மேலும்

வெள்ளைக்கொடி, பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலைகள் – விசாரணை அறிக்கை பெப்ரவரியில்

warcrimeவெள்ளைக் கொடி விவகாரம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பாலச்சந்திரன் படுகொலை, இசைப்பிரியா படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள தகவலில், “படுகொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க,  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இத்தகைய விசாரணைகளில் அனுபவம் மிக்கவர்கள். இந்த விசாரணைகளை நடுநிலையாக நடத்துவதற்கு, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவில் ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர், மருத்துவமனைகள் மீது சிறிலங்கா அரசபடையினர் பீரங்கித் தாக்குதலை  மேற்கொண்டதான குற்றச்சாட்டுக் குறித்தும் விசாரணை நடத்துவர்.

அத்துடன் மேலும் இசைப்பிரியா, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலைகள் போன்ற, சனல்4  வெளியிட்ட ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்த சம்பவங்கள் குறித்தும் இந்தக் குழுவினர் விசாரணை நடத்துவர்.

எட்டு மாவட்டங்களுக்கும் சென்று விசாரணைகளை நடத்தும் இந்தக் குழுவினர் தமது அறிக்கையை வரும் பெப்ரவரி மாதம் சமர்ப்பிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *