மேலும்

கலப்பு விசாரணையே நடக்கும் – சுமந்திரன் செவ்வி

sumanthiranஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின்படி “ஹைபிரிட்” என்ற கலப்பு நீதிமன்ற விசாரணையே இடம்பெறும்.

இவ்வாறு வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அளித்துள்ள செவ்வியில், குறிப்பிட்டுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன்.

கேள்வி: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை – -அமெரிக்க இணை பிரேரணையின்படி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை கள் மீறல்கள் குறித்து ‘ஹைபிரிட்’ விசாரணை நடைபெறுமா? அல்லது உள்ளக விசாரணை நடைபெறுமா?

பதில்: நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ‘ஹைபிரிட்’ அதாவது கலப்பு நீதிமன்ற விசாரணையே நடைபெறும். இதற்கு காரணம் என்னவென்றால், விசாரணை அறிக்கையில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பரிந்துரை என்னவென்றால், நீதி விசாரணை ஒரு கலப்பு நீதிமன்றத்தின் மூலமாகத்தான் இடம்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரையில் இலங்கையிலுள்ள நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையில்லை. அதனால் ஒரு கலப்பு நீதிமன்றம் மூலமே இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.

நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தில் முதலாவது செயற்படுத்தும் தீர்மானம் என ஒன்றுள்ளது. இதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. எல்லா பரிந்துரைகளையும் செயற்படுத்த வேண்டும் என தெரிவித்து விட்டு, அதன் பின்னர் வரும் பந்திகளில் முக்கியமானவை விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்படி அந்த பந்திகளிலுள்ளவற்றை தெரிவிக்கும் போது ஆறாவது பந்தியில் இந்த நீதிமன்றம் எப்படியான நீதிமன்றமாக இருக்க வேண்டுமென சொல்லப்பட்டுள்ளது.

முதலாவது பந்தியில் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கலப்பு நீதிமன்றத்தினால் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலப்பு நீதிமன் றம் பொதுநலவாய நாடுகளிலிருந்தும் மற்றைய நாடுகளிலிருந்தும் நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் விசாரணையாளர்கள் பங்குபற்றுதலுடனான நீதிமன்றமாக இருத்தல் வேண்டும்.

கேள்வி: அந்த நாடுகளிலுள்ள நீதியரசர் கள் நேரடியாக இந்த கலப்பு நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படுவார்களா ?

பதில்: நிச்சயமாக. இந்த கலப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதியரசர்களும் நியமிக்கப்படுவர். எனவே, வேறு வியாக்கியானத்துக்கு இதில் இடமில்லை.

கேள்வி: இலங்கை அரசாங்கம் ‘ஹைபி ரிட்’ நீதிமன்ற விசாரணையில்லை. உள்ளக விசாரணையே மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கின்றதே. இது உண்மைக்கு புறம்பானதா?

பதில்: இது என்ன விடயமென்றால், தீர்மானத்தில் ‘ஹைபிரிட்’ கலப்பு நீதிமன்றம் என்று ஒரு வார்த்தை பாவிக்கப்படவில்லை. முதலாவது பந்தியில் அவரது சிபாரிசை கோடிட்டுக் காட்டும் போது ‘ஹைபிரிட்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத் தான் நடைமுறைப்படுத்தும் படி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் அந்த தீர்மானத்தை வழிமொழிந்தும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

அது ஒரு பக்கம் ஆறாவது பந்தியை நாம் தனியாக எடுத்து பார்த்தாலும் வெளிநாட்டு நீதிபதிகள் வழக்குரைஞர்கள், வழக்கு தொடுநர்கள், பங்குபற்றும் பொறி முறை என்று சொன்னால் அது ‘ஹைபிரிட்’ என்ற கலப்பு நீதிமன்றமே இலங்கை அரசாங்கம் சொல்வது என்னவென்றால் கலப்பு என்ற சொல் தீர்மானத்தில் நேரடியாக பாவிக்கப்படாத தால் இது கலப்பு நீதிமன்றம் அல்ல.

இது உள்நாட்டு பொறிமுறை என்கின்றது. உள்நாட்டு பொறிமுறையிலும் ஒரு அர்த்தம் இருக்கின்றது. உள்நாட்டில் ஒரு சட்டத்தால் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இன்று உலகில் கலப்பு நீதிமன் றம் இருக்கும் சுபாவத்தையும் இதையும் பார்த்தால் இது தான் கலப்பு நீதிமன்றம் ஒரே வித்தியாசம் என்னவென்றால், பல நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கும் ஓர் அம்சம் இருக்கின்றது. இது அப்படியல்ல. இலங்கை அரசாங்கம் அவர்களை நியமிக்க வேண்டும். இந்த ஒரு வித்தியாசத்தை தவிர அமைப்பு ரீதியாக இது ஒரு கலப்பு நீதிமன்றம் தான்.

கேள்வி: இந்த கலப்பு நீதிமன்றத்தை இலங்கையில் உருவாக்குவதற்கு இலங்கை நீதித்துறை சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டுமா?

பதில்: இந்த கலப்பு நீதிமன்றத்தை ஒரு சட்டத்தின் மூலமாக உருவாக்க வேண் டும். இதற்கு திருத்தம் என்று கூறமுடியாது. உயர் நீதிமன்றம் இருக்கின்றது. இது தொடர்பாக அரசியலமைப்பிலும் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால் ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ள நியாயாதிக்கத்துக்கு மேலாக ஒரு சாதாரண சட்டத்தின் மூலமாகவும் அந்தந்த நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு நியாயாதிக்கங்கள் வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனபடியால், ஒரு சட்டத்தின் மூலமாக உயர்நீதிமன்றத்துக்கு வணிக வழக்குகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதைப் போல் மாகாண நீதிமன்றங்களுக்கு மேல் முறையீடுகளை விசாரிப்பதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே போல் இந்த மேல் நீதிமன்றத்தையும் உருவாக்கலாம்.. இந்த விடயம் சம்பந்தமாக விசாரிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு நீதிமன்றத்தை உருவாக்கலாம்.

கேள்வி: வெளிநாட்டு நீதியரசர்களை இந்த நீதிமன்றங்களுக்கு நியமிக்கும் அதிகாரம் இருக்கின்றதா?

பதில்: அப்படி புதிய நீதிமன்றத்தை உருவாக்கும் போது அந்த சட்டத்தில் வெளிநாட்டு நீதியரசர்களை நியமிப்பதற்கும். வழி வகை செய்யப்பட வேண்டும்.

கேள்வி: புதிய நீதிமன்றத்தை உருவாக்கும் சட்ட மூலத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையா-? அல்லது சாதாரண பெரும்பான்மை போதுமானதா?

பதில்: மூன்றில் இரண்டு பெரும்பான் மை தேவையில்லை. சாதாரண பெரும்பான்மையே போதுமானது.

கேள்வி: ஜெனீவா மனித உரிமை பேரவை யில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவித நன்மையோ அல்லது நிவாரணங்களோ இல்லையென புலம் பெயர் அமைப்புகளும் தமிழக அரசியல்வாதிகளும் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: புலம் பெயர் அமைப்புகளின் பிரதானமானவர்கள். எம்முடன் சேர்ந்து ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினோம். அதில் எமது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

கேள்வி: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த பிரேரணை மூலம் ஏதாவது நன்மைகள் நிவாரணங்கள். கிடைக்குமா? இல்லையா?

பதில்: பாதிக்கப்பட்ட மக்கள் கேட்பது என்ன? எங்களுக்கு சரியாக நீதி கிடைக்க வேண்டும். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.உள்நாட்டு நீதிமன்றங்களில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அதன்மூலம் எங்களுக்கு நீதி கிடைக்காது என்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன ? நாங்கள் நம்பத்தகுந்த நீதிமன்றம் தான் எமக்கு வேண்டும்.

அதாவது சர்வதேச பொறிமுறையிலான நீதிமன்றமே எமக்கு தேவை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சர்வதேச பொறிமுறையுடனான கலப்பு நீதிமன்றத்தால் தமக்கு நீதி கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர். நியமிக்கப்படுகின்ற நீதியரசர்கள் சுயாதீனமானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நியமிக்கப்படும் போது அவர்களது பின்னணியை ஆராய்ந்து அவர்களின் நியமனத்துக்கு நாங்கள் இணக்கம் தெரிவிக்கலாம். சர்வதேச விசாரணை நடைபெற்றது. அதற்கான அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மூன்று திறமையான நிபுணர்கள். நியமிக்கப்பட்டார்கள். மார்டி அதிசாரி, இவர் போலாந்து நாட்டை சேர்ந்தவர். சில்வியா கார்ட்ரைட், இவர் நியூஸிலாந்து நாட்டை சேர்ந்தவர். அஸ்மா இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இதில் இறுதியாக குறிப்பிடப்பட்ட இருவரும் பொது நலவாய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

பொது நலவாய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுயாதீனமானவர்கள் அல்லர் என்ற எண் ணம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கின்றது. பாகிஸ்தான் போன்ற ஒரு நாடு இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கூடாது. என கருதும். அஸ்மா ஜெஹங்கி இதற்கு நியமிக்கும் போது எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இவரது சுயாதீனம். அனைவரும் அறிந்த விடயமாகும். இவர்கள் இருவரதும் பங்களிப்பின் கீழ் தயாரிக்கப்பட்ட அறிக்கை தான். இவ்வளவு இறுக்கமாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல இதற்கு முன்னர் உடலகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. இதில் சர்வதேசத்தில் சிறந்த 15 பேர் அங்கம் வகித்தனர்.

இதற்கு தலைவராகவிருந்தவர் நீதியரசர் பகவதி என்பவர் ஆவார். இவர் இந்தியாவை சேர்ந்தவர். இவர் தான் இந்த விசாரணை குழுவின் நடைமுறை பிழையானது என காரசாரமாக விமர்சித்தவர் ஆவார். அதுமட்டுமின்றி, இந்த குழுவிலிருந்து விலகியதுடன். சட்டமா அதிபர் திணைக்களத்தை மிக கடுமையாக விமர்சித்தார்.

இந்தியாவில் இருந்து வந்ததற்காகவோ அல்லது பொதுநலவாய நாட் டைச் சேர்ந்தவர் என்பதற்காகவோ அவர் தனது சுயாதீன தன்மையை விட்டு கொடுக்கவில்லை. ஆகவே எங்களுடைய மக்களுக்கு சந்தேகம் எழுவது சகஜம். நாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளதால் இந்த அச்சம் எமக்கு ஏற்படுகின்றது.

வெளிநாட்டு நீதியரசர்களை நியமிக்கும்போது எம்முடன் கலந்துரையாடாமல் அரசாங்கம் தாங்களாகவே நியமித்தால் அரசாங்கம் ஜெனீவாவில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டிற்கு எதிராக அமையும். கலந்தாலோசிக்கும்போது நாங்கள் இணக்கம் தெரிவிக்காவிட்டால் இந்த நீதிமன்றம் குறித்து நம்பிக்கையிருக் காது.

கேள்வி: ஜெனீவா விஜயத்தின்போது நீங் கள் திடீரென அமெரிக்காவுக்கு விஜயம் செய்தது ஏன்?

பதில்: ஜெனீவாவில் கடந்த 14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சிறந்த உரையொன்றை ஆற்றியிருந்தார். நாங்கள் நிறையத் தவறுகளை செய்திருக்கின்றோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றெல்லாம் கூறினார்.

இப்போது எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், நாங்கள் இதைச் செய்வோம் அதைச் செய்வோம் என்றெல்லாம் வாக்குறுதியளித்தார். அவர் இதையெல்லாம் கூறி முடித்த பின்னர் இலங்கை தரப்பிலிருந்து தீர்மானத்தின் முதலாவது வரைபு வந்த பின்னர் 26பந்திகளில் 16 பந்திகளை நீக்கும்படி கோரப்பட்டது. ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்படுவதற்கு அரசியலமைப்பில் தடையொன்று இருப்பதாகக் கூறினார்கள்.

சர்வதேசக் குற்றங்களை இந்த நாட்டில் குற்றங்களாக ஏற்பதற்கு தடை இருக்கின்றது என்றும் ஏனைய நாடுகளுக்கு செய்தியொன்றைப் பரப்பியிருந்தார்கள். நாங்கள் இதற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாங்கள் எங்களது சட்ட நிபுணத்துவத்தைக் காண்பித்து இவற்றை நிறைவேற்றலாம் என தெளிவுபடுத்த வேண்டி இருந்தது. இலங்கை அரசாங்கம் வெளி விவகார அமைச்சின் மூலமாக சமிக்ஞை யைக் காட்டிவிட்டு பிறகு அங்கிருந்த இராஜதந்திரிகள் மத்தியில் வித்தியாசமான ஒரு செயற்பாட்டை செய்யத் தலைப் பட்ட காரணத்தினால்தான் நான் திடீ ரென்று அமெரிக்காவிலுள்ள நியூயோர்க் நகருக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. ஜெனீவாவிலுள்ள அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி, அமெரிக்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதி நிதி சமந்தா பவர் ஆகியோரைச் சந்தித்து இந்த விடயத்தை இறுக்கமாகச் சொல்லி இலங்கை அரசியலமைப்பில் இந்த நீதி மன்றத்தை நியமிக்க எந்தத் தடையுமில் லையென விளக்கிக் கூறினோம்.

நாங்கள் அங்கு செல்வதற்கு முன்னர் வொஷிங்டனிலிருந்து இரண்டு நிபுணர் களை ஜெனீவாவிற்கு அழைப்பித்து அவர்களுடன் பேசியபோது அவர்கள் நாங்கள் கூறுவது சரி எனத் தெரிவித்தார் கள். ஆனாலும் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் இந்த இரு விடயங்களும் செய்யப்டாவிட்டால், அதேநேரம் தீர்மா னத்தில் சொல்லப்படா விட்டால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இது பாதிக்கப்பட்ட மக்க ளுக்குச் செய்யப்படும் அநீதி என்று உரத்த குரலில் தெரிவிப் போம் என்றும் நான் நியூயோர்க் சென்று கூற வேண்டிய தேவை இருந்தது. அதனால் தான் நான் அமெரிக்காவுக்குச் சென்றேன் என அவர் தெரிவித்தார்.

வழிமூலம் – நன்றியுடன் வீரகேசரி வார வெளியீடு

ஒரு கருத்து “கலப்பு விசாரணையே நடக்கும் – சுமந்திரன் செவ்வி”

  1. Ruthirakumar Jayaratnam
    Ruthirakumar Jayaratnam says:

    கலப்புத் திருமணம்தான்!!????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *