மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

eu-flagசிறிலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்து,  இராணுவத்தின் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஜனவரி மாதத்தின் பின்னர் மேற்கொண்ட முன்னேற்றங்களை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கிறது.

குறிப்பாக நல்லிணக்க செயற்பாடுகள் அனைத்துலகத்துடனும் ஐ.நாவுடனும் இணைந்து செயற்படும் சிறிலங்காவின் முயற்சியை வரவேற்கிறோம்.

சிறிலங்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயற்படுவதற்கு தற்போது புதிய சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக நல்லிணக்கத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் நல்லாட்சியை ஏற்படுத்துதல் ஊழலை ஒழித்தல், மனித உரிமைகளை ஊக்குவித்தல், சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்துதல், போன்ற விடயங்களை இணைந்து செயற்பட முடியும்.

சிறிலங்காவில் மோதலுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்களுக்கும் மாற்றங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பு நாடுகளும் ஆதரவை தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் சிறிலங்காக்கு உதவிகள் வழங்கப்படும்.

நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் மனித உரிமையையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கிறது.

இந்த தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கியமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டுகின்றது.

சிறிலங்காவில் நிரந்தரமான , அமைதியான எதிர்காலத்தை அடைவதற்கு அனைத்து தரப்புக்களிலிருந்தும் தொடர்ச்சியான அரசியல் தலைமைத்துவம் தேவைப்படுகிறது.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆக்கபூர்வமானதாக பார்க்கிறது.

சட்டத்தின் ஆட்சிக்கும் சமூகங்கள் மத்தியில் நீதித்துறையில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், பொறுப்புக்கூறல் மிகவும் அவசியமாகும்.

மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்கள் என்பவற்றை விசாரிப்பதற்கு பொறிமுறை ஒன்றயை தயாரிக்கவுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கிறது.

வெளிநாட்டு நீதிபதிகள் சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் இந்த செயற்பாட்டில் பங்கேற்பது அனைத்துத் தரப்பினரதும் நம்பகத்தன்மைக்கு ஏதுவாக அமையும்.

எனவே சிறிலங்கா, ஐ.நா மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவது அவசியமாகும்.

மோதலின்போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆராய்வது சிறிலங்கா மக்களை பொறுத்தவரை மிகவும் அவசியமானதாகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் , இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேர்த்தவும், அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாணங்களுக்கு இதயசுத்தியுடன் அதிகாரங்களை பரவலாக்கம் செய்வதே நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பலம் வாய்ந்த முக்கியமான செயற்பாடாக அமையும்.

சிறிலங்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்துகிறது.

சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை ஏறு்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதும், வடக்கில்இராணுவ பிரசன்னத்தை குறைப்பதும், இராணுவம் வசப்படுத்தியுள்ள காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்குவதும் முக்கியமானது என்பதனை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கிறது.

பாலியல் வன்முறை சம்பவங்கள் சித்திரவதைகள் மற்றும் சிறுபான்மையினர் மனித உரிமை காப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் எதிரான சித்திரவதைகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.

அந்த விடயத்தை சிறிலங்கா ஆரோக்கியமாக பார்ப்பதுடன் நிலுவையிலுள்ள விடயங்களை சிறிலங்கா அராசாங்கம் விரைவில் தீர்க்குமென ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது.

சிறிலங்கா ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து களத்திலிருந்து உதவிகளை வழங்கும்.

அது மட்டுமன்றி மீன்பிடி நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக விதிகளை கடைப்பிடிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கிறது. இவற்றை தொடர்ச்சியாக செய்யும்போது மீன் ஏற்றுமதி தடையை நீக்க முடியும்.” என்று தெரிவிக்கப்பட்டுளள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *