மேலும்

சிறிலங்கா அரசுடனான தொடர்புகளை அவசரப்பட்டு துண்டித்து விடமுடியாது – இரா.சம்பந்தன்

sampanthan-batticaloa (1)நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்தவேளையில் அவசரப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்துடனான தொடர்புகளை துண்டித்து விட முடியாது என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயலகத்தில் நடந்த கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்கவில்லை. வரவுசெலவுத் திட்டத்தை விமர்சிக்கலாம். அதற்காக அதனை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் நிதானமாக பக்குவமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை அனைத்துலகத்துக்கு காட்ட வேண்டிய தேவை உள்ளது.

நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்த வேளையில் அவசரப்பட்டு சிறிலங்கா அரசுடனான தொடர்புகளை துண்டித்து விட முடியாது ” என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இரா. சம்பந்தன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

sampanthan-batticaloa (1)sampanthan-batticaloa (2)

அதேவேளை, மட்டக்களப்பில் நேற்று இந்த மற்றொரு நிகழ்வில் உரையாற்றிய இரா. சம்பந்தன், “எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு, தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் மிகமுக்கிய ஆண்டாக இருக்குமென நான் நம்புகின்றேன்.

இந்த நாட்டில் நீண்டகாலமாக நடைபெறாத பல செயற்பாடுகள் நடைபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

தமிழர்களின் பிரச்சினை இன்று உள்நாட்டு பிரச்சினை மட்டுமல்ல, அனைத்துலக பிரச்சினையாகும். இது முன்னொரு போதும் இல்லாத அளவு அனைத்துலக மயப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உட்பட பல நாடுகள் செயற்படுகின்றன. உண்மை நிலை உணரப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும், இவ்வாறான சம்பவங்கள் இனி ஒருபோதும் நடைபெறக்கூடாது என்பதில் அனைத்துலகம் உறுதியாகவுள்ளது.

இவ்வாறான நிலையில் நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். எமக்குள் இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்ள முயலவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கருத்து “சிறிலங்கா அரசுடனான தொடர்புகளை அவசரப்பட்டு துண்டித்து விடமுடியாது – இரா.சம்பந்தன்”

  1. Karthigesu Indran
    Karthigesu Indran says:

    கட்டுகட்டாய் பணம் அதி சொகுசு வாழ்க்கை இதை எல்லாம் எந்த முட்டாளும் விடமாட்டான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *