மேலும்

இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது தாக்குதல்

mk-narayanan (1)இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சென்னையில் நேற்றிரவு தமிழ் இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சங்கீத சபாவில், நேற்று, ‘தி ஹிந்து’ஆங்கில நாளிதழின் ஆய்வு அமைப்பான, “அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில், ‘இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கலந்து கொண்டிருந்தார்.

நேற்றிரவு 9 மணியளவில்,இந்தக் கருத்தரங்கு முடிந்து, எம்.கே.நாராயணன், மேடையில் இருந்து இறங்கி, அரங்கில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர், அவரைச் சரமாரியாகத் தாக்கினார்.

“எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்” என்று கூறிய படியே அவர் தாக்குதலில் ஈடுபட்டார்.

எம்.கே. நாராயணனின் தலையின் பின்புறத்திலும், தோள்பட்டையிலும், செருப்படிகள் விழுந்தன. அந்தச் செருப்பில், ஆணி பதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

mk-narayanan (2)

நிகழ்வு மேடையில், எம்.கே.நாராயணன், சந்திரஹாசன்

prabahkaran-tn

எம்.கே. நாராயணனைச் செருப்பால் தாக்கிய பிரபாகரன்

உடனடியாக, எம்.கே. நாராயணனை அருகில் இருந்து முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர், காப்பாற்றி, மேலதிக தாக்குதலைத் தடுத்தார்.

அதற்கிடையில், அங்கிருந்து காவல்துறையினர், அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

அதேவேளை, எம்.கே. நாராயணன் மீது தாக்குதல் நடத்திய இளைஞரைக் கைது செய்த ராயப்பேட்டை காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதன் போது, அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது35)  என்பது தெரியவந்தது. எனினும், அவர், அரங்கில் நுழைய, ராகவன் என்ற பெயரில் பதிவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தான் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை திசை திருப்பியவர் எம்.கே.நாராயணன் தான் என்றும் அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றும் பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தியாவின் உள்ளகப் புலனாய்வுத்துறையின் தலைவராகப் பணியாற்றிய எம்.கே.நாராயணன், 2005ஆம் ஆண்டு தொடக்கம், 2010ஆம் ஆண்டு வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார்.

அந்தக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா படைகள் மேற்கொண்ட இறுதிக்கட்டப் போருக்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்த, மூவரணியில் ஒருவராக இவர் விளங்கியிருந்தார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பின்னர், இவர் மேற்கு வங்க ஆளுனராகப் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *