மேலும்

போர்க்குற்ற விசாரணை சிறிலங்கா இராணுவத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதா?

karunasena-hettiarachi-army hq (4)ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் நீதிப் பொறிமுறையானது, நடுநிலைமை மற்றும் ஒருமைப்பாடு போன்றவற்றைப் பின்பற்றும் தனிப்பட்ட நீதியாளர்களின் தலைமையில் சுயாதீன நீதி சார் மற்றும் விசாரணை சார் நிறுவகங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

இவ்வாறு firstpost ஊடகத்தில் சுனில் ராமன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் உயர் மட்ட ஜெனரல்களுடன் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில், சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்திப்பொன்றை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பிற்கு இராணுவத் தளபதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

சிறிலங்காவில் 25 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிநாட்களில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறான பதிலை அளிக்க வேண்டும் என்பதை முக்கியத்துவப்படுத்தியே இந்தச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

சிறிலங்கா மீதான பல்வேறு போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தம் மீது ஏதாவது விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா என்கின்ற பீதியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரை அமைதிப்படுத்துவதற்காகவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

போர்க் காலக் குற்றங்கள் தொடர்பாக நிச்சயமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதிலும், மிகவும் கடினப்பட்டு வென்றெடுத்த சமாதானத்தை சிறிசேன அரசாங்கம் குழிதோண்டிப் புதைக்கக் கூடாது என்பதே சிறிலங்கா இராணுவத்தினரினதும் சிங்கள மக்களினதும் கருத்தாகும்.

நவீன இராணுவ சாதனங்களைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தமானது உலகின் மிகவும் நீண்ட உள்நாட்டுப் போர்களில் ஒன்றாக உள்ளது.

தன் மீது சுமத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கும் பொறுப்பளிப்பதற்கும், பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சமாதானம் செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக இந்நாட்டு இராணுவத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒரு இலட்சம் வரையான உயிர்கள் சிறிலங்காவில் காவு கொள்ளப்பட்டன. அதிபர்கள், பிரதமர்கள், இந்தியாவின் முன்னாள் பிரதமர் போன்ற பலர் இதற்குள் உள்ளடங்குவர்.

விடுதலைப் புலிகளின் முன்னால் உறுப்பினர்கள் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக சிறைகளில் வாடுவோர் போன்றோர் தற்போது மேற்குலக நாடுகளால் அரசியற் கைதிகள் எனக் கூறுவது போன்று இராணுவ அதிகாரிகளும் போர்க் குற்றவாளிகளாக நோக்கப்படுவது தற்போது அதிகரித்துள்ளது.

இராணுவத்தின் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதி கோரி மேற்குலக நாடுகளால் மேற்கொள்ளப்படும் அழுத்தம் தற்போது அதிகரித்துள்ளதானது சிலரைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இவ்வாறு கவலைப்படும் தலைவர்களும் செல்வாக்குமிக்க இலங்கையர்களும் நிச்சயமாக மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவானவர்கள் எனக் கூறமுடியாது.

ஆனால் கடந்த ஆண்டுகளில் சிறிலங்கா தன்னை தக்கவைத்துக் கொள்வதற்காக எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்தது என்பது உணரப்பட வேண்டும்.

இரண்டு முக்கிய அரசியற் கட்சிகளைக் கொண்ட தேசிய ஒற்றுமை அரசாங்கத்தால் சிறிலங்கா வழிநடத்தப்படுகிறது. கடந்த ஒக்ரோபரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதாவது கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான தீர்மானத்தையே சிறிலங்கா அரசாங்கம் ஆதரித்துள்ளது.

அத்துடன் சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடைகளையும் இந்த அரசாங்கம் நீக்கியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கான நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது.

தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மை, நீதி, மீளிணக்கப்பாடு மற்றும் மீட்சி அடைதல் போன்றவற்றுக்கான ஆணைக்குழு போன்று தனது நாட்டிலும் உருவாக்குவதாகவும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், காணாமற் போனவர்களுக்கான அலுவலகம் போன்றவற்றின் ஆலோசனைகளுடன் இதனை உருவாக்குவதாகவும் சிறிலங்கா ஜெனீவா கூட்டத் தொடரின் போது பிரேரித்திருந்தது.

அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் சிறிலங்கா உட்பட பிற நாடுகளின் அனுசரணையுடன், சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களை விசாரணை செய்வதற்கு பொதுநலவாய அமைப்பு மற்றும் ஏனைய அனைத்துலக நீதிபதிகள், பாதுகாப்புச் சட்டவாளர்கள், அதிகாரமளிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் போன்றவர்களின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இத்தீர்மானத்தின் பிரகாரம் நீதிப் பொறிமுறையானது, நடுநிலைமை மற்றும் ஒருமைப்பாடு போன்றவற்றைப் பின்பற்றும் தனிப்பட்ட நீதியாளர்களின் தலைமையில் சுயாதீன நீதி சார் மற்றும் விசாரணை சார் நிறுவகங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

தென்னாபிரிக்காவின் உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவை அடிப்படையாகக் கொண்ட உள்நாட்டு நீதிப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும் எனவும், சிறிலங்காவில் விசாரணைகளை மேற்கொள்ளப்படும் போது அனைத்துலக நீதிபதிகள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஏனைய நாடுகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

இவ்வாறான ஒரு அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை முன்னாள் ஆட்சியாளரான ராஜபக்சவின் அரசாங்கம் நிராகரித்திருந்தது. ஆனால் சிறிசேனவின் தேசிய அரசாங்கமானது இதிலிருந்து விடுபட்டு அனைத்துலக சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.

போர் முடிவடைந்த காலத்திலிருந்து மகிந்த அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்பட்ட இறுக்கமான சூழ்நிலையைத் தற்போது சிறிசேன அரசாங்கம் தளர்த்தியுள்ளதன் மூலம் இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர், அமெரிக்காவின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்த அதேவேளையில், 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிவந்ததாகச் சந்தேகிக்கப்படும் 424 தனிநபர்களில் 269 நபர்கள் மீதான தடைகளை விலக்கியுள்ளதாக சிறிலாங்கவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.

சிறிலங்காவால் தேடப்படும் நபர்களில் ஏழு பேர் இந்தியாவில் ஒளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது சிங்களவரான கஜவீர மற்றும் தமிழர்களான சிவஞானசுந்தரம் சிவகரன், ஜெமினி என அழைக்கப்படும் அகநிலா, கபில் மாஸ்ரர் என அழைக்கப்படும் சுரேஸ், இராஜேந்திரன் மூர்த்தி, வேலுப்பிள்ளை ரேவதன், விக்னேஸ்வரன் பரமேஸ்வரி ஆகிய ஏழு பேருமே இந்தியாவில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறிசேன அரசாங்கத்தின் கீழ், தமிழர்களும் தமிழர் அமைப்புக்களும் மீளிணக்கப்பாடு தொடர்பான தமது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை நிச்சயம் பெற்றுள்ளனர். இவர்களின் எண்ணங்கள் நிறைவேற்றப்படுவதற்கான நேர்மையான முயற்சி இடம்பெறுவதாக தமிழ் மக்களுக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய மீளிணக்கப்பாடானது மந்தகதியை அடையலாம் என்கின்ற அச்சமும் நிலவுகிறது. ஏனெனில் இந்த நடவடிக்கைகள் வெளியுறவு அமைச்சாலேயே வழிநடத்தப்படுகிறது. உண்மையில் இவை நீதி அமைச்சினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

மீளிணக்கப்பாட்டு நடவடிக்கைகளின் உரிமம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதே.

ஆனால், சிக்கலுக்குரிய பல்வேறு விடயங்களை வேறுபட்ட திசைகளில் இழுத்துச் செல்லும் சிறிலங்காவின் தேசிய அரசாங்கமானது இராணுவ வெற்றியையும் இராணுவத்தினரின் மனவுறுதியையும் ஆபத்திற்கு உள்ளாக்காது மீளிணக்கப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *