மேலும்

அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது – செயிட் ராட் அல் ஹுசேன்

zeid-colomboபோர்க்குற்ற விசாரணைகளில், அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் நேற்று பிற்பகல் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

”நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதையும் திணிக்கமாட்டோம். சிறிலங்கா அதிபர் தனது தெரிவையும் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். நாம் எமது முன்னுரிமையான விடயங்களை வெளிப்படுத்தியுள்ளோம்.

பாதிக்கப்பட்டவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சிறிலங்கா எத்தகைய முடிவுகளையும் எடுக்கலாம். அது எமக்கு பரவாயில்லை. பொறிமுறை  நடுநிலையானதாகவும் சுதந்திரமானதாகவும் இருக்க வேண்டும்.

அனைத்துலக பங்களிப்புடனான கலப்பு விசாரணைப் பொறிமுறையே எமது முன்னையதும், இப்போதையதும் தெரிவாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

கேள்வி:- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டுமா? அல்லது அவை முன்வைக்கப்பட்டுள்ளனவா?

பதில்:- ஆம். நாங்கள் பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறோம். சிறிலங்காவும் இந்தப் பரிந்துரைகளுக்கு அனுசரணை வழங்கியுள்ளது. இந்த விடயத்தில் மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை வழங்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது.  அந்த வகையில் சிறிலங்காவுடன் முழுமையாக தொடர்பில் இருப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம்.

சிறிலங்காவின் இறைமை தொடர்பான உரிமையானது சிறிலங்காவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அமையும். இதற்கு அனைத்துலக சமூகம் முழுமையாக உதவும்.

கேள்வி:- மனித உரிமைகள் பேரவையை மேற்கு நாடுகள் தமது தேவைக்காக பயன்படுத்துகின்றனவா?

பதில்:- ஐ.நா மனித உரிமை பணியகம், எந்தக்காரணம் கொண்டும் எவரினதும் தேவைக்காக பயன்படுத்தப்படமாட்டாது. எந்தவொரு உறுப்பு நாடும் அவ்வாறு எமது  பணியகத்தை  பயன்படுத்த முடியாது. எங்களது இணைய தள த்தை சென்று நீங்கள் பாருங்கள். நாங்கள் நாடுகள் தொடர்பாக கருத்துக்களை முன் வைப்போம், ஆலோசனை முன்வைப் போம். நியமனங்களை செய்வோம், எந்த விட்டுக்கொடுப்பும் இருக்காது.

எமது செயற்பாடுகள் தொடர்பில் பலர் தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர். எங்களது சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்களை பாருங்கள். எந்த நாடு மனித உரிமையை மீறுவதாக இருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம். மனித உரிமை சட்டம் அனைவருக்கும் பொருத்தமானதாகும்.

கேள்வி:- மக்களுக்கிடையிலான கலந்துரையாடல் மூலம் அனைத்துலக நீதிபதிகள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க முடியும் என நீங்கள் கூறுகிறீர்கள். இந்த இடத்தில் ஏதாவது புதிய நெகிழ்வுத் தன்மை முன்வைக்கப்பட்டுள்ளதா?

பதில்:- சிறிலங்கா அனுசரணை வழங்கிய, அனைத்துலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானம்  உங்கள் முன் உள்ளது. இதில் உள்ள விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் தேசிய மட்ட கலந்துரையாடல்கள் மூலம் தீர்மானம் எடுக்கலாம். இவை இறுதித் தீர்மானத்தை எடுக்க உதவும்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும். பாதிக்கப்பட்டவரை கேந்திரமாகக் கொண்ட வகையில் செயற்பாடுகள் இடம்பெறவேண்டும். அனைத்துத் தரப்பு பாதிக்கப்பட்டவர்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.

கேள்வி:- வடக்கில் நீங்கள் அடுத்த முறை வரும் போது முகாம்களில் உள்ள அனைவரும் சொந்த இடங்களில் இருப்பார்கள் எனக் கூறினீர்கள். அப்படியாயின் அது தொட ர்பாக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டதா?

பதில்:- வடக்கில் ஒரு நலன்புரி முகாமிற்கு சென்றிருந்தேன். அந்த மக்களின் சொந்த வீடுகளுக்கு செல்வதற்கான விருப்பத்தை நான் கண்டேன். அது மிகவும் பலமானதாக காணப்பட்டது. சில மக்கள் இந்த முகாமில் 30 ஆண்டுகளாகவும் இருக்கின்றனர். ஒரு குடும்பம் 30 ஆண்டுகளாக அந்த முகாமில் இருப்பதாக தெரிவித்தது. அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு செல்வதே ஒரே விடயமாக இருந்தது. பல காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. ஏனைய காணிகள் விரைவாக விடுவிக்கப்படவேண்டும். இது தொடர்பில் ஒரு திட்டமிருப்பதை நாம் அறிந்தோம்.

கேள்வி:- மகிந்த ராஜபக்சவையும், சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளையும் அனைத்துலக நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வதா உங்கள் திட்டம்?.

பதில்:- இது நேரடியான கேள்வி. இது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். திட்டமிடப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனரா எனப் பார்க்க வேண்டும். படிப்படியான நடவடிக்கைகள் இந்த செயற்பாட்டில் அவசியமாகின்றன.

எமது அறிக்கையில் நாங்கள் அனைத்துலக நீதிமன்றம் குறித்து பேசவில்லை. அதற்கான நியாயாதிக்க செயற்பாடுகள் எந்தளவு கடினமானவை என எங்களுக்குத் தெரியும். இது தொடர்பில் சிறிலங்காவில் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவ்வாறான சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவது கடினமான செயற்பாடாகும்.

எனவே இங்கு அனைத்துலக நீதிமன்றம் என்ற விவகாரம் விவாதத்திற்குட்பட வேண்டிய அவசியமில்லை. இது சிறிலங்காவின் செயற்பாடாகவே அமையும். சாட்சியங்கள் விசாரிக்கப்பட வேண்டும். இறுதியில் நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும்.

கேள்வி:- பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படவேண்டும் என ஒரு முறை கூறிய நீங்கள் இம்முறை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முரண்பாடான கருத்தை தெரிவித்துள்ளீர்கள் அது தொடர்பில்?

பதில்:- இந்த விடயம் தொடர்பில் ஊடகங் களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட சில நிலைமைகள் வெளியானதை கண்டேன். குற்றச்சாட்டுக்கள் இல்லா விடின் கைதிகள் நிச்சயமாக விடுதலை செய்யப்பட வேண்டும். நாங்கள் இதனை அமெரிக்காவிற்குக் கூட கூறியிருக்கிறோம். குவாண்டனாமோ தடுப்பு முகாம் விடயத்திலும் இதனை நாம் கூறியிருக்கிறோம்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சட்ட குடையொன்று வழங்கப்பட வேண்டும். ஆனால் குற்றச்சாட்டுக்கள் இல்லாவிடின் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென அறிவுரை செய்கிறோம்.

கேள்வி:- அனைத்துலக நீதிபதிகள் விவகாரத்தில் சிறிலங்காவின் கருத்து தொடர்பாக நீங்கள் எதனை அவதானிக்கிறீர்கள்?

பதில்:- சிறிலங்கா அதிபர்  இந்த விடயம் தொடர்பில் தெளிவான அறிவித்தலை விடுத்திருக்கிறார். அதனை நீங்கள் தான் அறிக்கையிட்டுள்ளீர்கள். நாம் அறிக்கையை முன்வைத்துள்ளோம்.  இதில் பல தெரிவுகள் இருக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுப்பது உங்கள் இறைமை தொடர்பான முடிவாகும்.

நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக பரிந்துரைகளை முன்வைக்கலாம். ஆனால் தீர்மானம் எடுப்பது உங்கள் இறைமையாகும். இந்த செயற்பாட்டின் இறுதியில் பாதிக்கப்பட்டோர் தமக்கு வழங்கப்பட்ட நீதி தொடர்பில் திருப்தி அடைய வேண்டும். நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். ஐ.நா. இதனை நல்லது என்றோ கெட்டது என்றோ சொல்லுவது இறுதி முடிவு அல்ல.

பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், பிள்ளைகள் , மனைவிமார்கள், அரசாங்கம் திருப்திகரமாக செயற்பட்டுள்ளது என்று கூறுவதே இங்கு முக்கியமானதாகும். அதற்கு இந்த கலந்துரையாடல் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *