மேலும்

33 அரசியல் கைதிகள் மருத்துவமனையில் அனுமதி – மேலும் பலரின் நிலை மோசம்

Prisonerதமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலும் 12 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கைதிகளின் எண்ணிககை 33 ஆக அதிகரித்துள்ளது.

நீண்டகாலமாக விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 217பேர், தமக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஆறாவது நாளை எட்டியுள்ளது.

போராட்டத்தின் ஐந்தாவது நாளான நேற்று, பெரும்பாலான கைதிகளின் உடல் நிலை மோசமடைந்தது.

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரின் உடல் நிலை மோசமடைந்து நேற்று நண்பகல் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏற்கனவே, முந்திய தினங்களில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 21 அரசியல் கைதிகள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றும் 12 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து, 33 பேருக்கு வெலிக்கடை மற்றும் அனுராதபுர சிறைச்சாலை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஏனைய அரசியல் கைதிகளும் உடல் சோர்ந்த நிலையில், போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்,செல்வம் அடைக்கலநாதன் மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளுடன் கலந்துரையாடினார்.

அவருடன் மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை, அருட்தந்தை சக்திவேல், வட்ரக்க விஜித தேரர் உள்ளிட்டோரும் கைதிகளை பார்வையிட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவை வெளியிட்டனர்.

அதேவேளை நேற்று நண்பல் அனுராதபுர சிறைச்சாலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் இருதயநாதன் மற்றும் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் கைதிகளை பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *