மேலும்

ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் – கூட்டமைப்பு

samantha-tnaஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

samantha-tnasamantha-tna-meet

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்,

“ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருடனான இன்றைய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

பேச வேண்டிய எல்லா விடயங்கள் தொடர்பாகவும் பேசியுள்ளோம்.

எமது மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக, குறிப்பாக இராணுவ மயமாக்கம், காணி, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு, புனர்வாழ்வு, வீட்டு வசதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அவருக்கு விளக்கமளித்துள்ளோம்.

முக்கியமாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அதற்கு, அமெரிக்காவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் தமது கடமைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும், என்றும் கேட்டுள்ளோம்.

அவர்களின் உதவி தொடர்ந்தும் எமக்குத் தேவை.

அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேசியுள்ளோம். எதமது மக்கள் இந்த நாட்டில் கெளரவமாக சுயமரியாதையுடனும், உரிமைகளுடனும், வாழக்கூடிய வகையில், தமிழ்ப் பேசும் பிரதேசங்களில், தமிழ்ப் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்.

நியாயமான, நடைமுறைப்படுத்தக் கூடிய, நீடித்து நிலைக்கக் கூடிய, போதிய அதிகாரங்களுடனான தீர்வு- தமிழ்ப் பேசும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

இந்தச் சந்திப்பு மிகவும் திருப்திகரமானது. அவருடைய உதவி எமக்குத் தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறோம்.

வடக்கில் சிறிலங்கா இாணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும்.

அது தமிழ் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாகவும் அவர்களுக்கு கௌரவமற்ற நிலையை ஏற்படுத்துவதாகவும் இருப்பதால், இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அவரிடம் கேட்டுள்ளோம்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *