சிறப்பு அதிரடிப்படையினர், அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேஜர் நெவில் வன்னியாராச்சியினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கொழும்பு பி்ரதம நீதிவான் கிகான் கிலாபிட்டிய அண்மையில் குற்றப்புலனாய்வுப்பிரிவு மற்றும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள் – லங்காதீப