மேலும்

போர்க்குற்ற விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் – அனைத்துலக ஊடகம் எழுப்பும் கேள்விகள்

gavelகலப்பு நீதிமுறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இவ்வாறானதொரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன? என்று huffington post ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார் Taylor Dibbert.

இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான புதிய நீதிமன்றை அமைக்கவுள்ளதாக அண்மையில் சிறிலங்கா அறிவித்துள்ளது. இந்த நீதிமன்றானது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையாகவே அமையும் எனவும் சிறிலங்கா அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் இதில் சாத்தியமான சில அனைத்துலக சக்திகளின் ஈடுபாடும் உள்வாங்கப்படும் என்பது தொடர்பாக சிறிலங்கா எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய சிறப்பு நீதிமன்றானது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

இம்மாதத்தின் இறுதியில் அல்லது ஜனவரியில் இந்த நீதிமன்றானது தனது பணியை ஆரம்பிக்கும் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அறிவித்துள்ளார்.

இத்தகையதொரு சூழலில் ஒரு சில விடயங்கள் தொடர்பாகக் கருத்திற் கொள்ள வேண்டும். கலப்பு நீதிமுறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இவ்வாறானதொரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன?

போர்க் குற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்து முடிப்பதற்குப் பல மாதங்கள் எடுக்கும். இருப்பினும் சிறிலங்கா அரசாங்கமானது சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பான அறிவித்தலை ஏற்கனவே முன்வைத்துள்ளது.

இதற்கும் மேலாக, சிறிலங்காவின் சட்டத்தில் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றன தொடர்பான முக்கிய சட்டங்கள் இன்னமும் வரையறுக்கப்படவில்லை. ஆகவே இத்தகைய சட்டங்கள் சிறிலங்காவின் உள்நாட்டுச் சட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்தச் சட்ட அமுலாக்கல் எவ்வளவு காலத்தில் இடம்பெறும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்ன? இது தொடர்பாக ஏற்கனவே விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதா? இன்னமும் ஒரு சில வாரங்களில் நீதிமன்றம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளதால், சட்டச் சீர்திருத்தம் தொடர்பான தனது நிகழ்ச்சி நிரலை சிறிலங்கா அரசாங்கம் முன்னுரிமைப்படுத்தியுள்ளதா?

சிறிலங்கா தற்போது புதிய நீதிமன்றை அமைப்பது தொடர்பாக அறிவித்துள்ளதானது இதனுடைய நிலைமாறத்தக்க நீதிமன்ற அணுகுமுறை தொடர்பான தகவல்களை எடுத்துக் கூறுகிறது.

கடந்த ஒக்ரோபர்  01ஆம் நாள், சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மான விவாதத்தின் போது சிறிலங்காவின் விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக வல்லுனர்கள் உள்ளீர்க்கப்படுவார்களா என்கின்ற வினா முன்வைக்கப்பட்டது.

இது மிகவும் பலவீனமான அரசியல் விவகாரமாகும். அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பை சிறிலங்காவின் தற்போதைய சிறிசேன அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது.

இந்நிலையில் அமைக்கப்படவுள்ள புதிய நீதிமன்றில் அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்கள் போன்றோர் எவ்வாறு பங்களிக்கவுள்ளனர் என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் வரையறுக்க வேண்டும்.

இவ்வாறான அனைத்துலக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டவாளர்கள் மற்றும் விசாரணையாளர்கள் எவ்வாறு இந்நீதிப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்பதும் இங்கு முன்வைக்கப்படும் வினாவாகும்.

ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் இத்துறை சார் அதிகாரிகளைத் தெரிவுசெய்துள்ளதா? இவர்களுக்கு உண்மையான அதிகாரங்கள் வழங்கப்படுமா?

புதிய நீதிமன்றை அமைப்பது தொடர்பாகத் தற்போது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அறிவித்துள்ளதானது மிகவும் முக்கியமானதாகும். சந்திரிகா சிறிலங்காவின் முன்னாள் அதிபராக 1994-2005 வரையான காலப்பகுதியில் பணிபுரிந்திருந்தார்.

சந்திரிகா பதவியிலிருந்த காலத்தில் இடம்பெற்ற மீறல்களும் புதிய நீதிமன்றில் விசாரணை செய்யப்படுமா? அவ்வாறாயின், இதில் உண்மை மற்றும் நீதி போன்றன எவ்வாறான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன?

இது போன்று பல கேள்விகளுக்கு மிகவும் விரைவாகப் பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *