மேலும்

மகிந்த கண்ணீர் சிந்தியது ஏன்?

mahinda-tearதான் கட்டியெழுப்பிய குடும்ப ஆட்சி கடந்த ஒராண்டில் நிர்மூலமாக்கப்பட்டதையே மகிந்த ராஜபக்சவின் கண்ணீர் சிந்திய ஒளிப்படம் தெளிவாகக் காண்பிக்கின்றது.

இவ்வாறு பிபிசியின் கொழும்பு செய்தியாளர் சாள்ஸ் ஹவிலாண்ட், பிபிசியில் எழுதியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ந்துக்களின் காவியமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தற்போது சிறிலங்காவில் இடம்பெறுகின்றன.  கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவில் நவீன இராமாயண இதிகாசம் உருவாகியுள்ளது.

குறிப்பாக சிறிலங்காவின் ஆட்சியைத் தம் வசம் வைத்திருந்த ராஜபக்ச குடும்பத்தின் தற்போதைய நிலை நவீன இராமாயண இதிகாசத்தைத் தோற்றுவித்துள்ளது.

ஒரு ஆண்டிற்கு முன்னர் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சியிலிருந்து தோற்கடிக்கப்பட்ட பின்னர், இவரைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட புதிய அரசாங்கமானது ராஜபக்சவின் கோட்டையைத் தகர்த்து எறிவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் துணைவியார் கடந்தவாரம் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டமை மற்றும் இவரது மகன்களில் ஒருவரான யோசித ராஜபக்ச நிதி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டமை போன்றன தொடர்பாக பி.பி.சி செய்தியாளர் சாள்ஸ் ஹவிலாண்ட் வெளியிட்டுள்ள தகவல்கள்-

யோசித கைதுசெய்யப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் மகிந்தவின் கண்களில் நீர் நிரம்பியிருந்த ஒளிப்படம் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. யோசிதவிற்கு எதிராக நிதி மோசடிக் குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் எதிரான அரசியல் பழிவாங்கலாக நோக்கப்படுகிறது. தான் கட்டியெழுப்பிய குடும்ப ஆட்சி கடந்த ஒராண்டில் நிர்மூலமாக்கப்பட்டதையே மகிந்தவின் கண்ணீர் சிந்திய ஒளிப்படம் தெளிவாகக் காண்பிக்கின்றது.

மகிந்தவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அதிகாரங்களைத் தம்வசம் வைத்திருந்த இவரது இரண்டு சகோதரர்களும் மற்றும் மகிந்தவின் மனைவி மற்றும் இவரது இரண்டு மகன்மாரும் தற்போது ஆயுத விவகாரம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் விசாரணைக்கும் முகங்கொடுக்கின்றனர்.

ஆனாலும் இவ்வாறான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மகிந்தவும் அவரது குடும்பத்தவர்களும் மறுத்தே வருகின்றனர்.

30 ஆண்டுகளாக சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தை வெற்றி கொண்டமைக்காக அநேக சிங்களவர்கள் ராஜபக்சவிற்கு மதிப்பளித்தனர். பெரும் தொகையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இந்த யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும் சிங்களவர்கள் மகிந்தவிற்கு புகழாரம் சூட்டினர்.

அதேவேளையில், மகிந்தவின் குடும்ப ஆட்சியானது சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவே மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியுற்று மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறக் காரணமாகியது.

கடற்படையில் இணைந்த யோசித ராஜபக்ச சலுகை அடிப்படையில் பதவி உயர்த்தப்பட்டார் என அதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர். கடந்த ஆண்டு, சிறிலங்காவின் றக்பி வீரர் ஒருவர் முன்னாள் அதிபர் பாதுகாப்பு வீரர் ஒருவரால் கொல்லப்பட்டதற்கு யோசிதவின் காதல் விவகாரமே காரணம் என அமைச்சர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ராஜபக்சாக்கள் மட்டுமன்றி இராணுவ மற்றும் புத்த பிக்குகள் கூட பல்வேறு வன்முறைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ்ப் பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு நான்கு இராணுவ வீரர்களுக்கு கடந்த ஒக்ரோபரில் நீண்டகால சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கேலிச்சித்திர வடிவமைப்பாளரான பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து புலனாய்வாளர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் கடும்போக்கு பௌத்த பிக்குவான ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கடந்த கால குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தால் பல்வேறு கைதுகள் இடம்பெறுகின்றன.

சிறிலங்காவின் ஆட்சியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தற்போது சுதந்திரமாகச் செயற்படக் கூடிய சூழல் சிறிலங்காவில் உருவாகியுள்ளது.  இருப்பினும் சட்ட ஆட்சியை சிறிலங்கா அரசாங்கம் மிகவும் இதயசுத்தியுடன் செயற்படுத்துகின்றதா என்கின்ற சந்தேகம் நிலவுகிறது.

கடந்த காலங்களில் சட்ட ஆட்சியை மீறிய சிலர் இன்னமும் கைதுசெய்யப்படாது சுதந்திரமாக உலாவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் மேர்வின் சில்வா ஒருவராவார். ராஜபக்சவின் காலத்தில் பொதுத் தொடர்பாடல் அமைச்சராக மேர்வின் சில்வா செயற்பட்டார்.

இவர் தனது அடியாட்கள் மூலம் தனது விரோதிகள் மீது பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதேச சபை அதிகாரி ஒருவரை மேர்வின் சில்வா மரம் ஒன்றில் கட்டினார். இதுவே இவரது வன்முறைச் செயற்பாடுகளுக்கு சிறந்ததொரு உதாரணமாகும்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மேர்வின் சில்வா அவரது கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் இவர் மீதான குற்றங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு இவர் விடுவிக்கப்பட்டார்.  இன்று மேர்வின் சில்வா சுதந்திரமாகத் திரிகிறார்.

இவர், தன்மீதான அனைத்துக் குற்றங்களுக்கும் தனது முன்னாள் பாதுகாப்பாளர்களான ராஜபக்ச சகோதரர்களே காரணம் எனக் கூறுகிறார். இவர்களே காணாமற் போதல்களுக்குக் காரணம் என வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார்.

இதேபோன்று முன்னர் ராஜபக்சவின் ஆதரவாளர்களாகவும் விசுவாசிகளாகவும் செயற்பட்ட பலர் இன்று அமைச்சரவையில் சிறந்த பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது சிறிலங்காவின் சட்ட ஆட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது நாட்டில் தீவிர மாற்றத்தை நோக்கி மிக மெதுவாகவே நகர்கின்றது என கடந்த ஆண்டு மரணமாகிய மறுமலர்ச்சி சிந்தனைவாதியான பௌத்த பிக்குவான மாதுளுவாவே சோபித தேரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சிறிசேன தற்போது நாட்டில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஏதுநிலைகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். ஆகவே அவர் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி நாட்டில் சிறந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *