மேலும்

நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க சீனாவின் தயவை நாடுகிறது சிறிலங்கா

ravi-karunanayakeராஜபக்ச அரசாங்கத்தால் சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அதிக வட்டியுடன் கூடிய கடன்களால், சிறிலங்கா முன்னெப்போதும் இல்லாதவாறு தற்போது மிக மோசமான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.

‘சீனக் கடன்கள் எமது நாடு எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடியில் பாரிய பங்குவகிக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் பெருமளவான வருமானம் சீனாவின் கடன்களை அடைப்பதற்காக ஒதுக்கப்படுகின்றன’ என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சீன ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சீனாவானது சிறிலங்கா தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய நிதி நெருக்கடியைக் குறைப்பதற்கு உதவவேண்டும் எனவும் இதற்காக மேலும் நிதியைக் கடனாக வழங்காது முதலீடு செய்வதற்கு முன்வரவேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.

‘கடந்த காலத்தில் இடம்பெற்ற விரோதங்களைக் களைந்து விட்டு சீனா எமக்கு உதவ முன்வரவேண்டும். குறிப்பாக சீனா எமது நாட்டிற்காக வழங்கிய கடன்களின் வட்டியைக் குறைப்பதற்கும் அதுதொடர்பாக மேலும் விட்டுக்கொடுப்புக்களை வழங்குவதற்கும் சீனா எமக்கு உதவவேண்டும்.

சீனாவுடனான எமது உறவை நாம் சரியான பாதையில் கொண்டு செல்வது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். அத்துடன் ராஜபக்சவின் ஊழல் மிக்க அரசாங்கத்தால் விரயமாக்கப்பட்ட கடனைச் சரிசெய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்பதற்கு சீனா எமக்கு உதவ வேண்டும்’ எனவும் கருணாநயக்க கோரியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் சிறிலங்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தல் மூலம் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அரசாங்கமானது சீனாவால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பாரிய திட்டங்களை இடைநிறுத்தியது. குறிப்பாக 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்டமானது ஊழலுடன் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு சென்மின் இம்மாதம் சிறிலங்காவின் உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சுமூகமடைவதற்கான முயற்சிகளை இவர் மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவைப் பலப்படுத்துவதற்கு சீனா மேலும் தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவில் கடந்த ஆறு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பாரிய கட்டுமானத் திட்டங்களில் கிட்டத்தட்ட 70 சதவீதமானவை சீனாவால் நிதியுதவி அளிக்கப்பட்டவையாகும்.

எவ்வாறெனினும், ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் துறைமுகம் மற்றும் அனைத்துலக விமானநிலையம் என்பன சீன நிதியில் அமைக்கப்பட்ட போதிலும் இவற்றிலிருந்து போதியளவு வருமானம் ஈட்டப்படவில்லை.

இதனால் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை அடைப்பதில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவானது தனது நிதியை சிறிலங்காவின் கட்டுமானங்களுக்காக செலவிட்ட பின்னர் நாடு பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘2010ல் சிறிலங்காவில் மொத்தத் தேசிய உற்பத்தியின் 36 சதவீதமானவை வெளிநாட்டுக் கடன்களாகும். இது 2013ல் 65 சதவீதமாகவும், இவ்வாண்டு 94 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது’ என கிராமிய பொருளாதார அமைச்சின் முன்னாள் பொது இயக்குனர் பாலித எக்கநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இவ்வாறான கடன்கள் மற்றும் கடன் வட்டிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் வருமானத்தையும் மீறியுள்ளது. ஏற்கனவே உள்ள கடன்களை அடைப்பதற்கு நாங்கள் மேலும் கடன் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என பாலித எக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள இத்தகைய நிதி நெருக்கடியை ஈடுசெய்வதற்கு வெளிநாடுகள் நேரடி முதலீட்டை மேற்கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக 2016 இற்கான வரவு செலவுத் திட்டத்தை இம்மாதத்தின் இறுதியில் சமர்ப்பிக்கவுள்ள சிறிலங்காவின் நிதி அமைச்சர் ஆராய்ந்து வருகிறார்.

‘நாங்கள் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவுள்ளோம். எமது நாட்டின் அபிவிருத்திக்கு இவ்வாறான நேரடி முதலீடுகள் மிகவும் இன்றியமையாதவையாகும்.

ஆகவே சீன நிறுவனங்கள் இங்கு தமது முதலீட்டை மேற்கொள்வதற்கான நல்லதொரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது’ என கருணாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறெனினும், புதிய திட்டங்கள் தொடர்பில் உடன்பாட்டை மேற்கொள்வதற்கு முன்னர், ஏற்கனவே சீனா தான் மேற்கொண்டுள்ள திட்டங்களை குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை நிறைவு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *