மேலும்

மகிந்தவை அச்சம்கொள்ள வைத்திருக்கும் பொன்சேகாவின் மறுபிரவேசம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

sarath fonseka -parliament (1)

அலரி மாளிகையில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கான உடன்படிக்கையில் சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட போது, கோத்தபாய ராஜபக்ச பௌத்த மகாசங்கத்துடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் உபுல் ஜோசப் பெர்னான்டோ.இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சரத் பொன்சேகா அரசியலில் எழுச்சிபெறுகின்ற போதெல்லாம், அவரது எதிர்ப்பாளர்கள் மத்தியில் அது வியப்பையும் குழப்பத்தையும் உண்டுபண்ணியுள்ளது. சரத் பொன்சேகா கடந்த காலத்தில் மேற்கொண்ட ஒவ்வொரு செயற்பாடுகளையும் நோக்குமிடத்து  இவரது அரசியல் பிரவேசமானது இவரது விரோதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தலாம்.

சரத் பொன்சேகாவின் வெளிப்படையான கருத்து வெளிப்படுத்தல்களே இவருக்குப் பல சந்தர்ப்பங்களில் கெட்டவாய்ப்பாக அமைந்துள்ளது. அலரி மாளிகையில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கான உடன்படிக்கையில் சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட போது, கோத்தபாய ராஜபக்ச பௌத்த மகாசங்கத்துடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

பொன்சேகா மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக கோத்தபாய மகாசங்கத்துடனான கலந்துரையாடலைத் தெரிவு செய்தார். கடந்த பொதுத் தேர்தலில்  தோல்வியுற்ற பொன்சேகாவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்குவது வெட்கம் கெட்ட செயல் என கோத்தபாய தெரிவித்தார்.

sarath fonseka -parliament (2)

இராணுவத்தில் இருந்த தனக்கு எந்தவொரு அரசியலும் தெரியாது என தன்னிடம் வினவிய அமைச்சர்களிடம், முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகாவிற்கும் இந்த வினா பொருத்தமானதாக அமையுமா என கோத்தபாய சவால் விடுத்துள்ளார். சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போது இது தொடர்பில் கோத்தபாயவால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் இவர் இது தொடர்பில் அச்சமும் வியப்பும் கொண்டிருந்தார் என்பதையே வெளிப்படுத்தியது.

இதேபோன்று பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை தொடர்பில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மத்தியிலும் பீதியைத் தோற்றவித்துள்ளது போல் தெரிகிறது. பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டால், தனது அமைச்சுப் பதவியைத் துறப்பேன் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக கூறப்பட்டது.

கோத்தபாய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதைத் தான் அனுமதியேன் என அமைச்சர் ராஜபக்ச முன்னர் தெரிவித்திருந்தார். விஜேதாச – பொன்சேகா முறுகலானது சர்ச்சைக்குரிய அவன்காட் ஆயுத விவகாரத்துடன் மேலும் தீவிரமடைந்துள்ளது. அவன்காட் சர்ச்சை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச கைதுசெய்யப்பட வேண்டும் என சரத் பொன்சேகா உறுதியாக கோரிக்கை விடுத்த போது, கோத்தபாயவைப் பாதுகாத்தவர் அமைச்சர் ராஜபக்ச ஆவார்.

அவன்காட் உரிமையாளருக்கும் விஜேதாசவுக்கும் இடையிலான இரகசியத் தொடர்பை பொன்சேகா வெளிச்சமிட்டுக் காண்பித்திருந்தார். தான் கைது செய்யப்படுவதைத் தடுப்பதில் சில அமைச்சர்களை கோத்தபாய பயன்படுத்தியிருந்தார் என்பது பொன்சேகாவிற்கும் விஜேதாச ராஜபக்சவிற்கும் இடையிலான தர்க்கத்தில் வெளியில் கசிந்தது.

இதேபோன்று, சில அமைச்சர்களின் செல்வாக்குடன் பொன்சேகா நாடாளுமன்றிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான முயற்சிகளிலும் கோத்தபாய ஈடுபட்டார் என்பது வெளிப்படை.

 கோத்தபாய – மகிந்த விசுவாசிகள்

மே 2009ல் புலிகள் அமைப்பிற்கு எதிரான யுத்தமானது சரத் பொன்சேகாவால் வெற்றி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பொன்சேகா தொடர்பில்  கோத்தபாய, அச்சமுறத் தொடங்கினார். போர் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர், மகிந்தவை விட பொன்சேகா பிரபலம் பெற்றிருந்தார் என்பதை புலனாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதுவே பொன்சேகா அவரது இராணுவத் தளபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணமாகும்.

பொன்சேகாவை சுதந்திரமாகத் திரிவதற்கு அனுமதித்தால், அவர் மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சதி செய்துவிடுவார் என்ற அச்சத்தினாலேயே,  மகிந்த அரசாங்கத்தால் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதானது மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கு எதிராக தம்மால் மேற்கொள்ளப்படும் தேசப்பற்றுப் போராட்டங்கள் செயலிழக்கக் காரணமாகி விடுமோ என கோத்தபாய-மகிந்த விசுவாசிகள் அச்சம் கொள்கின்றனர்.

அத்துடன் அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தபாயவை முன்னிறுத்துவதற்கான முயற்சியும் தோல்வியுறலாம். போர் வெற்றியைப் பயன்படுத்தி மகிந்த விசுவாசிகளால் சிறிலங்காவின் ஆட்சிப் பொறுப்பைத் தம்வசம் வைத்திருப்பதற்காக கோத்தபாயவை சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் களமிறக்குவதற்கான முயற்சிகளை கோத்தபாய-மகிந்த விசுவாசிகள் முன்னெடுக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை மைத்திரி – ரணில் அரசாங்கம் அமுல்படுத்த முயற்சித்தால் இராணுவத்தினரும் மக்களும் இவர்களுக்கு எதிராகத் திரும்புவர் என மகிந்த விசுவாசிகள் நம்புகின்றனர். இவ்வாறான ஒரு சூழ்நிலையை ரணில்-மைத்திரி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தலாம் என மகிந்த விசுவாசிகள் கனவு காண்கின்றனர்.

போர் இடம்பெற்ற போது மைத்திரி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அதேவேளையில், ரணிலும் பெரும்பாலான தற்போதைய அமைச்சர்களும் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தனர். அவர்கள் போரை விமர்சித்திருந்தனர்.

யுத்தத்தை சரத் பொன்சேகா தலைமை தாங்கியிருந்தார். மகிந்த விசுவாசிகள் என்னதான் கூறினாலும், போரை வென்றெடுப்பதில் பொன்சேகா எவ்வாறான தியாகங்களைப் புரிந்தார் என்பதை இராணுவத்தினர் நன்கறிந்துள்ளனர்.

பொன்சேகா நாடாளுமன்றில் நுழைந்துள்ளதால், பெயரளவில் போர் வெற்றியைத் தமதாக்கியுள்ள மகிந்த விசுவாசிகள் பலவீனமுறுவர். மகிந்த கூட போர் வலயங்களை ஒருபோதும் சென்று பார்வையிடவில்லை என்பதே இதற்கான காரணமாகும்.

பொன்சேகா இரண்டு தடவைகள் புலிகளின் தாக்குதல்களிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் மீண்டும் அவர் யுத்த களத்திற்குச் சென்றார்.  மருத்துவர்கள் ஓய்விலிருக்குமாறு கூறியபோதும் இராணுவத் தளபதி என்ற வகையில் அவர் யுத்த களத்திற்குச் சென்றார். போர் வெற்றி, போர்க் கதாநாயகர்கள் தொடர்பாக பரப்புரைகள் செய்துவரும் தினேஸ் குணவர்த்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் ஒருபோதும் யுத்த களத்தைத் தரிசிக்கவில்லை.

பொன்சேகா அரசியல் களத்தில் உறுதியாக நிமிர்ந்து நிற்கும் இவ்வாறானதொரு சூழலில் கோத்தபாயவின் அரசியல் பிரவேசத்தை குறைத்தே மதிப்பிட முடியும்.

மகிந்த விசுவாசிகள் போர் வெற்றி என்ற பெயரில் தமது அரசியல் இருப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பொன்சேகாவின் அரசியல் பிரவேசமானது இவர்களது இருப்பை அரை மடங்காகக் குறைப்பதுடன் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கான ஆதரவை மேலும் அதிகரிக்கும் என்பதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இதுவே கோத்தபாய மற்றும் மகிந்த விசுவாசிகள் பொன்சேகாவின் நாடாளுமன்ற பிரவேசிப்பை அச்சத்துடன் நோக்கக் காரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *