மேலும்

யுத்தத்திற்குப் பின்னரான யாழ். நகரம்: வாய்ப்புக்களும் சவால்களும் – கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்

JAFFNAஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி நேற்று அக்டோபர்  31 ஆம் நாள் உலக நகரங்களின் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யுத்தத்திற்குப்  பின்னரான யாழ்.நகரத்தினை மையப்படுத்திய  இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது.

இக்கட்டுiரையானது இங்கிலாந்தின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் மற்றும் கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஆய்வு மையம் என்பவற்றின் நிதியுதவியுடன் இலங்கையின் இனக்கற்கைகளுக்கான சர்வதேச ஆய்வு மையமானது“விருப்பமற்ற மீள்குடியேற்றம்: நகரப் பிரதேசங்களிடையே காணப்படும் சமத்துவமின்மையும் வறுமையும்”என்னும் தலைப்பில் மேற்கொண்டுள்ள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இவ்வாய்வின் குழுத்தலைவராக கலாநிதி ரஜித் லக்ஸ்மன் அவர்களும் சிரேஷ்ட ஆய்வாளர்களாக கலாநிதி கோ. அமிர்தலிங்கம் மற்றும் திரு.தனேஸ்  ஜயதிலக அவர்களும் ஆய்வு உதவியாளர்களாக திரு ந. குருசாந், திரு ம. விஜேந்திரன்  மற்றும் திரு செ. அமலதாஸ் ஆகியோரும் பணிபுரிகின்றனர்.

இவ்வாய்வுக்காக தொளாயிரம் குடும்பங்களைப் பற்றிய தகவல்கள் யாழ் .மாநகரசபைக்குள்  உள்ளடங்கும் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர்  பிரதேசசெயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட முப்பத்தியெட்டு கிராமசேவகர் பிரிவுகளில் கருத்தாய்வு மற்றும் விரிவான நேர்முகக் கலந்துரையாடல்கள் மூலம் திரட்டப்பட்டன.

1983 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாண மாவட்டமே யுத்தத்தின் மையப் பிரதேசமாக விளங்கியது. யுத்தத்தினால் மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாரிய சவால்களைச் தொடர்ந்தும் சந்தித்தபோதிலும் 1990 ஆண்டிலிருந்து தொடங்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இடம்பெயர்வு 2009 ஆண்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது உச்சக்கட்டத்தினை எட்டியபோதும் இக்காலகட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு கட்டங்களில் மீளக்குடியேற்றப்பட்டமையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆயினும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்து குடியேற்றங்களுக்குத் தடையாகவிருந்த உயர்பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு யாழ். நகரத்தை அண்மித்த கரையோரப்பகுதிகள் அனைத்திலும் மக்கள் குடியேற்றம் பெருமளவிற்கு நிறைவுபெற்று விட்டது.

யுத்தம் முடிவடைந்து மீள் குடியேற்றம் முடிவுக்கட்டத்தினை நெருங்கினாலும் யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகளால் ஏற்பட்ட துன்பங்களும் சுமைகளும் இன்றும் மக்கள் மனதைவிட்டு நீங்காமல் வடுக்களாகவே உள்ளன.

இவ்வாய்வானது யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகளால் ஏற்பட்ட வாழ்வாதாரப் பிரச்சினைகள், கல்வி நிலைமைகள், இளைஞர்களின் நடத்தை, வன்முறையின் பருமன் மற்றும் போக்கு என்பன உள்ளடங்கலாக பல்வேறுபட்ட தகவல்களை விஞ்ஞான ரீதியாக வெளிக்கொணர முற்படுகின்றது.

யுத்தகாலத்தில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.  ஆய்வுக்குட்படுத்தப்பட்ட யாழ்.நகரையொட்டிய கரையோரப் பிரதேசத்தின் வாழ்வாதாரம் மீன்பிடியினை மையமாகக் கொண்டிருந்தமையினால்  உயர்பாதுகாப்பு வலய அமுலாக்கம், கடல்வலயத் தடைச்சட்டங்கள், மீனவர்களின் உயிரிழப்புக்கள், நவீனமீன்பிடிக் கருவிகளைப் பயன்படுத்த முடியாமை, நிச்சயமற்றதன்மைகள், ஏற்றுமதி வாய்ப்புக்கள் இன்மை போன்ற காரணங்களினால் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் யுத்தத்திற்குப் பின்னர் நிலைமைகள் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. உயர்பாதுகாப்பு வலயம்,மற்றும் கடல் வலயத் தடைச்சட்டம் என்பன நீக்கப்பட்டு விட்டன. நவீன மீன்பிடிக் கருவிகளைக் கொள்வனவு செய்வதிலோ அல்லது மீன்களை நாட்டின் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்வதிலோ எவ்வித தடைகளும் காணப்படவில்லை.

ஆனாலும் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தில் இன்னும் பிரச்சினைகள் இருப்பதாகவே குறிப்பிடுகின்றனர். கடலில் மீன்பிடி வளம் பெருமளவுக்கு குறைந்து விட்டதாகவும் சுனாமிக்குப் பின்னர் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய மீனவர்களினதும் ஏனைய பிரதேசத்து உள்ளுர் மீனவர்களினதும் அத்துமீறல்கள் தமது வாழ்வாதாரத்தினை அதிகம் பாதிப்பதாக ஆய்வுப் பிரதேச மீனவர்கள் குறைப்படுகின்றனர்.  மீன்பிடியும் அதனுடன் தொடர்புடைய வருமானமும் குறைந்து வருவதால் குறிப்பாக இளைஞர்கள் புதிய தொழில்களை தேடிச் செல்வதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆரம்பகாலம் தொட்டு யாழ். மாவட்டம் கல்வித்துறை வளர்ச்சிக்கு பெயர் பெற்றதாகும்.  ஆனால் யுத்தகாலத்தில்நிச்சயமற்றதன்மை,போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், ஆசிரியர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புலம்பெயர்வு, வளப்பற்றாக்குறைகள் போன்ற காரணங்களினால் யாழ். மாவட்டத்தின் கல்விநிலைமை மோசமடைந்தது.

யுத்தகாலத்தில் மாணவர்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்ததுடன் நிலைமை படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றது.

குறிப்பாக நிச்சயமற்ற நிலைமை நீங்கி மாணவர்கள் விரும்பிய பாடசலைகள் மற்றும் பகுதிநேர வகுப்புக்களுக்குச் சென்று அச்சமின்றி கல்விகற்கக் கூடியநிலை தற்போது காணப்படுகின்றது.  ஆனால் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகஇளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் முடிவடைந்து போக்குவரத்துத் தடைகள் யாவும் நீங்கிய பின்னர் பல புதிய வாய்ப்புக்கள் உருவாகிய போதும் யுத்தகாலத்தில் தொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்வதில் யாழ்.மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்புக்கள்  காணப்படாமையினால் தற்போது தொழில் தகைமைசார் வேலைகளுக்கு வெளிமாவட்டங்களைச் சோந்தவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் தமக்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும் சிலர் குறைப்படுகின்றனர்.

அத்துடன் நாட்டின் தென் பகுதியிலிருந்துபொருட்கள் சேவைகள் உள்ளுர் சந்தைக்கு அதிகம் வருவதால் தமக்குரிய வாய்ப்புக்கள் பாதிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள்  தெரிவிப்பதுடன் அது உள்ளூர் வேலைவாய்ப்புக்களிலும் தாக்கம் செலுத்துவதாக பலர் குறிப்பிடுகின்றனர்.

புலம்பெயர்வு என்பது யாழ். மாவட்டத்தினைப் பொறுத்து பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து 1981 ஆம் ஆண்டு வரை இலங்கையில் கொழும்புப் பெரும்பாக நகரப்பகுதிக்கு அடுத்தபடியாக சனத்தொகை ரீதியில் யாழ்ப்பாண நகரமே  இரண்டாவது இடத்தில் இருந்தது.

ஆனால் 2010 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண நகரத்தின் தரவரிசை பதின்னாகாவது இடத்திற்குபின்தள்ளப்பட்டுள்ளது. யுத்தத்தினால் ஏற்பட்ட புலம்பெயர்வே இதற்குரிய பிரதான காரணியாகும்.

புலம்பெயர்வினால் ஏற்பட்ட சனத்தொகை வீழ்ச்சியினால் யாழ். நகரமும் முழு மாவட்டமும் பின்னடைவினைச் சந்தித்த போதும் யுத்தகாலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதில் புலம்பெயர்ந்தோர் தமது உறவினர்களுக்கு அனுப்பிய பணம் மிகுந்த பங்களிப்பினை வழங்கியுள்ளது.

யுத்தகாலத்தில் புலம்பெயர்ந்தோரின் பணம் பெரும்பாலும் நுகர்வுத் தேவைக்கும் திருமணங்களுக்கும் தமது உறவினர்களை வெளிநாடுகளுக்கு அழைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.  யுத்தம் முடிந்தபின் புலம்பெயர்ந்தோரின் பணம் முதலீட்டுத் தேவைகளுக்கும் சமூகத்தின் கல்வி உள்ளிட்ட ஏனைய சமூகநலன்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் புலம்பெயர்ந்தோர் தமது உறவுகளுக்கு அனுப்பும் பணம் இங்குள்ளவர்களை சோம்பேறிகளாக்கி உழைப்பின் அருமை தெரியாமல் இளைஞர்கள் பிழையான வழிகளில் செல்லவும் வழிவகுக்கின்றது என்னும் குற்றச்சாட்டும் எழாமலில்லை.

யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின் பின்னர் அளவுக்கதிகமான வங்கிக் கடன் மற்றும் லீசிங் வசதிகள் பிரச்சினைக்குரிய விடயங்களாகவே மக்களால் அடையாளங்காணப்படுகின்றன. மக்கள் அளவுக்கதிகமாக கடனாளிகளாக ஆகிக் கொண்டிருப்பதாகவே தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி 2014 ஆம் ஆண்டில் வங்கி அடர்த்தியானது (தலா 100,000 பேருக்கான வங்கிகளின் எண்ணிக்கை) மேல் மாகாணத்தில் 21.1 வீதமாகக் காணப்படுகையில் வடமாகாணத்தில்  21.6 வீதமாக காணப்படுகின்றது.

இதன்மூலம் மேல் மாகாணத்தினைவிட நாட்டிலேயே வங்கியடர்த்தி கூடிய மாகாணமாக வடமாகாணம் திகழ்கிறது.

வடமாகாணத்திலேயே சனத்தொகையிலும் நகர மயமாக்கத்திலும் யாழ். மாவட்டம் முக்கியத்துவம் பெறுவதால் அளவுக்கதிகமான வங்கிச்சேவைகளின் விரிவாக்கம் யாழ்.நகர மக்களால் பிரச்சினைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றது.

சமூகமும் சமூகஉறவுகளும்  மிகவேகமாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. கடன்கள் மற்றும் சீட்டுக்கள் பாரிய பிரச்சினைகளாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. கடன்கள் மற்றும் சீட்டுக்கள் காரணமாக நம்பிக்கைத் துரோகங்களும் ஏமாற்றுதல்களும் சமூக உறவுகளை சீர்குலைக்கின்றன.

யுத்தத்திற்குப் பின்னர் இளைஞர்களின் நடத்தையில் பாரிய மாற்றங்கள் காணப்படுகின்றன. சில இளைஞர்களின் மதுப்பாவனை,மற்றும் போதைவஸ்துக்கு அடிமையாதல் அதனுடன் கூடிய திருட்டுக்கள், குழுச் சண்டைகள் என்பன சமூக ஒழுக்கத்திற்கு பங்கம் விளைவிக்கின்றன.

சினிமா மோகம், இணைய வசதியுடன் கூடிய செல்போன்களின் பாவனை அதிகரிப்பு இளைஞர் குழாத்தினை மிகமோசமாகப் பாதிப்பதாக பெற்றோர்களுக்கும் சமூகத்தலைவர்களும் குறிப்பிடுகின்றனர்.

முன்னைய ஆட்சிக் காலத்தில் மதுப்பாவனை மற்றும் போதைவஸ்துக்கள் என்பனவற்றுக்கு அடிமையாகி திருட்டுக்கள் மற்றும் குழுச்சண்டைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் சில பொலிஸ்  மற்றும் இராணுவ உத்தியோகத்தர்களுடன் தொடர்பு இருந்ததாகவும் ஆய்வுப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்த சில மணித்தியாலங்களில் அவர்கள் வெளியில் வந்தசந்தர்ப்பங்களையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் 2015, ஜனவரியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதிலிருந்து இந்நிலைமை பாரியளவுக்கு நீங்கி சாதகமான மாற்றங்கள் தெரிவாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு யுத்தமுடிவானது யாழ். நகர மக்களுக்கும் ஒட்டுமொத்த யாழ். மாவட்ட மக்களுக்கும் பாரிய வாய்ப்புக்களை திறந்து விட்டிருந்தபோதிலும் அவ்வாய்ப்புக்களுடன் பல சவால்களும் சேர்ந்தே காணப்படுகின்றன.

வாய்ப்புக்களை உச்சப்படுத்துவதிலும் சவால்களை வெற்றி கொள்வதிலுமே யாழ். நகரத்தினதும் மாவட்டத்தினதும் எதிர்கால சுபீட்சம் தங்கியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

– கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்

கொழும்புப் பல்கலைக்கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *