மேலும்

தேஜஸ் போர் விமானங்களை சிறிலங்காவுக்கு விற்க இந்தியா விருப்பம்

Tejas jetசிறிலங்கா விமானப்படைக்கு, உள்நாட்டில் தயாரித்த தேஜஸ் ரக சுப்பர் சொனிக் ஜெட் போர் விமானங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ககன் புலத்சிங்கள அடுத்த மாத முற்பகுதியில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, சின, பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பான, ஜேஎவ்-17 போர் விமானங்களை வாங்குவது குறித்து ஆராயவுள்ளதாக, பாகிஸ்தான் ஊடடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், சிறிலங்கா விமானப்படைத் தளபதியின் இந்தப் பயணம், வழக்கமானதொன்றே எனவும், பாகிஸ்தானிய தயாரிப்பான ஜேஎவ்-17 போர்விமானத்தைக் கொள்வனவு செய்யும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பாகிஸ்தானின் ஜேஎவ்-17 மற்றும் இந்தியாவின் தேஜஸ் ஆகிய இரண்டு போர் விமானங்களுமே, ஒத்த வகையான இரண்டாம் தலைமுறை இலகுரக போர் விமானங்கள். இவை சமமான போர் திறன், ஆயுதங்கள், மற்றும் ஸ்மாட் தொழில்நுட்பத்தைக் கொண்டவை.

எனினும், வலுமிக்க சக்தி நாடுகளின், மூலத் தயாரிப்புகளை விட இவை விலை மலிவானவை.

விலை அதிகமாக இருந்தாலும், பூகோள, அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, வயதான போர் விமானங்களுக்குப் பதிலாக, உயர் தொழில்நுட்பம் கொண்ட புதிய தலைமுறை போர் விமானங்களை வாங்க வேண்டிய தேவை உள்ளதாக, சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரையறுக்கப்பட்ட வான்பாதுகாப்பு தேவைகளுக்காக, உயர் திறன்மிக்க, விலை அதிகமான போர் விமானங்கள் சிறிலங்கா விமானப்படைக்குத் தேவையா என்ற விவாதமும் சிறிலங்கா பாதுகாப்பு மட்டத்தில் உள்ளது.

எனினும், தற்போதைய பூகோள, அரசியல் சூழலில் சிறிலங்காவுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களுக்குச் சாத்தியமிருப்பதால், புதிய தலைமுறையைச் சேர்ந்த  உயர்திறன் மிக்க போர் விமானங்கள் தேவைப்படுவதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா விமானப்படைக்கு ஜேஎவ்-17 போர் விமானங்களை விற்க பாகிஸ்தான் விருப்பம் வெளியிட்டுள்ள நிலையில்,  இந்தியாவும் தனது இலகு ரகப் போர் விமானமான தேஜஸ் விமானங்களை சிறிலங்காவுக்கு விற்க விருப்பம் வெளியிட்டுள்ளது.

ஜேஎவ்-17 போர் விமானங்களை பாகிஸ்தான் தனது விமானப்படையில் இணைத்துள்ளது.

ஆனால் இந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை இன்னமும் இணைத்துக் கொள்ளவில்லை.  இந்த போர் விமானம் இன்னமும் பரிசோதனை நிலையிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *