மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமனம் – பொன்சேகாவுக்கு மைத்திரி கொடுத்த பதிலடி
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்குப் பதில் நடவடிக்கையாகவே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமித்திருந்தார்.
இதையடுத்தே, சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட இரண்டு இராணுவ நீதிமன்றங்களில் ஒன்றுக்கு மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தலைமை தாங்கியிருந்தார்.
சரத் பொன்சேகா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில், மோசடியான உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரித்த இராணுவ நீதிமன்றத்துக்கே அவர் தலைமையேற்றிருந்தார்.
மேஜர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிசை, சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவிக்கு நியமிக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு, தற்செயலான ஒன்று என்பதற்கு அப்பாற்பட்டதாகும்.
உண்மையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் புதிய நியமனத்துக்குப் பதிலடியான ஒரு நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது.
அதேவேளை, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.
லசந்த விக்கிரமதுங்க படுகொலையில் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று வெளியிடப்பட்ட இரண்டு பேரின் மாதிரி உருவப் படங்களில் ஒன்று சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே, இந்தப் படுகொலை இடம்பெற்ற காலப்பகுதியில், இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிடம், அதுபற்றி விசாரிக்கப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.