மேலும்

அற,அறிவு வலிமைகளை அரசியல் வலிமையாக மாற்றுவோம் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

TGTE-ruthraமலரும் 2016 ஆம் ஆண்டு, சுதந்திரவேட்கையின் குறியீடாக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் அமைப்பினை நாம் உலகத் தமிழ் மக்களை இணைத்த வண்ணம் எழுதுவதற்குத் தீர்மானித்துள்ளோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 

முழுமையான அரசியல் விடுதலை பெறுவதற்கு முன்னர் தமது நாட்டுக்கான அரசியல் அமைப்பை மக்கள்; எழுதிய உதாரணங்கள் உலக வரலாற்றில் உண்டு என்பதையும் இவ்விடயத்தில் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

குறித்த இவ்விடயத்தினை உள்ளடக்கி நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஆற்றிய உரையின் முழுமையான தொகுப்பு :

TGTE-ruthra

அனைவருக்கும் வணக்கம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் நான்காவது நேரடி அமர்வினை நிறைவு செய்யும் நேரத்தில் உங்களோடு எனது எண்ணங்களையும் சிந்தனைகளயும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த அமர்வில் நாம் அறிவுபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் பல்வேறு விடயங்களையும் உரையாடிக் கொண்டோம். விவாதித்துக் கொண்டோம். எமது செயற்பாடுகள் பற்றிய சுயவிமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டோம். தொடர்ந்து செய்ய வேண்டியவை குறித்துத் தீர்மானங்களும் எடுத்துக் கொண்டோம்.

அரசியல் ஜனநாயக வழிமுறையில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ள நாம் ஜனநாயகமுறையில் வெளிப்படைத் தன்மையுடன் இந்த அமர்வினை நடாத்தியிருக்கிறோம்.

ஆழமான கோட்பாட்டு நிலையிலான எண்ணக்கருத்துக்களும் பல்வேறு நடைமுறை சார்ந்த விடயங்கள் தொடர்பான கருத்துப்பரிமாற்றங்களும் இவ் அமர்வில் இடம் பெற்றிருக்கின்றன.

இவ் அமர்வில் தமது துறைகளில் புகழ் பெற்ற அறிஞர்களதும், அரசியல் ஆழமும் அர்ப்பணிப்பும் கொண்ட செயல்வீரர்களதும், சட்ட அறிஞர்களதும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு எமது விவாதங்களை அவை செழுமைப்படுத்தியிருந்தன.

இவ் அமர்வில் பங்கு கொண்ட அரசவை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், மதியுரைக்குழு உறுப்பினர்கள், நாடு கடந்த அரசாங்கத்தின் நண்பர்கள் அனைவரும் நாகரீகமான முறையில், சகிப்புத்தன்மையுடன்,  பொறுப்புணர்வுடன், தோழமையுணர்வுடன் இவ் அவையில் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள்.

எமது இந்த ஜனநாயக நடைமுறை குறித்தும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகப் பண்பாடு குறித்தும் நான் பெருமையடைகிறேன். இதில் பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே!

இம் அமர்வை நாம் நடாத்திக் கொண்டிருந்த வேளை எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் இயற்கையின் சீற்றத்தால் அடைந்த சொல்லொணாத் துயரம் எமது மனங்களையெலலாம் வாட்டி வதைத்த வண்ணம் இருந்தது.

இலங்கைத்தீவில் சிங்கள இனவாதச் சீற்றத்தால் சொல்லாணாத துயரங்களுக்கு உள்ளாகிய ஈழத் தமிழ் மக்களுக்கு தமது அன்பையும் ஆதரவையும் நீட்டி அரவணைத்துக் கொண்டவர்கள் தமிழக மக்கள். ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக இன்றும் தமது உணர்வால் துடித்துக் கொண்டிருப்பவர்கள். சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு எதிரான ஈழத் தமிழ் மக்கள் நடாத்துகின்ற போராட்டத்தின் பங்காளர்களாக இருப்பவர்கள். ஈழத் தமிழ் மக்களை சிங்களம் முழுமையாகத் துவம்சம் செய்து விட முடியாத வகையில் பாதுகாப்புக் கவசமாக அமைபவர்கள்.

இம் மக்களின் துயரை நாம் தமிழர்கள் என்ற உணர்வோடு மட்டுமல்ல உலகப் பொதுவிழுமியமான மனிதாபிமானம் சார்ந்தும் எம்முள் ஏந்தி நிற்கிறோம். இக் கடினமானதொரு சூழலில் தமிழக மக்களுக்கு எமது தோழமையுணர்வை வெளிப்படுத்தவும் அவர்களின் துயரினைப் பகிர்ந்து கொள்ளவும் இவ் அமர்வில் எமது அமைதி வணக்கத்தையும் செலுத்தினோம்.

பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்புப் பணியில் எம்மையும் இணைத்துக் கொள்ளும் வகையில் தமிழக மக்கள் பேரிடர் நிதியம் ஒன்றையும் உருவாக்கியுள்ளோம். இந் நிதிக்கு உடனடியாகவே இரண்டு இலட்சம் இந்திய ரூபாக்கள் எமது பங்களிப்பாக இவ் அவையில் திரட்டப்பட்டுள்ளது. சிறுதுளி பெருவெள்ளம் போல் சேரும் நிதித் தொகை தமிழக மக்களின் துயர் துடைப்புப் பணிக்கென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழகத் தோழமை மையத்தின் ஊடாக வழங்கப்படும் என்பதனையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர் தியாகு அவர்கள் இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள  ஈழத் தமிழ் மக்களின் துன்பமான வாழ்க்கைநிலை குறித்து தனது உரையில் வெளிப்படுத்தினார். உலக நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்த மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களாக, தமது வாழ்க்கையினை வளமாக அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அற்ற மக்களாக எமது மக்கள் வாழ்ந்து வரும் நிலை வேதனை தருகிறது. இம் மக்களை உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் டயாஸ்பொறாவின் ஒரு பகுதியாகவே நாம் கருதுகிறோம்.

எம்மால் முடிந்த அளவுக்கு அரசியல், சட்ட வழிமுறைகiளைப் பயன்படுத்தி இம் மக்கள் அரசியல் தஞ்சம் புகுந்த ஏனைய மக்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் கிடைக்கப் பெற்றவர்களாக வாழ்வதற்கு நாம் முயற்சிகள் செய்வோம். இம் மக்களின் நலனில் கூடுதல் அக்கறை கொள்ளுமாறு மனித உரிமையின்பால் கரிசனை கொண்ட அனைவரிடமும் நாம் வேண்டுதல் செய்கிறோம்.

நாம் உலகில் உரிமைக்காகப் போராடும் மக்களுடன், உலக சமுதாயத்தை முன்நோக்கி நகரத்த விரும்பும் முற்போக்கான சக்திகளுடன் எமது தோழமையுணர்வை வளர்த்துக் கொள்வது அவசியமானது. நாம் தமிழ்த் தேசிய உணர்வுடன் மட்டும் எம்மை மட்டுப் படுத்திக் கொள்ளாது ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்பது உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் ஒரு பகுதி என்ற சர்வதேசக் கண்ணோட்டம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.  தோழர் தியாகு அவர்கள் தனது உரையில் சுட்டிக் காட்டியவாறு எம்மிடம் உள்ள அற வலிமையையும் அறிவு வலிமையையும் அரசியல்வலிமையாக மாற்றுவதற்கு ஏற்ப நமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள் ஈழத் தமிழ் மக்கள் துயருக்குள்ளாகிய ஒரு சமூகம் என்ற வகையில் ஒருமைப்பட்டுள்ளார்கள் என்பதனை தனது உரையில் வெளிப்படுத்தினார். தமிழ் மக்களின் துயரை நிரந்தரமாகத் தீர்க்கும் வகையிலானதோர் முழுமையான அரசியல் விடுதலையே தமிழ் மக்களின் கனவாக இருக்கிறது. இக் கனவையே நாம் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறோம். கனவு மெய்ப்பட வேண்டும் என முயற்சிகளும் செய்து வருகிறோம்.

இம் அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்களும் மையங்களின் தலைவர்களும் தமது செயற்பாட்டு அறிக்கைகளை முன்வைத்ததோடு உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேள்விகளையும் உள்வாங்கித் தமது பதில்களை வழங்கியிருந்தனர்.

தமிழ் மக்களுக்கான அரசியல்நீதி தொடர்பாக சட்ட அறிஞர்கள் குழுவுடன் இவ் அவை நடாத்திய உரையாடல் ஆழமானதாகவும் பல்வேறுவகையான செயற்பாட்டு எண்ணங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்து இந்த அமர்வை மிகவும் காத்திரமாக ஆக்கியிருந்தது. யூகோஸ்லாவியா நாட்டில் நடந்த அனைத்துலக விசாரணைப்பொறிமுறையின் அனுபவங்கள் அடிப்படையில் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய விடயங்களும் விவாதிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கான நிதியினைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறையில் நாம் தொடர்ந்து செயற்படுவதற்கான வேலைத்திட்டங்களையும் நாம் இம் அமர்வின் போது வகுத்துக் கொண்டோம்.

உலகளாவிய தமிழ் மரபுத்திங்கள் குறித்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றிக்கொண்டோம். உலகத்தமிழர் வரலாற்றுமையம் வேலைத்திட்டத்தையும் மாவீரர் நினைவாலயம் அருங்காட்சி வேலைத்திட்டத்தையும் ஒருமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதெனவும் தீர்மானித்துக்கொண்டோம்.

தமிழ் தேசிய அட்டையை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு அது தொடர்பாக சில நடவடிக்கைகளையும் இன்று முன்மொழிந்தோம். அரசவை உறுப்பினர்களின் ஈடுபாடு பங்குபற்றுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டு இவ் விடயம் மதியுரைக்குழுவின் ஆலாசனைக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.

தோழர்களே!

நாம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் நிதானமாகவும் எச்சரிக்கையுடனும்  செயற்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். மிகுந்த சூழ்ச்சியுடன் சிறிலங்காவின் தற்போதய ஆட்சியாளர்கள் செயற்படுகிறார்கள் என்பதனைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஏதோ முன்னர் இருந்த மகிந்த இராஜபக்சவும் அவரது கூட்டாளிகளும்தான் இனவாதிகள் என்பது போலவும் தாங்கள் இனவாதமற்ற தூய்மையானவர்கள் போலவும் ஒரு சித்திரத்தைக் கட்டி எழுப்பப் பார்க்கிறார்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பானவர். முள்ளிவாய்க்கால் வெற்றியை மகிழ்வுடன கொண்டாடியவர். தனது நடவடிக்கைக்காகத் தமிழ் மக்களிடம் இன்றுவரை அவர் மன்னிப்புக் கோரியதும் கிடையாது. இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சூழ்ச்சிகளின் அடிப்படையில் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தி அழிப்பவர். ஆட்சியின் பிதாமகர் சநதிரிகாவின் கைகளிலும் தமிழ் மக்களின் இரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கிறது.

அதையும் விட எமது பிரச்சினை தனிநபர்களால் ஆனதல்ல. சிறிலங்காவின் சிங்கள இனவாத அரசே எமது பிரதான பிரச்சினை. இந்த அரசைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் அரசியலே எமது பிரச்சினை. ஆட்சியாளர்கள் மாறினாலும் அரச கட்டமைப்பில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஏற்படுவதற்கு சிங்கள பௌத்த இனவாதம் இடமளிக்கப் போவதுமில்லை. இந்த இனவாத அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரையும் நாம் இனவாதிகளாகவே பார்க்க முடியும்.

இங்கு ஒருவர் தனிப்பட்டரீதியில் நல்லவர் எனபதோ அல்லது எளிமையாளவர் என்பதோ பொருட்டு அல்ல. சிங்கள மக்களின் மேலாண்மையின் கீழ் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் சிறிலங்கா அரச கட்டமைப்பு சொல்லும் நீதி. அது அநீதியானது. இனவாத அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டது. இவ் அரச கட்டமைப்பை நாம் நிராகரிக்கிறோம.; ஒரு தேசம் என்ற வகையில் எமது அரசியல் தலைவிதியை நாமே தீர்மானிக்கும் உரித்துடையவர்கள். அந்த உரிமைக்காகவே நாம் இன்றுவரை போராடுகிறாம்.

சிங்கள ஆட்சியாளர்கள் தமக்குத் தேவை ஏற்படும் போது தமிழ்த் தலைவர்களை அரவணைப்பதும் பின்னர் ஏமாற்றித் தூக்கி எறிவதும் வரலாறு முழுதும் நடைபெற்று வந்துளன்ளது. இத்தகைய ஏமாற்றுவித்தையில் தற்போதய ஆட்சியாளர்களும் தேர்ச்சி பெற்றவர்கள். போர்க்கைதிகள் விடயத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையை தற்போதய ஆட்சியாளர்கள் பல தடவைகள் ஏமாற்றி விட்டனர்.

இன்றுவரை இவ் விடயத்தில் ஒரு தீர்வைக்காண இம் ஆட்சிமாற்றத்தின் ஒரு தூணாக இருந்த கூட்டமைப்புத் தலைமையால் முடியவில்லை. கூட்டமைப்பை ஆட்சிமாற்றத்துக்கு உதவுமாறு கோரிய அனைத்துலக சமூகமோ அரசுகளோ இவ் விடயத்தில் தலையிட்டு ஒரு தீரவைப் பெற்றத் தர முயலவில்லை. போர்க் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரித் தமிழ்ப்; பாடசாலை மாணவன் செந்தூரன் தனது உயிரை அழித்திருக்கிறான். நாம் ஏமாற்றப்பட்டதாகக் கூட்டமைப்புத் தலைமைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் முறையிடும் நிலை தோன்றியிருக்கிறது.

புதிய ஆட்சியாளர்கள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்து மக்கள் ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை அரசியல் கைதிகள் விடயத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. இத்தகைய ஆட்சியாளர்கள் ஊடாகத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்பதனை எந்த அடிப்படையில் கூட்டமைப்புத் தலைமையால் இனியும் மக்களிடம் கோர முடியும்?

தமிழ் மக்களும் எத்தனை தூரம் அதனை நம்பிப் பயணிக்க முடியும்?

மலரும் 2016 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவைப் பதிவு செய்து நிற்கிறது. இவ் ஆண்டில் எமது சுதந்திரவேட்கையின் குறியீடாக எமது கனவான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் அமைப்பினை நாம் உலகத் தமிழ் மக்களை இணைத்த வண்ணம் எழுதுவதற்குத் தீர்மானித்துள்ளோம். தாம் முழுமையான அரசியல் விடுதலை பெறுவதற்கு முன்னர் தமது நாட்டுக்கான அரசியல் அமைப்பை மக்கள்; எழுதிய உதாரணங்கள் உலக வரலாற்றில் உண்டு என்பதையும் நாம் இவ்விடத்தில் குறித்துக் கொள்ள வேண்டும்.

நாம் எழுதவுள்ள இந்த அரசியலமைப்பினைத் தமிழீழம் உருவாகும்போது தேவைக்கேற்றவாறு மாற்றியமைப்பது தமிழீழத்தின் நாடாளுமன்ற  உறுப்பினர்களின் உரிமையின்பாற்பட்டதாக இருக்கும்.

நாம் இவ்வாறு செயற்படுவதனைக் கனவுலகில் சஞ்சரிப்பதாக சிலர் கேலி செய்யக்கூடும். யதார்த்தம் புரியாதவர்களாக எம்மைச் சித்தரிக்கவும் கூடும். நாம் இலட்சியவழியில் நின்று எமது இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். நாம் இலட்சிய அரசியல் செய்ய விரும்புகிறோம். யதார்த்த அரசியல் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் எமது அடிப்படைகளைக் கைவிட்டுக் கீழ் நோக்கிக் கீழ் நோக்கிச் சென்று இறுதியில் சரணாகதி அரசியலில்தான் வந்து முடியும்.

நாம் யதார்த்தத்தினை எமது கனவுகள் நோக்கி வளைக்க முனைகிறோம். யதார்த்த அரசியல் கனவுகளை யதார்த்தம் நோக்கி இழுத்துச் சென்று இறுதியில் தோல்வியைத் தழுவும். மக்களையும் தோல்வியடைந்தவர்களாக மாற்றி விடும். இலட்சிய அரசியல் என்பது கனவுகளை உயிர்ப்பாக வைத்திருக்கும்வரை தோல்வியினைத் தழுவிக் கொள்வதில்லை. தனக்கு வாய்ப்பான சூழல் உருவாகும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யதார்த்தத்தை மேலும் கனவுகள் நோக்கி வளைத்துச் செல்லும். யதார்த்த அரசியல் தோல்வியினைத் தழுவும்போது இலட்சிய அரசியல் மேலும் வலுவடையும்.

தற்போதைய ஆட்சியாளர்களுடன் கூட்டமைப்புச் செய்யும் யதார்த்த அரசியல் தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாதவகையில் சிறிலங்காவின் சிங்கள பௌத்த அரசால் தோற்கடிக்கப்படும் என்றே நாம் கருதுகிறோம். இதனை நாம் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டியது என்ற மனவிருப்பில் இருந்து கூறவில்லை. வரலாற்றை வழிகாட்டியாகக் கொண்டு நாம் உணரக்கூடிய விடயங்களை ஒரு முன்னெச்சரிக்கையாகவும், இலட்சிய அரசியலைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதற்காகவுமே கூறுகிறோம்.

அன்பான நண்பர்களே!

தமிழீழத்தை ஒரு அரசாக உருவகித்து நமக்குக் கிடைக்கக்கூடிய வெளிகளைப் பயன்படுத்தி வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவுடன் மெய்நிகர் நிலையூடாக ஒரு அரசுக்குரிய பணிகளை எவ்வாறு ஆற்றலாம் என்பது குறித்தும் மேற்சபையினதும் பாராளுமன்றத்தினதும் அமர்வுகளின்போது நாம் விவாதித்துள்ளோம். இவை பற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை, தாம் நிகழ்த்திய கருத்துப்பரிமாற்றங்களின் அடிப்படையில் சில ஆலோசனைகளை அடுத்த வாரம் முன்வைப்பார்கள். அவற்றின் அடிப்படையில் நாம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் எவையென இம்மாத முடிவுக்குள் அறியத்தருவோம்.

ஈழத் தாயகம் , தமிழ் டயாஸ்பொறா, தமிழகம், உலகத் தமிழ் மக்கள் என மக்கள் வலிமையில் கட்டியெழுப்பப்படும் ஓர் அரசாகத் தமிழீழம் அமையும் வகையில் நாம் எமது பணிகளை ஆற்ற வேண்டும்.

இந்த அமர்வு நிறைவடைந்து நாம் வீடு திரும்பும் போது தமிழீழ அரசை உருவாக்கும் கனவை நோக்கி தற்போதய யதார்த்தத்தை வளைப்பது குறித்த சிந்தனையையும் அதற்கான செயற்பாடுகளையும் எமது நெஞ்சங்களில் சுமந்து கொண்டே செல்வோம். எமது இந்த முயற்சிக்குத் தேவையான ஆத்மபலத்தை நமது மாவீரர்கள் நிச்சயம் தருவார்கள். மாவீரர் கனவுகள் நனவாக உறுதியுடன் உழைப்போம்; எனத் திடசங்கற்பம் கொள்வோமாக!

நன்றி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கருத்து “அற,அறிவு வலிமைகளை அரசியல் வலிமையாக மாற்றுவோம் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்”

  1. m.m.arrafath says:

    super!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *