மேலும்

விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குமாறு பரிந்துரைக்கவில்லை – பரணகம

Maxwell Parakrama Paranagamaமனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் பரிந்துரை செய்யவில்லை என்று, காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

“எமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது ஆணைக்கு அமையவே இந்த அறிக்கையை முழுமையாக தயாரித்து அரசாங்கத்திடம் வழங்கினோம்.

மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த இறுதி அறிக்கையை தயாரித்த போது எனக்கு எந்தவிதமான சவாலும் இருக்கவில்லை.

உண்மையைக் கூறுவதற்கு யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை என்ற எண்ணக்கருவின் அடிப்படையிலேயே அறிக்கையை தயாரித்தேன்.

வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென நான் பரிந்துரை செய்யவில்லை.

அதாவது வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்காவின் விசாரணை செயற்பாட்டில் உட்படுத்தவேண்டும் என்றோ அவர்களை விசாரணை செயற்பாட்டில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும் என்றோ நாங்கள் அறிக்கையில் பரிந்துரை செய்யவில்லை.

மாறாக தேவையெனில் விசாரணை செயற்பாட்டில் வெளிநாடுகளின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற பரிந்துரையை முன்வைத்தேன்.

குறிப்பாக நாங்கள் எமது விசாரணை செயற்பாட்டில் வெளிநாடுகளின் உதவிகளை பெற்றோம். குறிப்பாக டெஸ்மன்ட் டி சில்வாவின் ஆலோசனையை பெற்றோம்.

அதுபோன்று அரசாங்கம் தேவையெனின் அனைத்துலக தொழில்நுட்ப உதவிகளை பெற முடியும். அதனையே நான் எனது அறிக்கையில் முன்வைத்துள்ளேன்.

மேலும் எமது ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்ற தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த விடயத்தில் சுயாதீனமாகவே நான் செயற்பட்டேன்.

எனக்கு ஒரு பொறுப்பு வழங்கும் போது அது சுயாதீனமாக செயற்படுவேன். அதன் அடிப்படையிலேயே இந்த அறிக்கையையும் தயாரித்து வழங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *