மேலும்

இன்றைய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அனல்பறக்கும்?

cabinetஅவன் கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று கூட்டப்படவுள்ள சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், அனல் பறக்கும்,  வாக்குவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய அவன்கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்று, சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை மற்றும், அதற்கு ஆதரவாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச வெளியிட்ட கருத்து என்பன சிறிலங்கா அரசாங்கத்துக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

அவன் கார்ட் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்ளும், அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆராய, சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை நடத்துவதாக சிறிலங்கா அதிபர் உறுதியளித்திருந்தார்.

இதற்கமைய, இன்று காலை 10 மணியளவில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், திலக் மாரப்பன மற்றும், விஜேதாச ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றும், இதனால் அமைச்சரவைக் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சோபித தேரரின் மறைவினால், இன்று காலை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுமா என்பதில் சந்தேகமும் நிலவுகிறது.

சோபித தேரரின் மறைவினால் இன்றைய சிறப்பு அமைச்சரவைக் கூட்டம், பிற்போடப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, இது தொடர்பாக எந்த தகவலும் தமக்குக் கிடைக்கவில்லை என்று அமைச்சர்கள் பலரும் நேற்றிரவு தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவும், அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான நநிகழ்ச்சி நிரலில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி தாம் அறியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *