ஐதேக உறுப்பினர் முஜிபுர் ரகுமானை நாடாளுமன்றத்துக்குள் தாக்க முயன்ற எதிர்க்கட்சியினர்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைத் தாக்க முயற்சித்தனர்.
இதனால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று மாலை பதற்றம் ஏற்பட்டதுடன் இரண்டு தடவைகள் அவை ஒத்திவைக்கப்பட்டது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நாமல் ராஜபக்ச உரையாற்றியதையடுத்து, ஐதேக உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உரையாற்றினார்.
இதன் போது, ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக அவர் உரையாற்றிய போது, தாஜுதீனைக் கொலை செய்தவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் விடயங்களை அவையில் பேசக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்தநிலையில், முஜிபுர் ரகுமான் அந்த விடயத்தை தொடர்ந்து பேசிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, சரத் நிசாந்த உள்ளிட்ட மூவர் அவரை தாக்குவதற்காக ஓடிச் சென்றனர்.
அப்போது பிரதியமைச்சர்கள் ஹர்ஷ டி சில்வா, சுஜீவ சேனசிங்க மற்றும் சில உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தாக்குதலில் இருந்து முஜிபுர் ரகுமானைப் பாதுகாக்கும் நோக்குடன் மறித்து நின்றனர்.
இதனால் அங்கு மோதல் நிலை தடுக்கப்பட்டதுடன் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடிய போது, தாம் அவை நடவடிக்கைகள் தொடர்பான காணொளிப் பதிவை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய,தெரிவித்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை அவைக்குள் மோதல் நிலை உருவானது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.