மேலும்

சம்பந்தன், ரணில், மைத்திரியை இன்று சந்திக்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

Zeid Raad Al Husseinசிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை இன்று மாலை நிறைவு செய்து கொள்ளவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று காலை 8 மணியளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை,  கொழும்பிலுள்ள  எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் சந்திக்கவுள்ளார்.

இதையடுத்து, அலரி மாளிகையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை காலை 9 மணியளவில் அவர் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் முக்கிய அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேச்சுக்களை நடத்துவார்.

இதன்போது ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதனை நடைமுறை்படுத்துவது தொடர்பான விடயங்கள், சமகால நிலைமைகள், தனது பயணத்தின் போது கண்டறியப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபருடனான சந்திப்புகளுடன், தனது சந்திப்புகள் அனைத்தையும் முடித்துக் கொள்ளும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இன்று பிற்பகல் 2.30 மணியளவில், ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளார். இதன்போது, முக்கிய தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்னர், அவர் இன்று மாலை கொழும்பில் இருந்து ஜெனிவா நோக்கிப் பயணமாகவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *