மேலும்

பிரகீத் கடத்தலில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வாளர்களை வெலிக்கடையில் சந்தித்தார் மகிந்த

mahinda-visit welikadaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.

நேற்றுக்காலை வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரிகளான லெப்.கேணல் சம்மி குமாரரத்ன, லெப்.கேணல் பிரபோத வீரசேகர, சார்ஜன்ட் மேஜர் உபசேன, ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு அதிகாரியான கோப்ரல் ரஞ்சித் ரூபசேன ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

சிறைச்சாலை மருத்துவமனைக்கு வெளியே வந்த மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் பேசிய போது,

“எக்னெலிகொடவின் உண்மையான கொலையாளி யார் என்று எமக்கு எல்லோருக்கும் தெரியவேண்டும்.

இந்தக் கொலையை அமைச்சர் ஒருவர் அல்லது வேறு எவரேனும் செய்திருக்கலாம். தெளிவான சாட்சியங்களின்றி நாம் எவருக்கு எதிராகவும் விரலை நீட்டக் கூடாது.

mahinda-visit welikada

முதலில்  எக்னெலிகொட உயிருடன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என்று எமக்குத் தெரிய வேண்டும்.

எக்னெலிகொட கடத்தப்பட்டது தொடர்பாக எனது அரசாங்கத்தின் காலத்திலும் விசாரிக்கப்பட்டது. ஆனால், அப்பாவி இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை.

எக்னெலிகொட கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில், புலனாய்வு அதிகாரிகள் பலரையும் இந்த அரசாங்கம் கைது செய்துள்ளது.

சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர், சிலர் வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதிக்கின்ற செயல்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *