மேலும்

சோபித தேரரின் இறுதி விருப்பம் மீறப்பட்டதா? – பரபரப்பை ஏற்படுத்திய காணொளிக்கு சங்கநாயக்கர் பதில்

Ven. Meegahatenne Chandrasiri Theraமறைந்த வண.மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிச் சடங்கு, அவரது இறுதி விருப்பத்துக்கு அமைய இடம்பெறவில்லை என்று, அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதற்கான சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாக சிறிஜெயவர்த்தனபுர மகா சங்கநாயக்கர் வண. மீகஹதென்னே, சந்திரசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

மரணத்துக்குப் பின்னர், உடலில் பயனுள்ள பாகங்களை தானமாக அளித்து விட்டு, புதைத்து விடவேண்டும் என்றும், இறுதி நிகழ்வுகள் 24 மணித்தியாலங்களுக்குள் அதிக செலவுகளின்றி- எவருக்கும் இடையூறுகளை ஏற்படுத்தாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் சோபித தேரர் கருத்து வெளியிட்ட காணொளிக் காட்சிகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இதுகுறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, சிறிஜெயவர்த்தனபுர மகா சங்கநாயக்கர் வண. மீகஹதென்னே சந்திரசிறி தேரர்,

”சோபித தேரரின் இறுதி விருப்பத்துக்கமைய அவரது இறுதி நிகழ்வுகள் நடத்தப்படவில்லை என்று சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்புகின்றனர்.

அவ்வப்போது தனது உரைகளில் இதகுறித்து சில கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும், தனது இறுதிச் சடங்கு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று சோபித தேரர் எழுத்து மூலமாக எதையும் எழுதி வைக்கவில்லை.

அரசியல் ஆதாயத்துடன் தான் முழு அரச மரியாதைகளுடன் அவரது இறுதி நிகழ்வை அரசாங்கம் நடத்துவதாகவும், சோபித தேரரின் இறுதி விருப்பத்துக்கமைய அவரது உடல் 24 மணித்தியாலங்களுக்குள் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

அவ்வாறாயின் சிங்கப்பூரில் தான் இறுதிச்சடங்கை செய்திருக்க வேண்டும்.

அவர் எழுத்துமூலமாக எந்த விருப்பத்தையும் வெளியிட்டிருக்காத நிலையில்,அவரது நண்பர்களும், சீடர்களுமே எவ்வாறு இறுதி நிகழ்வை நடத்துவதென் தீர்மானிக்க வேண்டியிருந்தது.

சமூக நலனுக்காக பாடுபட்ட அவரது உயிர் பிரிந்தபோதும் அவரது உடல் இலங்கையர்களுக்கு சொந்தமானது. இதற்கு அரச மரியாதை வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை.

பெளத்தர்களின் மனதை நோகடிக்காத வகையில் விசேட ஏற்பாடுகளுக்கு கட்டுப்பட்டு மறைந்த சோபித தேரருக்கு கெளரவமளிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *