மேலும்

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விவகாரம் – சிறிலங்கா அமைச்சரவைக்குள் பிளவு, கடும் வாக்குவாதம்

cabinetஅவன்ட் கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவும், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள், சிறிலங்கா அரசாங்கத்துக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

காலித் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த ஆயுதங்கள் சட்டபூர்வமானவையே என்றும், அதில் எந்த தவறும் இடம்பெறவில்லை என்றும், அமைச்சர் திலக் மாரப்பன நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அதுபோல, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், இந்த விவகாரத்தில் எந்த தவறும் இல்லை என்றும், இதனை அடிப்படையாக வைத்து கோத்தாபய ராஜபக்சவை கைது செய்ய முயன்ற போது தாமே அதனைத் தடுத்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் நேற்றுக் காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமைச்சரவைக் கூட்டத்தில் திலக் மாரப்பனவின் அறிக்கையை கடுமையாகச் சாடிய, அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்கவும், ராஜித சேனாரத்னவும், இது தொடர்பாக சரியான விசாரணைகள் நடத்தப்படாவிடின் தாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாகவும் எச்சரித்தனர்.

அவன்ட் கார்ட் நிறுவனத்துக்கு சட்ட ஆலோசனையை வழங்கிய திலக் மாரப்பன, அந்த நிறுவனத்துக்கு சார்பாகச் செயற்படுவதாக, அமைச்சர்கள் ராஜித சேனாரத்னவும், சம்பிக்க ரணவக்கவும் கடுமையாக குற்றம்சாட்டினர்.

”தமது தவறை மறைக்க பல்வேறு தரப்பினருக்கு இந்த நிறுவனம் இலஞ்சம் வழங்க முயற்சித்திருக்கிறது.

நாம் எல்லோரும் இணைந்து அரசாங்கத்தை அமைத்திருக்கிறோம். உயிரைப் பணயம் வைத்து தான் இதனைச் செய்தோம்.

மைத்திரிபால சிறிசேன அதிபர் தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் நாம் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்திருக்கும்.

இந்த விசாரணைகள் தோல்வியில் முடிந்தால் நாம் சமூகத்தின் முன் முகம் கொடுக்க முடியாது.” என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன காட்டமாக கூறினார்.

இதற்கு திலக் மாரப்பன தாம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கைக்கு அமையவே கருத்து வெளியிட்டதாக நியாயப்படுத்தினார்.

இதனால் அமைச்சர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சிறிலங்கா அதிபர் தலையிட்டு, இதுகுறித்து ஆளும்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று கூறி பிரச்சனையை தற்காலிகமாக தணித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *