மேலும்

ஈழத்தின் முதுபெரும் பன்முக கலைஞர் ‘மாமனிதர்’ அரசையா அவர்களின் உடல் தீயுடன் சங்கமம்

Arasaiyaஈழத்தின் முதுபெரும் பன்முக கலைஞரும், கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, வாழும் காலத்திலேயே மாமனிதர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவருமான, எஸ்.ரி.அரசு மற்றும் அரசையா என அழைக்கப்படும், சிவக்கொழுந்து திருநாவுக்கரசு  அவர்களின் உடல் இன்று தீயுடன் சங்கமமானது.

நல்லூர், முத்திரைச்சந்தையை வசிப்பிடமாக கொண்ட, அரசையா அவர்கள், கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் தனது 90 ஆவது வயதில் காலமானார்.

இன்று காலை 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட , செம்மணி இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெற்றன.

arasaiya-funeral

தமிழ்ப்பற்றாளராக அறியப்பட்ட அரசையா, தமது இளமைக்காலத்தில் தமிழ் அரசு கட்சியின் அபிமானியாக இருந்தார். கட்சி நடத்திய சட்டமறுப்பு உண்ணாவிரதப் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டார்.

பின்னாளில், அவர் மேடை நாடகங்களை எழுதும் எழுத்தாளராக, மேடை நாடக நெறியாளராக, திரைப்பட நடிகராக, புகைப்படக் கலைஞராக, வில்லுப்பாட்டுக் கலைஞனாக, சிற்பியாக, ஒப்பனைக் கலைஞனாக மிளிர்ந்தார்.

1970களுக்கு முந்தைய காலகட்டங்களில் இவர் தனியாகவே நாடகங்களை இயக்கினார்.  அவற்றில், திப்புசுல்தான், வீரமனிதன், வீரத்தாய் போன்ற நாடகங்கள் ஓரளவிற்கு அன்னிய எதிர்ப்பையும், தமிழ் உணர்வையும் காட்டிய நாடகங்களாக பார்க்கப்பட்டன.

1970களுக்குப்  பின் இவரது நாடக வாழ்வில்  மாற்றம் ஏற்பட்டது. இந்தக் காலத்திலே அவர் ஒரு ஒப்பனைக் கலைஞராகவும் பரிணமித்து மிளிர்ந்தார்.

ஈழத்தின் மூத்த பன்முக கலைஞராகத் திகழ்ந்த அரசையா அவர்களுக்கு, 1991ஆம் ஆண்டு சாவகச்சேரியில் விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவில், தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

வாழும் காலத்தில், மாமனிதர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஐந்து பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Arasaiya

அரசையா உங்களை நினைச்சால்

அரசையா

நீங்கள் போயிட்டீங்களாம்!

செய்தி கிடைத்ததும் வந்த பெருமூச்சு –

நீங்கள் போயிட்டீங்கள் எண்டதாலை அல்ல!

உங்களோடை பழகி மகிழ்ந்த நாட்கள்

எனக்குத் திரும்பவும் கிடைக்க மாட்டாவோ எண்ட

ஏக்கத்தாலைதான்!

யாழ்ப்பாணம் நாடக அரங்கக் கல்லூரியை நினைச்சால்

உங்களை நினைக்காமல் இருக்க முடியேல்லை.

உங்களை நினைச்சால்

நாடக அரங்கக் கல்லூரியை நினைக்காமல் இருக்க முடியேல்லை!

எத்தினை விதமான தார் பாய்ச்சிக் கட்டுவீங்க!

எத்தினை விதமான தலைப்பாகை கட்டிக் காட்டுவீங்க!

தமிழ் நாட்டுத் தலைப்பாகை எது – நம்ம ஊர்த் தலைப்பாகை எது எண்டு

நுணுக்கமா வேறு படுத்திக் காட்டுவீங்க!

இவ்வளவும் பொதிந்திருக்கும் நீங்க –

பென்னம்பெரிய கலைக் குவியம், அரசையா!

ஊருக்குத் திரும்பி வந்து

உதையெல்லாம் உங்களெட்டை உபாசித்து மீண்டு –

புலத்து வரட்சியிலை வளம் ஏத்த வேணும் எண்டு –

ஆசைப்பட்டு இருந்தன்.

அதெல்லாம் இண்டைக்கு மண்!

ஏனெண்டா நீங்கதான் போயிட்டீங்களே!

உலகத் தமிழ் நாடகரைக் கூவி அழைத்தபடி

லண்டன் களரியினர் –

நாராய் நாராய் எண்ட பயணப் பதாகை ஏந்தி –

தமிழ் நாடு சென்றபோது

அரசையா வந்தீங்க!

பத்துக்கு மேற்பட்ட தமிழக மேடைகளில்

நேர்த்தியா நடிச்சீங்க!

பாராட்டுப் பெற்றீங்க!

அரசையா – நீங்க ஒரு வரலாறு!

வரலாறு எனும்போது

நாடக வரலாறு!

எனது வரலாற்றில் செழுமை சேர்த்த பேராறு!

ஈழத் தமிழ் நாடகத்தில்

பெருமை சேர்த்த வரலாறு!

போய் வாங்க அரசையா!

–  ஈழக்கூத்தன் ஏ சீ தாசீசியஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *