மேலும்

மிகவும் நம்பகமான பொறிமுறையே தேவை – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்

the_hinduமூன்று பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்பானவர்களை விசாரணை செய்து தண்டிப்பதற்கான முறைசார் பொறிமுறை ஒன்று மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது என்பதை,  இது தொடர்பாக  விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஆணைக்குழுக்களும் கோடிட்டுக் காட்டியுள்ளன.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை பலமானதாக உள்ளது என்பதை அனைத்துலக சமூகத்திற்குக் காண்பிக்கும் ஒரு சமிக்கையாக இந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் உள்ள போதிலும், இந்த அறிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

காணாமற் போனோர் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு, 2009ல் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் கணிசமான அளவில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் ஆனாலும் இவற்றில் பெரும்பாலானவை தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களாக உள்ளதாகவும் தனது விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும், பெருமளவான பொதுமக்களின் இழப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் எனவும் மூன்று பேரைக் கொண்ட பரணகம ஆணைக்குழு பழிசுமத்தியுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் யுத்த வலயங்களில் அகப்பட்ட மக்களை புலிகள் அமைப்பு ‘மனிதக் கேடயங்களாகப்’ பயன்படுத்தியதாகவும் இவர்களை ஆயுதமுனையில் அச்சுறுத்தியதுடன் இந்த மக்கள் போர் வலயங்களிலிருந்து வெளியேறுவதற்கும் புலிகள் தடைவிதித்திருந்தனர் எனவும் பரணகம ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளையில், பொதுமக்கள் மீதான எறிகணை வீச்சிற்கான காரணம் என்ன என்பதையும் இதனை மேற்கொண்டவர்கள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளதாகவும் இந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைய முனைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, சரணடைந்த பல நூறு வரையான புலி உறுப்பினர்கள் காணாமற்போனமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மகனான பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டமை போன்ற குறித்த சில சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அதிபர் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் என்பது சிறிலங்காவில் பொதுவான ஒன்றாகும். ஆனால் இதன் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆணைக்குழுவானது குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவில்லை.

கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை  நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும்.

இந்த ஆணைக்குழு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பாகவும் மற்றும் நாட்டில் நீதி மற்றும் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

யுத்த மீறல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்கள் மற்றும் எங்கு இடம்பெற்றன என்பது தொடர்பாக ஆராய்ந்து இவ்வாறான மீறல்கள் தொடர்பாக உண்மையைக் கண்டறிதல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான முக்கிய பணிகளை பரணகம ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

போர்க்களத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு சட்ட வரையறைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என இந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மறுபுறத்தே நோக்கில், 2005-06 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு முக்கிய மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்த உடலகம ஆணைக்குழுவானது சில முரண்பாடான தீர்வுகளை முன்வைத்துள்ளது.

அதாவது 2006 ஆகஸ்ட்டில் வான்குண்டுத் தாக்குதல்கள் மூலம் 51 பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இந்த ஆணைக்குழுவானது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளது. உண்மையில் இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும்.

இதேபோன்று அனைத்துலக தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய 17 பணியாளர்களை புலிகளே கொன்றனர் என இந்த ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

ஆகவே உடலகம ஆணைக்குழுவின் இவ்வாறான சில விசாரணை முடிவுகள் முரண்பாடானவையாகக் காணப்படுகின்றன.

போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்களை விசாரணை செய்யுமாறு அனைத்துலக சமூகமானது சிறிலங்கா மீது பெரும் அழுத்தத்தை மேற்கொண்டு வரும் நிலையில், மிகவும் நம்பகமானதொரு விசாரணைப் பொறிமுறையை சிறிலங்கா உருவாக்க வேண்டிய தேவையுள்ளது.

இவ்வாறானதொரு பொறிமுறையில் அனைத்துலக கோட்பாடுகள், சட்டவல்லுனர்கள் மற்றும் தடயவியல் வல்லுனர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

இதுவே அதிகாரமளிக்கக் கூடிய உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் ஊடாக பல்வேறு குற்றங்களை விசாரணை செய்வதற்கான வழியை ஏற்படுத்தும்.

கலப்பு நீதிப்பொறிமுறைக்கு நீடித்த செயற்பாடே தேவையான ஒன்றாகும். இதற்கு ஆங்காங்கே மேற்கொள்ளப்படும் தற்காலிக நடவடிக்கைகள் தேவையற்றதாகும்.

வழிமூலம் – தி ஹிந்து (ஆசிரியர் தலையங்கம்)

மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *