மேலும்

கோத்தாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் சிக்கினார்

maj. gen.gamini jayasundara - mahinda (1)சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, அதிபர் ஆணைக்குழு முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர மீது காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரிய மோசடிகள், ஊழல்கள், அரச வளங்களின் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிபர் ஆணைக்குழுவின் செயலர்,  லசிலி டி சில்வாவே, மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

கடந்த அதிபர் தேர்தலின் போது, ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் பணியாளர்களை தேர்தல் பரப்புரை பணிகளில் ஈடுபடுத்தியது தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக பாரிய மோசடிகள், ஊழல்கள், அரச வளங்களின் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிபர் ஆணைக்குழுவினால், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விசாரணைகளின் போது, சாட்சியமளித்த ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் முகாமையாளரான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர, தமது நிறுவனப் பணியாளர்கள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்று மறுத்து சாட்சியம் அளித்திருந்தார்.

maj. gen.gamini jayasundara - mahinda (2)

ஆனால், அதே நிறுவனத்தின், கணக்காளரான லெப்.கேணல் காமினி சில்வா, தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தப்பட்ட லக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் பணியாளர்களின் உணவு மற்றும் குடிநீருக்காக ஆறரை இலட்சம் ரூபா செலவிடப்பட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தார்.

இதையடுத்து, மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, கோத்தாபய ராஜபக்ச மீது தாம் அதிக மதிப்பு வைத்திருப்பதாகவும் அவரைப் பாதுகாக்கவே பொய்ச்சாட்சியம் அளித்ததாகவும், அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில், இவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதென ஆணைக்குழு கடந்த வாரம் முடிவு செய்திருந்தது.

இதன் அடிப்படையிலேயே நேற்று மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *