மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருக்கிறாரா சிறிசேன?

maithri-unசிறிலங்கா இராணுவத்தால் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடக்கம் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை வரையான அனைத்து விவகாரங்களையும் சிறிலங்கா அரசாங்கம் கையாளும் போது மட்டுமே மக்கள் சந்தித்துள்ள போர் வடுக்களைக் குணப்படுத்த முடியும்.

இவ்வாறு The diplomat ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் சிறைகளில் வாடும் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியற் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது ஒரு வார காலம் வரை தொடரப்பட்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நவம்பர் 7ம் திகதிக்குள் தீர்வு காண்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் வாக்குறுதியளித்துள்ளார். எனினும், இனிவரும் நாட்களில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் என்ன நடக்கப் போகின்றது என்பது தெளிவற்றதாகவே உள்ளது.

உண்மையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் சிறிசேன இதயசுத்தியுடன் ஈடுபடுவாரா?

சிறிலங்காவில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என உள்நாட்டிலும் அனைத்துலக நாடுகளிலும் வாழும் மக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வித காரணங்களையும் முன்வைக்காது தேடுதல்களை மேற்கொள்ளவும் மக்களைக் கைது செய்து தடுத்து வைப்பதற்குமான அனுமதியை பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது நாட்டின் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கியுள்ளது. இதனால் இந்தச் சட்டமானது சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான எவ்வித உண்மையான கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பல்வேறு அதிகாரத்துவம், ஊழல்கள் போன்றன இடம்பெற்றன.

இவற்றுக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் துணைபோனது. ஆனால் இவ்வாறான ஆட்சி ஒரு பத்தாண்டு வரை மட்டுமே நிலைத்து  நின்றது.

நாட்டில் ஊழல் மோசடிகளை நீக்குதல், நல்லாட்சியை மேம்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சியை மீண்டும் பலப்படுத்துதல் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை சிறிசேன தனது அதிபர் தேர்தலுக்கான பரப்புரையில் முன்வைத்திருந்தார். இவ்வாறான காரணங்களே மக்கள் சிறிசேனவை நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுத்ததற்கான காரணமாகும்.

தமிழ் சமூகத்திற்கு மிகவும் முக்கியமான போர் தவிர்ந்த ஏனைய விவகாரங்களில் சிறிசேன எப்போது எவ்வாறான நகர்வை முன்னெடுக்கவுள்ளார்?

சிறிலங்கா இராணுவத்தால் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடக்கம் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை வரையான அனைத்து விவகாரங்களையும் சிறிலங்காவின் தேசிய அரசாங்கம் கையாளும் போது மட்டுமே மக்கள் சந்தித்துள்ள போர் வடுக்களைக் குணப்படுத்த முடியும்.

தம்மிடம் எவ்வித அரசியற் கைதிகளும் இல்லை என அண்மையில் சிறிலங்கா நீதி அமைச்சர் அறிவித்துள்ளதானது ஏற்கனவே இருந்த நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. சிறிலங்கா எவ்வாறு புதிய யுகத்திற்குள் நுழைந்துள்ளது என்பதை கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற கூட்டத்தொடரில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எடுத்துக் கூறினார்.

‘சமத்துவம், நீதி, சுதந்திரம் போன்ற அனைத்துலக விழுமியங்களை உறுதிப்படுத்துவதற்கு நாட்டில் வாழும் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் மீளிணக்கப்பாட்டை உருவாக்க வேண்டும். அத்துடன் அரசியல் தீர்வொன்றையும் முன்வைக்க வேண்டும்’ என வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரால் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட கூற்றின் முக்கிய பகுதி வருமாறு:

‘சிறிலங்கா ஒரு நாடாக பரிணமிப்பது தொடர்பில் சந்தேகம் கொண்டுள்ளவர்களுக்காக சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். சிறிலங்காவில் ஒருபோதும் நீதி வழங்கப்படமாட்டாது என இவர்கள் கூறுகின்றனர். எல்லா சமூகத்தவர்களும் சமமாக மதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மக்கள் கடந்த ஜனவரி எட்டாம் திகதி அன்று எதனைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பதை நோக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். சிறிலங்கா மீதான நம்பிக்கையை இந்த உலகம் கைவிட்டிருந்தது. ஆனாலும் ஜனவரித் தேர்தல் மூலம் மக்கள் வழங்கிய ஆணையானது சிறிலங்கா எவற்றை அடைந்துள்ளது என்பது உறுதிசெய்கின்றது.

இது மீண்டும் கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி அன்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இருதரப்பிலும் உள்ள தீவிரவாத சக்திகள் நாடாளுமன்றில் போதியளவு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளத் தவறினர். ஆகவே முறிந்துபோன வாக்குறுதிகள் மற்றும் அனுபவங்கள், கடந்த காலத் திடீர் திருப்பங்கள் போன்றவற்றைக் கொண்டு எம்மை மதிப்பிட வேண்டாம்.

எமது நம்பிக்கைகள் மற்றும் அவாக்களைக் கொண்டு நாங்கள் நாட்டின் எதிர்காலத்தை வரைவதற்கும், விபரிப்பதற்கும் உருவாக்குவதற்கும் எம்மை அனுமதியுங்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட பீதிகள் மற்றும் அநீதிகளைப் பற்றி இனிக் கதைக்கவேண்டாம். எம்மைக் கனவு காணவிடுங்கள்.

நாங்கள் நாட்டில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான காத்திரமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு எம்மை அனுமதியுங்கள்’ என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்பாக சிறிசேன எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார் என்பதை உற்றுநோக்க வேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *