மேலும்

அரசியல்கைதிகளை ஒருவாரத்துக்குள் விடுவிக்க வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

Sumanthiranவிசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளித்து, உடனடியாக விடுதலை செய்யுமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமது விடுதலையை வலியுறுத்தி, சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தகவல் வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச்சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு மொனராகல, போகம்பரை, அநுராதபுரம், நீர்கொழும்பு, அனராதபுர, நீர்கொழும்பு, பொலன்னறுவ, மட்டக்களப்பு, மகசின், பதுளை, வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் விடுதலை தொடர்பாக நாம் பல்வேறு பட்ட பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கத்துடன் நடத்தியிருக்கிறோம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர், முன்னைய ஆட்சியாளர்களுடன் இவர்களின் விடுதலை தொடர்பாக பேசப்பட்ட போது ஒரு மாத காலத்தினுள் விடுதலை அளிப்பதாக உறுதியளித்தனர். எனினும் அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

அதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக சகல சிறைகளுக்கும் சென்று, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் தொடர்பான விவரங்களை திரட்டி, அதன் அடிப்படையில் அவர்களின் விடுதலை குறித்து பல்வேறு கட்டங்களில் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தோம்.

இருப்பினும் எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் உரிய நேரத்தில் செயல் வடிவம் பெறவில்லை.

அரசியல் கைதிகள் சிலர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பான விசாரணைகள் நீண்டகாலமாக முன்னெடுக்கப்படுகின்றன.

அவற்றை விரைந்து முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் குறித்தும் சட்டமா அதிபருடன் பேச்சு நடத்தியிருந்தோம்.

புதிய ஆட்சியாளர்களுடன் இடம்பெற்ற அதிகாரபூர்வ மற்றும் தனிப்பட்ட ரீதியிலான பேச்சுக்களிலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வலியுறுத்தப்பட்டன.

இதுபற்றி நாம் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை விடுத்தோம்.

தற்போது நாட்டில் நல்லாட்சி நோக்கிய பயணத்தில், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தருணத்தை  அரசாங்கம் தவறவிடக்கூடாது.

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும். இதனை அரசாங்கம் தாமதிக்காது விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

அடுத்த ஒருவார காலத்தினுள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *