மேலும்

வன்னியில் வீடமைப்புத் திட்டத்துக்கு பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – இந்தியா விசாரணை

India-emblemகிளிநொச்சிப் பகுதியில் இந்திய வீட்டுத் திட்டப் பயனாளிகளிடம், பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியத் தூதரகமும், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கமும், இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர், கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், இந்திய வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள், வீடமைப்புத் திட்ட உதவியை வழங்குவதற்கு பாதிக்கப்பட்ட பெண்களிடம், பாலியல் இலஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக கிளிநொச்சியில் உள்ள சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தில் பெண் ஒருவர் எழுத்து மூலம் மறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இத்தகைய 30 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாடுகளை அடுத்து, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து இந்தியத் தூதரகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்காளிகளின் இத்தகைய செற்பாடுகள் எதையும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்றும் இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விசாரணையில் தமது அதிகாரிகள் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் கையளிக்கப்படுவவார்கள் என்று சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்பாடல் மற்றும் மனிதாபிமான இராஜதந்திர  மூத்த முகாமையாளர் மகேஸ் ஜோன்னி தெரிவித்துள்ளார்.

முழங்காவில் பகுதியில் இந்திய வீடமைப்புத் திட்ட உதவிக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள், பாலியல் இலஞ்சம் கேட்டதாக, கணவனை இழந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த வி்சாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

முழங்காவில்  பகுதியில், 1800 வீடுகள் கட்டப்பட்டு வருவதுடன், இவற்றுக்குப் பொறுப்பாக, 16 திட்ட அதிகாரிகள் செஞ்சிலுவைச் சங்கத்தினால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் பாலியல் இலஞ்சம் கேட்பதாக தமக்கு வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும். 30 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இவற்றில், 15 முறைப்பாடுகளை தாம் கொழும்பிலுள்ள தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும், கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்க  கிளைச் செயலர் தம்பு சேதுபதி தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக கிடைத்து வருவதாகவும், குறிப்பாக பெண்களிடம் இருந்தே கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *