மேலும்

அனைத்துலக அழுத்தங்களும், சவால்களும் இன்னமும் நீடிக்கின்றன – சிறிலங்கா அமைச்சர்

Mahinda-Samarasingheஉள்ளக விசாரணைகளை மேற்கொள்ளச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டாலும், சிறிலங்காவுக்கான அனைத்துலக அழுத்தங்களும் சவால்களும் இன்னமும் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார், அமைச்சர் மகிந்த சமரசிங்க.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர்,

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு சென்றுள்ளார். சிறிலங்காவுக்கு வந்த மூன்றாவது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இவர்.

இதற்கு முன்னர் லூயிஸ் ஹாபர், நவநீதம்பிள்ளை ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் செயிட் ராட் அல் ஹுசேன் வந்துள்ளார்.

இந்த ஓராண்டு காலத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை அவதானிக்க அவருக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

அவர் நாட்டில் இருந்து வெளியேற முன்னர் சிறிலங்கா தொடர்பான ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். கடந்த காலங்களை விட, இந்த ஒருஆண்டு காலம் மாறுபட்டதாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், ஊடகச் சுதந்தரம், ஜனநாயக செயற்பாடுகள் என்பவற்றில் திருப்தி கொண்டுள்ளார்.

வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் குற்றம் செய்யாதவர்களை சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவை சந்தித்த பல்வேறு சந்தர்ப்பங்களில், எமது உள்ளக செயற்பாடுகள் தொடர்பில் மாறுபட்டதும் முரண்பட்டதுமான கருத்துக்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டன.

எமது உள்ளக செயற்பாடுகளில் சுயாதீனத்தன்மை இல்லை என்ற பொதுவான கருத்து இருந்தது. ஆனால் எமது சுயாதீனத்தில் நம்பிக்கை உள்ளது என்பதை இப்போது மனித உரிமைகள் ஆணையாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது நல்லாட்சி அரசுக்கு கிடைத்த நல்ல அடையாளமாகும்.

எமது உள்ளக பொறிமுறைக்கு முழுமையாக முன்னுரிமை கொடுத்து அதே சந்தர்ப்பத்தில் அனைத்துலக ஒத்துழைப்புகளை பூரணமாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.  இது பொதுவான ஒரு அறிக்கையாக இருக்கும்.

எனினும் சிறிலங்கா தொடர்பான அறிக்கை இந்த ஆண்டு ஜூலை மாதமே முன்வைக்கப்படும்.  சிறிலங்கா பற்றிய விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதமே முன்வைக்கப்படும்.

எனவே, இப்போது எமக்கு வழங்கப்பட்டுள்ள நல்ல சமிக்ஞை மூலமாக மனித உரிமைகள் பேரவையில் நல்ல அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் உள்ள காலப்பகுதியில் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும்.

கடந்த முறை நவநீதம்பிள்ளை வடக்கு பயணத்தை முடித்துவிட்டு செல்லும் பொது வடக்கில் இராணுவ அடக்குமுறை உள்ளது என்ற கருத்தை தெரிவித்தே சென்றார். ஆனால் இப்போது அவ்வாறு எந்த கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை.

இது ஆரோக்கியமான விடயமாக அமையும். எவ்வாறு இருந்தாலும் இப்போது அனைத்துலக  விசாரணை என்ற பதம் மாற்றப்பட்டு சுதந்திரமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை என்ற நிலைக்கு வந்துவிட்டது.

இப்போது அனைத்துலக அழுத்தமோ கடந்த காலத்தில் இருந்த கெடுபிடிகளோ இல்லை. ஆனால் அழுத்தங்கள் மற்றும் சவால்கள் உள்ளன.

எனினும் நாம் சவால்களுக்கு முகம்கொடுக்க தயாராக உள்ளோம். அதேபோல் நம்பத்தகுந்த வகையில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை கண்டறிய அரசாங்கம் துணிந்துவிட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுத்து அதே சந்தர்ப்பத்தில் எமது சுயாதீனத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்துவோம். அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

சிறிலங்காவில் நடந்த சம்பவங்களுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். இதில் அனைத்துலக தலையீடுகள் வருவதற்கு சாத்தியம் இல்லை.

சிறிலங்காவுக்கு என அரசியல் அமைப்பு ஒன்று உள்ளது, அதேபோல இந்த நாட்டின் சட்டங்கள் உள்ளன. அதற்கு அமையவே நடைமுறைப்படுத்த வேண்டும்.

யார் என்ன சொன்னாலும், என்ன யோசனைகளை நிறைவேற்றினாலும் இறுதியில் சிறிலங்காவின்  சட்ட முறைமைக்கு அமையவே நடைமுறைப்படுத்த முடியும். அதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஏற்றுக்கொண்டுளார்.

கொடுத்த கால எல்லைக்குள் தீர்வு கண்டு சிறிலங்காவை அனைத்துலக அழுத்தங்களில் இருந்து விடுவிப்போம்”  என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *