மேலும்

அடுத்த மாதம் 7ஆம் நாளுக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்குத் தீர்வு- மைத்திரி வாக்குறுதி

MS-Sampanthanதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக  அடுத்தமாதம் 7ஆம் நாளுக்கு முன்னதாக நிரந்தர தீர்வு காணப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை நேற்றுச் சந்தித்து பேச்சு நடத்திய போதே சிறிலங்கா அதிபரின் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி 14 சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் விடுதலையை தொடர்பாக, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றுக் காலை சந்தித்தனர்.

இதன்போது தமக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது தொடர்பில் அரசாங்கம் தெளிவான தீர்மானத்தை அறிவிக்க வேண்டுமென நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு அவர், இந்த விடயம் தொடர்பாக, சிறிலங்கா அதிபரே இறுதி தீர்மானம் எடுக்க வேண்டுமு் என்று கூறி, தொலைபேசி மூலம் சிறிலங்கா அதிபரைத் தொடர்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாடினார்.

இதன் போதே சிறிலங்கா அதிபரால் அடுத்த மாதம் 7ஆம் நாளுக்குள் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிடுகையில்,

”நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுடன் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பேச்சு மேற்கொண்ட போது அவர் எமது முன்னிலையில் சிறிலங்கா அதிபரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடினர்.

அதன்பின்னர் எம்மிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் இம்மாத இறுதிக்குள் கைதிகள் தொடர்பான விடயங்களை கவனத்தில் எடுத்து பொறிமுறையொன்று உருவாக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இந்த விடயம் தொடர்பாக தீர்க்கமான தீர்மானம் எடுக்கப்பட்டு அவர்களின் கோரிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் நாளுக்கு முன்னதாக தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்திற்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுமென சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டதாக அமைச்சர் எம்மிடம் கூறினார்.

எவ்வாறாயினும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கப்படுவார்களா, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் விடுவிக்கப்படுவார்களா?, பிணைகளில் விடுதலை செய்யப்படுவார்களா என்பது உள்ளிட்ட, சிறிலங்கா அரசாங்கத்தால் அரசியல் கைதிகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள பொறிமுறைகள் குறித்து எந்தவிதமான கருத்துக்களும் எமக்கு கூறப்படவில்லை”என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *