மேலும்

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 06


ஒரு விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு  எதிரிகள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம், விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான போராளிகளை கொச்சைப்படுத்தும் பரப்புரையாகும். போராளிகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் தான் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் அமைப்பையும் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடக்க முடியும்.

0000

உட்பகை வேரறுக்கும் என்பதை புரிந்துகொள்ளல்……

0000

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அதிகபட்ச துரோகமிழைத்தது கருணா என்பதில் தமிழீழ விடுதலையையும் விடுதலைப்புலிகளின் அர்ப்பணிப்புடன் கூடிய பேராட்டத்தையும் நேசிப்பவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

2004 மார்ச் மாதம் கருணா பிரிந்த போது வன்னியிலே போராளிகள் , தளபதிகள்,  பொறுப்பாளர்கள் மத்தியில் கருணா மீதான கோபமும் வெறுப்பும் உச்சத்தில் இருந்தது. அந்தக்காலகட்டத்தில் நான் அங்கே இருந்தேன்.

கருணா பிரிந்ததாக அறிவித்தவுடன் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களிடமிருந்து வந்த முதலாவது உத்தரவு விடுதலைப்புலிகளின் ஊடகங்களில் கருணாவைப் பற்றிய எந்தச்செய்தியையும் வெளியிடக் கூடாது என்பதே.

இது ஏன் என்று எல்லோருக்கும் முதலில் புரிவில்லை. ‘அண்ணை ஏன்  இப்படி பொறுமை காக்கிறார். கருணாவை ஒழிக்க வேணும் அவனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேணும். அவன்ரை ஆட்கள் யாராரெல்லாம் இருக்கிறாங்கள் என்று கண்டு பிடித்து சுடவேணும்’ என்றெல்லாம் பலரும் கொதித்துக்கொண்டிருந்தார்கள்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேசியத்தலைவர் பிரபாகரன் , தளபதிகள், பொறுப்பாளர்கள்,  ஊடகத்துறையைச்  சேர்ந்தவர்கள் எல்லோரையும் அழைத்து கூட்டமொன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்திலே    தளபதிகள் பலர் கருணாவின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பான விமர்சனங்களை முன்வைத்தார்கள். ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கருணாவை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேணும், அவன் செய்த துரோகங்கள் பற்றி நாங்கள் தொடர்ச்சியாக பத்திரிகைகள் , வானொலிகள்,  தொலைக்காட்சிகளில் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று  கருத்துத் தெரிவித்தனர். சில மூத்த தளபதிகள் இந்த துரோகியை விட்டு வைக்க கூடாது என்றார்கள்.

அனைவருடைய கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்ட தேசியத்தலைவர் அவற்றுக்கு சொன்ன பதில் எல்லோரையும் ஒரு கணம் திகைக்க வைத்தது.

‘துரோகிக்கு தண்டனை கொடுக்க எனக்குத் தெரியும்.விசரனுக்கு என்ன தண்டனை கொடுக்கிறது என்றதைத்தான் யோசிக்கிறன். உவன் விசரன் அவனை நான் பார்த்துக் கொள்கிறன். நீங்கள் உங்கடை வேலை எதுவோ அதைப் பாருங்கோ’ என்பது தான் அவர்  சொன்ன பதில்.

ஊடகத்துறையினருக்கு அவர் சொன்ன பதில் ‘நீங்கள் ஒருத்தரும் அவனைப்பற்றி எழுதக் கூடாது. அவன் துரோகி,  அவன் அது செய்தான், இது செய்தான் என்று எந்த விசயமும் ஊடகங்களிலை வரக் கூடாது’ என்பதாகும்.

அதற்கு அவர் கொடுத்த விளக்கம் தான் மிக முக்கியமானது.’நீங்கள் அவனைப்பற்றி எழுத அவன் எங்களைப்பற்றி எழுதுவிக்க, அதை படிக்கிற ஆக்களுக்கு எது உண்மை எது பொய் என்று தெரியாது. நாறடிக்கப்படப் போவது இந்தப் போராட்டமும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களினதும் போராளிகளினதும் தியாகத்தாலை கட்டி எழுப்பப்பட்ட எங்கடை இயக்கமும் தான். எது பொய் எது உண்மையெண்டதை நாங்கள் எழுத்தாலை நிரூபிக்கேலாது. செயல்லை தான் நிரூபிக்க வேணும் ‘ என்பது தான் அவர் கொடுத்த விளக்கமாகும்.

ஒரு ஊடகப் பொறுப்பாளர் ‘அண்ணை அவன் எங்களைப்பற்றி பொய்யும் புரட்டும் செல்லிக் கொண்டிருக்கேக்கை நாங்கள் அதை மறுக்காமல் இருந்தால் சனம் அவன் சொல்லுறதைதான்  நம்பும். அதாலை நாங்கள் எங்கடை ஊடகங்களிலை அவனைப் பத்தி எழுதாமல் வெளி ஊடகங்களிலை புனை பெயர்களிலை எழுதலாம் தானே?’ என்றார்.

அதற்கு அவர் ‘பொய் எப்பவும் கற்பூரம் மாதிரி , உடனை பத்தியிடும். உண்மை விளக்குத் திரி மாதிரி. அது பத்த கொஞ்ச நேரம் எடுக்கும். ஆனால் பத்தியிட்டா எண்ணை இருக்குமட்டும் நிண்டு எரியும். கற்பூரம் உடனே பத்தி எரிஞ்சு இல்லாமல் போயிடும். ஆனால் விளக்கு எண்ணையும் திரியும் இருக்குமட்டும் நிண்டு எரியும். நாங்கள் விளக்கு மாதிரி இருக்க வேணும். எங்கடை செயற்பாடும் நேர்மையும்தான் திரியும் எண்ணையும் போல.’ என்றார்.

அத்துடன்’ இந்த விசயத்திலை நீங்கள் -உண்மை விளம்பி-  என்ற பெயரிலை வேறை ஒரு ஊடகத்திலை அவனைப் பத்தி எழுத, அவன் -உண்மையின் நண்பன்-  என்று இன்னொரு பெயரிலை இன்னொரு ஊடகத்தில எழுத உதுக்கு முடிவிருக்காது.  உதெல்லாம் தேவையில்லாத விசயம். இப்ப நீங்கள் அவனைப்பற்றி அவனோட இருக்கிற ஆக்களை பத்தி எழுதப் போறிங்கள் எண்டால், அவங்கடை பால் குடி பருவத்தை பற்றியா எழுதப் போறீங்கள்? அவங்கள் இயக்கத்தில இருந்த காலப்பகுதியை தான் எழுதப் போறிங்கள்? அப்ப நீங்களும் இயக்கத்தை பத்தித்தான் எழுதப் போறீங்கள்.

அவன் பதிலுக்கு  ஆட்களை வைத்து புனைபெயர்களில் இயக்கத்திலுள்ள தளபதிகளைப் பத்தி அவருக்கு இவருடன் தொடர்பு, இவருக்கு அவருடன் தொடர்பு, அவர் அங்கை போனார்,  இவர் இங்கை போனார் எண்டு எழுதினால் எங்கடை வேலையள் பாதிக்குமா? இல்லையா? எங்களிட்டை ஒரு சிறந்த புலனாய்வுத்துறை கட்டமைப்பு இருக்கு. அவை உதை பார்த்துக் கொள்ளுவினம். இது அவையின்ரை வேலை. நீங்கள் அவையின்ரை வேலையை செய்ய வெளிக்கிட வேண்டாம்.உங்கட வேலை எதுவோ அதை மட்டும் செய்யுங்கோ’ என்றார் கறாராக.

அவரது இந்த முடிவு சிறீலங்கா புலனாய்வுத்துறையின் பல திட்டங்களை நிர்மூலமாக்கியது. கருணாவை பிரித்தெடுப்பதன் மூலம் ஏனைய தளபதிகளுக்கும் அரச தரப்புடன் இரகசியத் தொடர்பிருப்பதாக வதந்திகளைப் பரப்பி விடுதலைப்புலிகளின் உட்கட்டமைப்பில் குழப்பநிலையை உண்டாக்கலாம் என்று சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் நம்பினார்கள். ஒவ்வொரு தளபதிகளின் மீதான நம்பிக்கையின் மீது சந்தேக நிழலை விழ வைப்பதன் மூலம் இயக்கத்தின் ஒட்டு மொத்த செயல் திறனை குலைக்கலாம் என்று அவர்கள் பகல் கனவு கண்டார்கள். ஆனால் அவர்களது முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

இதனால் அவர்கள் புலத்தை குறிவைக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்கினார்கள். ஏற்கனவே இதற்காக பல வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்ட போதும் 2006 ம் யூலை மாதம் 26 ம் திகதி மாவிலாறு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு புலம்பெயர் நாடுகளையும் அங்கு வாழும் ஈழத்தமிழ் மக்களையும் அவர்களுக்கான அமைப்புக்களையும் கையாளும் திட்டம் சர்வதேச நிபுணத்துவ நிறுவனங்களின் உதவியோடு வகுக்கப்பட்டது.இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாக…

  1. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு மேற்குலகில் போடப்பட்டுள்ள தடையை மேலும் மேலும் இறுக்கமாக்க ஏற்பாடுகளை செய்வது.
  2. இந்த தடைகளுக்கு எதிரான சட்ட முயற்சிகளை உள்ளே புகுந்து திசை திருப்புவது அல்லது குழப்புவது.
  3. வடக்கிலும் கிழக்கிலும் தாங்கள் முன்னெடுக்கும் பாரிய இன அழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு எந்த நாடும் தீவிரமான முயற்சிகளை எடுக்காமல் தடுத்து நிறுத்துவது. என்பவை உள்ளடங்கியிருந்ததாக உறுதிப்படுத்த முடிந்தது.

இந்தத்திட்டத்தில் பிரான்ஸ், பிரித்தானியா,சுவிஸ் ஆகிய 3 நாடுகளுக்கு மற்ற நாடுகளை விட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிரான்சும் பிரித்தானியாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவத்தையும் வீட்டோ அதிகாரத்தையும் கொண்ட நாடுகள். சுவிஸ் விடுதலைப்புலிகளின் நிதி வளத்துக்கான முதுகெலும்பாகவும் ஐ.நாவை நோக்கிய செயற்பாட்டுக்கான தளமாகவும் இருந்தது.

பிரித்தானியாவை பொறுத்தவரை அது அதிகளவுக்கு தமிழர்கள் வாழும் நாடு என்ற போதிலும்  சிறீலங்கா பொதுநலவாய அமைப்பில் இருப்பதாலும் சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு தன்னால் உருவாக்கப்பட்டது என்ற வகையில் அதற்கு புறம்பாக தமிழீழம் என்ற ஒரு நாடு உருவாக அது ஒருபோதும் ஆதரவளிக்காது என்று சிறீலங்கா தரப்பு  உறுதியாக நம்பியது.

பிரித்தானிய அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் இலாபத்துக்காக ஈழத்தமிழர்களுக்கு உதவுவதாக காட்டிக்கொண்டாலும் ஒரு அரசாங்கம் என்ற வகையில் பிரித்தானிய அரசாங்கம் தங்களை முற்றாக நிராகரித்துக் கொண்டு விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அல்லது அவர்கள் மீதான தடையை நீக்கும் முடிவை  எடுக்காது என்று சிறீலங்கா அரச தரப்பு உறுதியாக நம்பியது. அதனால் தனக்கு ஆதரவான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு நிலைமையை கையாளலாம் என்று அது கருதியது.

அதேநேரம் பிரான்சை பொறுத்தவரை சிறீலங்கா அதன் செல்வாக்கு வலயத்துக்கு உட்பட்ட நாடு அல்ல. அதே நேரம் பிரித்தானியாவை போல அது முழுக்க முழுக்க அமெரிக்க சார்பு நாடு அல்ல. அது பலஸ்தீனம் மற்றும் ஆர்மேனிய இனப்படுகொலை விடயங்களில் அமெரிக்காவுடன் ஒத்துப் போகவில்லை. பிரான்சுக்கு எப்போதும் காலனித்துவ பின்புலம் புரட்சிப் பின்புலம் என்று இரண்டு முகங்கள் இருக்கின்றன. இந்தப் புரட்சிப் பின்புலத்தை  விடுதலைப்புலிகள் தங்களது ஆதரவுத் தளமாக மாற்றிவிட்டால் அது தங்களுக்கு சிக்கலாக முடியும் என்று சிறீலங்கா அரச தரப்பு நம்பியது.

இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அது விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் மற்றும்  தாங்கள் நடத்தப் போகும் யுத்தத்தை நிறுத்தும் படி ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வருமளவுக்கு பிரான்ஸ் செல்லக் கூடும் என்று அஞ்சியது. அதனால் பிரான்சுக்கான தனியான செயற்திட்ட மொன்றை சிறீலங்கா உருவாக்கியது. அத்துடன் பிரான்சை கையாள்வதற்கென்ற தனது இராஜதந்திர செயற்பாட்டு வட்டத்தில் அனுபவமும் திறமையும் மிக்க ராஜதந்திரியான தயான் ஜெயதிலகவை பிரான்சுக்கான தனது தூதுவராக சிறீலங்கா அரசு நியமித்தது.

சுவிசை பொறுத்தவரை விடுதலைப் புலிகள் விடயத்தில் அந்நாட்டு அரசாங்கத்தின் நெகிழ்வுத்தன்மை, அந்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் மக்களின் அமோகமான விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு, அர்ப்பணிப்பும் இலட்சிய உறுதியும்மிக்க செயற்பாட்டாளர்கள் என்பன விடுதலைப்புலிகளின் புலம் பெயர்ந்த நாட்டு செயற்பாடுகளுக்கு முன் மாதிரியாகவும் பலமாகவும் இருந்தது.

பிரித்தானியாவைப் போலவோ பிரான்சைப் போலவோ இராஜதந்திர செயற்திட்டத்தை சுவிசுக்கு வகுக்க முடியாதென்பதை சிறீலங்கா அரச தரப்பு உணர்ந்து கொண்டது. விடுதலைப் புலிகளுக்கான ஏகோபித்த ஆதரவு மக்களிடம் இருக்கும் வரை தாங்கள் எந்தத் திட்டத்தை வகுத்தாலும் அது தோல்வியிலேயே முடியும் என்பதை சிறீலங்கா அரசு தரப்பு கணித்தது.

இதனால் உட்பகையை உருவாக்கி வேரறுக்க வைக்கும் வேலைதிட்டம் ஒன்றை சுவீசுக்காக சிறீலங்கா அரசு வகுத்தது. இந்தத் திட்டப்படி செயற்பாட்டாளர்களுக்கு இடையலேயான சிறு சிறு முரண்பாடுகளை ஊதிப் பெருக்கும் வேலைகள் வெளியில் இருந்து திட்டமிட்டு செய்யப்பட்டன. நீண்ட காலமாக பொது மக்கள் மத்தியில் கட்டி எழுப்பப்பட்டிருந்த நன் மதிப்பை குலைக்கும் விதித்திலும் திறமையான செயற்பாட்டாளர்கள் பற்றிய வதந்திகள் மத்தியில் பரப்பப்பட்டன.

உதாரணமாக  2007 செப்டம்பரில் குடும்ப நிகழ்வொன்றுக்காக நான் சுவிசுக்கு சென்ற போது அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஒருவர் மக்கள் சுற்றிவர அமர்ந்திருக்க நடுவில் இருந்து கொண்டு கதையளந்து கொண்டிருந்தார்.

ஏதோ குடும்ப விசயம் பேசுகிறார்கள் போலிருக்கிறது என்று நான் அவர்களை கடந்து சென்ற போது சுவிசில் எனக்கு தெரிந்த செயற்பாட்டாளர்கள் சிலரைப்பற்றி வார்த்தைகளில் எழுத முடியாத அளவுக்கு சுவாரசியமாக கதை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அந்த கதைகளை சொன்ன விதம் ஒரு சாதாரண ஒருவர் வாய்க்கு வந்தபடி உளறுவது போன்று  தெரியவில்லை. பரப்பரை செய்வதற்கு நன்கு பயிற்றப்பட்ட ஒருவராகவே அவர் எனக்கு தென்பட்டார். இது நடந்தது பீல் நகரத்தில்.

திரும்பவும் ஒரு 4 நாள் கழித்து பேர்ண் நகரத்தில் இன்னொரு குடும்ப நிகழ்வுக்கு சென்ற போது அங்கேயும் அதே நபர் சாப்பிடும்  இடத்தில் வைத்து இரண்டு பேருக்கு அரசியல் போதித்துக் கொண்டிருந்தார்.;அவரிடம் சிக்கியிருந்த 2 பேரும் பேர்ண் மாநில செயற்பாட்டாளர்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது. நான் அவரை அவதானிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பின்னால் இருந்த மேசையில் அமர்ந்து கொண்டேன்.

சுவிஸ் பொறுப்பாளர் மற்றும் முக்கியமான செயற்பாட்டளர்கள்  எல்லாம் செயற்படும் வேகம் காணாதென்றும் பழைய பெருச்சாளிகளும் ஊழல் பேர்வழிகளுமான  இவர்கள் கதிரைகளை பிடித்து வைத்துக்கொண்டு குந்தியிருக்கிறர்கள் என்றும் இவர்களையெல்லாம் கலைத்து விட்டு  இளம் பொடியளை செயற்பாட்டுக்கு கொண்டு வரவேணும் என்றும் அதற்கான முயற்சிகளை எல்லோரும் எடுக்க வேண்டும் என்றும்  அந்த இரண்டு செயற்பாட்டாளர்களுக்கும் அவர் போதித்துக்கொண்டிருந்ததார்.

அவருடைய கருத்து, பேச்சு, தொனி மற்றும் பேசுவதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடங்கள் என்பன மக்களிடமுள்ள இயக்க ஆதரவை சீர்குலைப்பதை நோக்கமாக கொண்டிருப்பதாகத்தான் எனக்குப் பட்டது. இது இயக்க ஆதரவாளர் இயக்க நலன் விரும்பி என்று நடித்துக்கொண்டு இயக்கத்துக்கு ஆப்பு வைக்கும் ஒரு நடவடிக்கையாகவோ எனக்குத் தென்பட்டது.

பின்னர் எனக்கு தெரிந்த ஒரு நீண்டகால செயற்பாட்டாளரிடம் அவரது அங்க அடையாளங்களை சொல்லி விசாரித்த போது நிறைய இடங்களில் அவர் இப்படி நடந்து கொண்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் ஒரு திடீர் புரட்சியாளர் என்றும் சொன்னார்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *