மேலும்

பொறுப்புக்கூறல்: சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயற்பட பிரித்தானியா முடிவு

uk-flagசிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா, பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயற்படவுள்ளது.

இந்த செயல்முறைகளில் புதுடெல்லியில் உள்ள பிரித்தானியத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர், வதிவிடமற்ற பிரதிநிதியாகச் செயற்படவுள்ளார்.

அண்மையில் மோல்டாவில் சிறிலங்கா அதிபருக்கும் பிரித்தானியப் பிரதமருக்கும் இடையில் நடந்த சந்திப்பையடுத்து, பிரித்தானியப் பிரதமர் பணியகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், சிறிலங்காவின் இராணுவ மறுசீரமைப்புக்கு உதவ இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று பிரித்தானிய தூதரகப் பேச்சாளரிடம் விளக்கம் கோரியிருந்தது. அதற்கு, அவர்,

“ ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி,  நீண்ட மோதல்ளுக்கு தீர்வு காண்பதாக சிறிலங்கா அரசாங்கம் உறுபூண்டுள்ளது.

இதில் சிறிலங்கா இராணுவத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்கு சிறிலங்கா தீர்வு காணும் பொறுப்பைக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு ஆலோசகரின் நியமனத்தின் மூலம், இந்த விவகாரங்களில் சிறிலங்கா ஆயுதப்படைகளுடன் பிரித்தானியா இணைந்து பணியாற்ற,முடியும்.

நாம் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சிவில் சமூகத்துக்கும் ஆதரவாக இருக்கிறோம்.

காவல்துறை மறுசீரமைப்பு,  மொழி உரிமைகள், கண்ணிவெடி அகற்றல், ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வுப் பயிற்சிகள், பாலின வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பளித்தல் உள்ளிட்ட ஏனைய பல்வேறு திட்டங்களின் மூலமும், போருக்குப் பிந்திய நல்லிணக்க செயல்முறைகளுக்கு பிரித்தானியா ஆதரவளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *