மேலும்

அனுராதரபுர, மகசின் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

Prisonerநீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யக் கோரி,  அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை  நேற்று ஆரம்பித்தனர்.

எந்தக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் தொடக்கம், அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கரவெட்டி வடக்கு , கரணவாயைச் சேர்ந்த, மதியரசன் சுலக்சன், நாவலப்பிட்டி மக்கும்பரவைச் சேர்ந்த கணேசன் சந்திரன் ஆகிய இருவருமே, நேற்றுக்காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 15 அரசியல் கைதிகள், தம்மை விடுதலை செய்யக் கோரி இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கவுள்ளனர்.

மகசின் சிறைச்சாலையின் ஜே பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேசு குகநாதன், மு.சிவநாதன், மா.நீதிநாதன், க.வேதநாயகம், ந.தர்மராஜா, சு.ஞானசீலன், தயாபரன், செல்லத்துரை கிருபானந்தன், தி.மனோகரன், யோசப் செபஸ்ரியன், சுப்பிரமணியன் கபிலன், இராசதுரை திருவருள், இரவீந்திரன் மதனி ஆகியோரே, இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தை இடைநிறுத்தப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள, இந்த அரசியல் கைதிகள், இந்தப் போராட்டத்தில் தாம் இறக்க நேரிட்டால், தமது உடலை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கும், பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *