மேலும்

திலக் மாரப்பனவின் மறுபக்கம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

tilak-marappanaமுன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச  43வது பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த போது, இந்த விடயத்தில்  பணிவாக நடந்து கொள்ளுமாறு ரணிலுக்கு ஆலோசனை வழங்கியது மாரப்பனவே ஆவார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில்,  உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப் பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

வணக்கத்திற்குரிய சோபித தேரர் நோய்வாய்ப்படுவதற்கு முன்னர், ஊழலில் ஈடுபடும் குற்றவாளிகளை சிறிலங்கா அரசாங்கம் கைதுசெய்யவில்லை என குற்றம் சுமத்தியிருந்தார்.

காலம் கனிந்துள்ள போதிலும் இவ்வாறான குற்றவாளிகளைக் கைதுசெய்யாது அரசாங்கம் நேரத்தை வீண்விரயமாக்குவதாகவும் சோபித தேரர் குற்றம் சுமத்தியிருந்தார்.  சர்ச்சைக்குரிய அவன் கார்ட் குற்றச்சாட்டை விசாரிக்காது அரசாங்கம் அதனை மூடிமறைக்க முற்படுவதாக சோபித தேரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தேரர் தனது கடும் சுகவீனமுற்றிருந்த வேளையில், குறித்த நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சியாக அவன் கார்ட் சர்ச்சையை இல்லாதொழிப்பதற்கான முயற்சியை சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு, அமைச்சர் திலக் மாரப்பன மேற்கொண்டிருந்தார்.

மாரப்பன தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகவேண்டும் என ரணில் மற்றும் மைத்திரி ஆகியோர் வேண்டுகோள் விடுத்தபோது, சோபித தேரர் இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டார்.

மாரப்பன கடந்த திங்கட்கிழமை தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.

இங்கு கூறப்படும் திலக் மாரப்பன என்பவர் யார்?

1994ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியுற்ற பின்னர், டி.பி.விஜயதுங்க அரசாங்கத்தில் சட்டமா அதிபராக இருந்த மாரப்பனவை ஐ.தே.க செயற்குழுவுக்கு ரணில் நியமித்தார்.

ஐ.தே.க செயற்குழு கூட்டத்தில்  ஆரம்ப நாட்களில், மாரப்பனவை நோக்கி ஐ.தே.க உறுப்பினர் ஒருவர் மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.

‘அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நீங்கள் அதிபர் விஜயதுங்கவிற்கு தவறான ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது உண்மையா?’ என ஐ.தே.க உறுப்பினர் மாரப்பனவிடம் வினவியிருந்தார்.

இதற்கு மாரப்பன ஒரு குறும்புச் சிரிப்பைச் சிரித்தவாறு இத்தேர்தல்கள் அனைத்தும் சோதிடத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்

‘எனக்கும் அதிபர் விஜயதுங்கவுக்கும் நன்கு அறிந்த சோதிடர் ஒருவர் இருக்கிறார். பொதுத் தேர்தலை முதலில் நடத்தினால் ஐ.தே.க வெற்றி பெறும் என அச்சோதிடர் அதிபரிடம் வலியுறுத்தினார். இந்த வகையிலேயே அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது’ என மாரப்பன பதிலளித்தார்.

‘ஆனால் நாங்கள் முதலில் பொதுத் தேர்தலை நடத்தியதாலேயே தோல்வியுற்றோம்’ என குறித்த ஐ.தே.க உறுப்பினர் பதிலடி கொடுத்தார்.

‘ஆம்……நாங்கள் முதலில் அதிபர் தேர்தலை நடத்தியிருந்தாலும் அதில் தோல்வியுற்றிருப்போம். எவரும் தலைவிதியை மாற்றமுடியாது’ என மாரப்பன தெரிவித்தார்.

மாரப்பனவின் சோதிட ஆரூடங்களுக்கு முரணாக, ஐ.தே.கவின் அதிபர் வேட்பாளராக ரணிலை நிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் இது தொடர்பாக ரணில் ஏற்கனவே ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராக சந்திரிகா போட்டியிடாவிட்டிருந்தால், விஜயதுங்கவின் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார்.  அதன்பின்னர் 1994ல் சிறிலங்காவின் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்காது.

1994ல் சோதிடக் கணிப்பீடுகளின் பிரகாரம் விஜயதுங்கவைத் தவறாக வழிநடத்தி ஐ.தே.க வை ஆட்சியிலிருந்து இறக்குவதற்குக் காரணமாக இருந்தவர் தான் மாரப்பன.

1995ல் ஐ.தே.க செயற்குழுவில் மாரப்பன அங்கம் வகித்த போதிலும் இவர் ஒருபோதும் சந்திரிகா அரசாங்கத்தின் விமர்சனத்திற்கு உட்படவில்லை. 2001ல் சந்திரிகா அரசாங்கத்திற்கு எதிராக “ஜனபல மெஹியும“ என்ற பரப்புரையை காமினி அத்துக்கொறள மேற்கொண்ட போது, சந்திரிகாவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஐ.தே.க  அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை திலக் மாரப்பன வலியுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சராக மாரப்பனவை நியமிப்பதென ரணில் தீர்மானித்த போது, இது தொடர்பில் காமினி அத்துகோரள ஆத்திரமடைந்தார். இவர் ரணிலைச் சந்தித்து, இந்த தீர்மானத்தை எதிர்த்திருந்தார்.

மக்களின் நாடித்துடிப்பை அறியாத ஒருவருக்கு இத்தகைய உயர்ந்த, பொறுப்பு வாய்ந்த பதவி வழங்கப்படக் கூடாது என காமினி அத்துகோரள தெரிவித்திருந்தார். மாரப்பனவுக்கு இந்த உயர் பதவியை வழங்குவதன் மூலம் ஐ.தே.க அரசாங்கத்தை அழிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் அவர் ரணிலை எச்சரித்திருந்தார்.

காமினி அத்துகோரள திடீர் மரணம் அடைந்ததன் பின்னர்,  அவரிடம் இருந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சுப் பதவியை மாரப்பனவிடம் கையளித்தார் ரணில்.

போக்குவரத்து மற்றும் தொடருந்து சேவைப் பணியாளர்கள் தமக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட போது சோதிடக் கணிப்புக்கள் மீது ரணில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டது.

இதேவேளையில் மாரப்பன பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

இவர் ஒருபோதும் எதிர்க்கட்சியால் ரணில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட ‘புலிமுத்திரையை’ நீக்குவதற்கான எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

2004ல், மாரப்பனவை ஐதேவின் தேசியப் பட்டியல் வேட்பாளராக ரணில் நிறுத்தவில்லை. ரணில் அரசாங்கம் தோல்வியுறுவதற்கு மாரப்பனவின் திறனற்ற நடவடிக்கைகள் வழிவகுத்ததே இதற்குக் காரணம்.

2010இலும் மாரப்பனவிற்கு ரணில் தேசியப் பட்டியலில் இடம் ஒதுக்கவில்லை. அப்போதைய பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வாவிற்கு எதிராக ஐ.தே.க வால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் குழப்பியவர் மாரப்பனவே ஆவார்.

2001ல் ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைக்கும் தான் துணைபோக மாட்டேன் என சரத் சில்வா வாக்குறுதி வழங்கிய போதிலும் அதனை அவர் நிறைவேற்றத் தவறினார்.

எதுஎவ்வாறெனினும், ரணில் அரசாங்கத்தின் கீழிருந்த மூன்று அமைச்சுக்களை சந்திரிகா  தன்வசமாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போது அது சட்ட ரீதியானது எனக்கூறி சந்திரிகாவிற்கு ஆதரவளித்தார் சரத் என் சில்வா.

இக்குற்றச்சாட்டிலிருந்து மாரப்பன நழுவினார். தனது தொழில் சார்ந்த நலன்களைப் பாதுகாத்துக் கொள்கின்ற ஒரு சட்டவாளராகவே மாரப்பன காணப்படுகிறார். இதன்காரணமாகவே அப்போதைய பிரதம நீதியரசரைப் புண்படுத்த இவர் விரும்பவில்லை.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச 2013ல் 43வது பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த போது, இந்த விடயத்தில்  பணிவாக நடந்து கொள்ளுமாறு ரணிலுக்கு ஆலோசனை வழங்கியது மாரப்பனவே ஆவார்.

இதையடுத்து. தனது சொந்தத் தெரிவின் அடிப்படையில் பிரதம நீதியரசராக தனக்கு விசுவாசமான மோகன் பீரிசை நியமித்தார் மகிந்த ராஜபக்ச. மோகன் பீரிஸ் மாரப்பனவின் நெருங்கிய நண்பராவார்.

2004ல் தான் செய்த பாவத்தைப் போக்குவதற்காக இந்தத்தடவை ரணில் விக்கிரமசிங்க தேசியப் பட்டியலில் மாரப்பனவுக்கு இடம் ஒதுக்கியிருந்திருக்கலாம்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர், பிரதமரின் ஆலோசகராக மாரப்பனவை ரணில் நியமித்திருந்தார். இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னர், அவன் கார்ட்டின் பிரதம ஆலோசகர் பதவியைப் பொறுப்பேற்றார்.

பிரதமர் ரணிலின் ஆலோசகராக உள்ள மாரப்பனவைத் தனது சட்ட ஆலோசகராக ஏற்றுக்கொள்வதற்கு அவன் கார்ட்டின் தலைவர் நிசங்க சேனாதிபதி சம்மதித்தார்.

தேசிய அரசாங்கத்தின் தேசிய நிறைவேற்று ஆணைக்குழுவின் சந்திப்பு இடம்பெற்ற போது, நீதிமன்றால் கையகப்படுத்தப்பட்ட சேனாதிபதியின் கடவுச்சீட்டை மீளப்பெற்றுக் கொடுப்பதில் சிறிலங்காவின் அமைச்சர்கள் சிலர் தொடர்புபட்டுள்ளனரா என ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசநாயக்க வினவியிருந்தார்.

இதில் மாரப்பன தொடர்புபட்டிருப்பதாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் பிரதமரின் ஆலோசகர் பதவியிலிருந்து மாரப்பன விலகியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காவற்துறையினரைக் கட்டுப்படுத்துகின்ற சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக மாரப்பன நியமிக்கப்பட்ட போது, அவன் கார்ட் சர்ச்சை தொடர்பாக காவற்துறையினர் விசாரித்த போது அநுரா குமார மட்டுமல்ல, முழு நாடுமே இந்த விவகாரத்தின் மீது கவனத்தைக் குவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *