மேலும்

மெக்சிகோ மாநாட்டில் சிறிலங்கா தொடர்பாக சமந்தா பவர் நிகழ்த்திய உரை

Samantha_Powerசிறிலங்கா அரசாங்கம் சிவில் அமைப்புக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், இது சிறிலங்கா அரசாங்கத்தின் இயங்கியல் மாற்றத்திற்கு மிகவும் அவசியமானது என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் நடைபெறும், திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பின் பூகோள உச்சி மாநாட்டில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சமந்தா பவரின் இந்த உரையின் நான்கில் ஒரு பங்கு சிறிலங்காவில் ஏற்பட்ட மாற்றத்தை விபரிப்பதாக அமைந்திருந்தது.

இந்த மாநாட்டில், உரையாற்றிய சமந்தா பவர், சிறிலங்கா தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் முழுமையாக தரப்படுகிறது.

“இறுதியாக உதாரணம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இது மிகவும் பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.

ஜனவரி 2015ல், புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் இலங்கையர்கள் வாக்களித்தனர்.

சிறிலங்காவில் முன்னர் ஆட்சியில் இருந்த ராஜபக்ச அரசாங்கம் மக்கள் மத்தியில் பிரிவினை மற்றும் பீதியைப் பரப்பியிருந்தது.

இதனால் அந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

2015 அதிபர் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக சிறிசேன களமிறக்கப்பட்டார். இவர் நாட்டில் ஊழலை ஒழிப்பேன் எனவும் மீளிணக்கப்பாட்டை நிலைநிறுத்துவேன் எனவும் தனது தேர்தல் பரப்புரையில் உறுதியளித்திருந்தார்.

இதன்காரணமாகவே சிறிலங்கா வாழ் மக்கள் தமது புதிய அதிபராக சிறிசேனவைத் தெரிவு செய்தனர்.

தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிர கரிசனை கொண்டுள்ளதாக புதிய அரசாங்கம் காண்பித்தது.

மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான சித்திரவதைகளை தடுத்து நிறுத்துவதற்கான பணிகளை புதிய அரசாங்கம் மேற்கொள்ளத் தொடங்கியது.

அத்துடன் நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான பணியையும் மேற்கொண்டது. இதற்கான விளைவு உடனடியாக ஏற்பட்டது.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தலைமறைவாக இருந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் மீண்டும் தனது பணியை ஆற்றத் தொடங்கினார்.

தான் என்ன செய்கிறேன் என்பது, மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் உற்றுநோக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகவும் இவர் தெரிவித்தார்.

இதேபோன்று உடனுக்குடன் தகவல்களை வெளியிட்டு வந்த பத்திரிகையாளர் ஒருவரும் மகிந்த அரசாங்கத்தின் ஆட்சியில் அச்சுறுத்தப்பட்டிருந்தார். ‘இவ்வாறான அச்சுறுத்தல்கள் எதுவும் தற்போது எனக்கு இல்லை’ என குறித்த பத்திரிகையாளர் கூறுகிறார்.

மற்றவர்களது விமர்சனங்களிலிருந்து விலகிக் கொள்வதும், பொது வளங்களைச் சூறையாடாமல் இருப்பது மட்டுமன்றி, உண்மையில் ஒரு நாட்டின் திறந்த அரசாங்கம் என்பது தனது நாட்டின் குடிமக்களை மேம்படுத்துவதற்கான வழிகளையும் கண்டறிந்து செயற்படுத்த வேண்டும்.

அதாவது இதன் மூலம் மட்டுமே ஒரு நாட்டின் குடிமக்கள் தமக்கு விருப்பமான அரசாங்கத்தை வடிவமைத்துக் கொள்வதற்கு தமது அளப்பரிய சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆகவே சிறிசேனவின் அரசாங்கமும் இவற்றைக் கடைப்பிடிக்குமாறு உந்தப்படுகிறது.

இதேவேளையில், சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றில் இடம்பெற்ற இருண்ட மற்றும் மிகவும் வலிதோய்ந்த அத்தியாயங்களுடன் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முரண்படுகிறது.

சிறிசேன அரசாங்கமானது நாட்டில் பாரியளவில் மீளாய்வை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.  தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தற்போது நாடாளுமன்றில் விவாதிக்கப்படுகிறது.

நாட்டில் ஓரங்கட்டப்பட்ட சமூகத்தவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான பணிகளை தற்போது சிறிலங்காவின் தகவல் தொழினுட்ப அமைப்பு மேற்கொள்கிறது.

ஏனெனில் சிறிலங்காவின் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் தம்மைப் பற்றிய தகவல்களைப் பரிமாறுவதற்குமான தொடர்பாடல் வசதிகளைக் கொண்டிருக்கவில்லை.

சிறிலங்காவின் பல்வேறு சட்டங்கள் நிலைமாற்றத்தக்கதாகக் காணப்படவில்லை.

ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மாற்றியமைப்பதற்கான இயலுமையை தனது குடிமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் உதவமுடியும்.

இந்த முயற்சியில் பல்வேறு சவால்களுக்கு சிறிலங்கா முகங்கொடுக்கிறது. இது தொடர்பில் சிறிலங்கா பல்வேறு அனுபவங்களைப் பெற்றுள்ளது.

சிறிலங்காவில் இழைக்கப்பட்ட தவறுகள் மற்றும் ஊழல்களை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இவ்வாறான மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா பொறுப்புக்கூறுவதுடன், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதன் குடிமக்கள் தொடர்ந்தும் உறுதியுடன் செயற்பட வேண்டும் என்பதையே சிறிலங்காவில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சுட்டிநிற்கின்றன.

அத்துடன்   சிறிலங்காவின் தலைவர்கள் உண்மையில் மக்களுக்காக சேவையாற்ற விரும்புவதால் இவர்கள் குறுகிய காலப்பகுதியில் எவ்வாறான சாதனைகளை அடைந்து கொள்ள முடியும் என்பதை இது சுட்டிநிற்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் தனக்கு முன்னுள்ள சவால்களை விருப்புடன் முகங்கொடுக்க முற்படுமாயின் பலவற்றைச் சாதிக்க முடியும் என்பதையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

சிறிலங்காவும் தற்போது திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்துள்ளது.

இதனால் திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய அரசாங்கங்களிடமிருந்து சிறிசேன அரசாங்கம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

நாங்களும் கூட இதிலிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

சிறிலங்காவின் சிவில் சமூகமானது தனது அரசாங்கத்தின் செயற்பாடுகளை வடிவமைப்பதில் அதிகளவான பங்களிப்பை மேற்கொள்வதில் உறுதியாக உள்ளது.

ஆகவே சிறிலங்கா அரசாங்கமும் சிவில் அமைப்புக்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவே சிறிலங்கா அரசாங்கத்தின் பாரிய வளங்களில் ஒன்றாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவில் காணப்படாத மிகவும் அரியதொரு வளமாக இது அமைந்துள்ளது. இதுவே சிறிலங்கா அரசாங்கத்தின் இயங்கியல் மாற்றத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

இதன் காரணமாகவே சிறிலங்கா போன்ற நாடுகளை மட்டுமல்லாது நான் அங்கம் வகிக்கும் அமெரிக்கா போன்ற அரசாங்கங்களுக்கும் திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பு தன்னுடன் இணைவதற்கான அனுமதியை வழங்குகிறது.

அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் உலக நாடுகள் முழுவதற்கும் பயணம் செய்து, அந்தந்த நாடுகளில் உள்ள சிறந்த எண்ணங்களைத் தனது நாட்டிற்காகப் பயன்படுத்துவதில் ஈடுபடுகின்றனர். நாங்கள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இதன் காரணமாகவே திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக நாங்கள் எம்மை முழு அளவில் ஈடுபடுத்தியுள்ளோம்.

எமது அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து என்றும் விலகாது மிகவும் இன்றியமையாத, புதுமையான மற்றும் பயனுள்ள திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக நாங்கள் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்று குறிப்பிட்டார்.

ஒரு கருத்து “மெக்சிகோ மாநாட்டில் சிறிலங்கா தொடர்பாக சமந்தா பவர் நிகழ்த்திய உரை”

  1. மனோ says:

    காளை மாட்டைக் கறவை மாடாக்கிப் பால் வியாபாரம் நடத்த முற்படும் உங்கள் முயற்சி எப்படிப் பலன் தரும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *