சிறிலங்கா இராணுவத்துக்கான பயிற்சித் தேவைகள் குறித்து ஆராய்ந்தது சீன படை அதிகாரிகள் குழு
சிறிலங்கா இராணுவத்துக்குத் தேவையான பயிற்சிகள் தொடர்பாக ஆராய்வதற்காக, சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பயிற்சிப் பிரிவைச் சேர்ந்த, மேஜர் ஜெனரல் லி டெசியூ தலைமையிலான இந்தக் குழுவில், ஐந்து மூத்த கேணல் தர அதிகாரிகளும், ஒரு லெப்.கேணல் தர அதிகாரியும் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள், சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலகவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
அத்துடன், சிறிலங்கா இராணுவத்துக்குத் தேவையான பயிற்சிகள், இராணுவப் பயிற்சிகளை வலுப்படுத்தல் தொடர்பாக, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் உயர் மட்ட பேச்சுக்களையும் நடத்தினர்.
சீன இராணுவ அதிகாரிகள் குழு, சபுகஸ்கந்த, பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் கல்லூரிக்கும் சென்றிருந்தது.
மேலும், சீனாவில் பயிற்சி பெற்ற சிறிலங்காவின் உயர் தட்ட இராணுவ அதிகாரிகளையும், சீன படை அதிகாரிகள் குழு தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.