மேலும்

காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு அத்தாட்சிப் பத்திரங்கள்

missingபோரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் காணாமற்போனோர் விவகாரம் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக போரின் இறுதிக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பாக தற்போது பல்வேறு அழுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, கொழும்பில் இருந்து Amantha Perera வும், புதுடெல்லியில் இருந்து Jason Burke உம், இணைந்து சிலோன் ருடே நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு யுத்தத்தின் போது காணாமற்போன பல ஆயிரக்கணக்கானவர்களின் குடும்பங்களுக்கு,  ‘காணாமற்போயுள்ளமையை’ உறுதிப்படுத்தும் அத்தாட்சிப் பத்திரங்களை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டிய நிலையிலுள்ளது.

இவ்வாறான அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்படுவதானது போரின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள ஆழமான வடுக்களை ஆற்றுவதற்கான ஒரு முக்கிய நகர்வாக நோக்கப்படுகிறது.

காணாமற் போனவர்களின் உறவுகளால் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய நாடுகளானது அண்மையில் சிறிலங்கா மீது தீர்மானம் ஒன்றை இயற்றிய நிலையிலேயே தற்போது காணாமற் போனவர்களை உறுதிப்படுத்திய அத்தாட்சிப் பத்திரங்களை வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இரகசியத் தடுப்பு முகாங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகளை விசாரணை செய்யுமாறும், 2009ல் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் காணாமற் போனவர்களுக்கு தற்போது என்ன நடந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ‘நம்பகமான மற்றும் சுயாதீன’ பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செய்ட் றாட் அல்-ஹூசைன் சிறிலங்கா மீது அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையிலான யுத்தத்தின் போது காணாமற் போனவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை. காணாமற்போனவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

இந்நிலையில், போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் காணாமற் போனோர் விவகாரம் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக போரின் இறுதிக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பாக தற்போது பல்வேறு அழுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காணாமற் போனவர்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவானது, 2013 தொடக்கம் இற்றைவரை 20,000 வரையான முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. இவற்றுள் அரசாங்கப் படைகளிலிருந்து காணாமற் போன 5000 பேர் தொடர்பான முறைப்பாடுகளும் உள்ளடங்குகின்றன.

1990லிருந்து சிறிலங்காவில் காணாமற்போனவர்கள் தொடர்பான பதிவைப் பேணும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமானது இதுவரை 16,604 முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளது. இதேவேளையில் 40,000 வரையான மக்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘சிறிலங்காவில் இன்னமும் இரகசிய தடுப்பு முகாங்கள் உள்ளதாக பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன் இந்த முகாம்கள் எங்குள்ளன என்பது இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக துரித விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என செய்ட் தெரிவித்துள்ளார். பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் இன்னமும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை என செய்ட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலையான அபிவிருத்தி மற்றும் மீளிணக்கப்பாடு ஆகிய இரண்டுமே தனது இலக்குகளாக உள்ளதாக நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றும் போது சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

‘கடந்த கால மீறல்களைச் சரிசெய்து, நேர்மையுடன் செயற்படுவதுடன் நவீன சிறிலங்காவை உருவாக்குவோ தற்போதுள்ள அடிப்படைத் தேவையாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகள் தொடர்பில் விசாரணை செய்து நீதியை நிலைநாட்டுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என சிறிலங்கா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

காணாமற் போனவர்கள் தொடர்பில் அவர்களது குடும்பத்தினருக்கு அத்தாட்சிப் பத்திரங்களை வழங்குவதானது மேற்குலக நாடுகளின் அழுத்தத்தின் பேரால் ஏற்பட்டதல்ல என சிறிலங்காவின் சுகாதார அமைச்சரும் அரசாங்கப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

‘நாங்கள் மக்களின் முன்னால் சென்று அவர்களது வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் போது வாக்குறுதிகள் வழங்கியிருந்தோம். இந்த அடிப்படையிலேயே எமது அரசாங்கம் தற்போது செயற்படுகிறது. உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்பதில் நாங்கள் இதயசுத்தியுடன் செயற்படுகிறோம். இதற்கான நகர்வுகளையே நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது தொடர்பில் உண்மைகளைக் கண்டறிய நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களும் உண்மையை எதிர்பார்த்து நிற்கிறார்கள். இதற்காக நாங்கள் இப்போது செயற்படுகிறோம்’ என அமைச்சர் சேனாரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமற் போனவர்கள் தொடர்பில் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சிப் பத்திரங்களைக் கொண்டு அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர். இதன் மூலம் காணாமற் போனவர்களின் உறவுகள் ஓய்வூதியத்தையும் நில உறுதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

காணாமற் போனவர்களின் உறவுகள் இவற்றை முன்னர் பெற்றுக் கொள்ள முடியாதிருந்தது. இது தொடர்பான முதலாம் கட்ட அத்தாட்சிப் பத்திரங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமற் போனவர்களின் குடும்பத்தினருக்கு எத்தகைய தேவைகள் உள்ளன என்பது தொடர்பில் சிறிலங்காத் தீவு முழுமையிலும் நவம்பர் 2014 தொடக்கம் இவ்வாண்டு யூலை மாதம் வரை மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜயரட்ன தெரிவித்துள்ளார்.

‘காணாமற் போனவர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கத்திடம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

காணாமற் போனவர்களின் குடும்பத்தினரின் உரிமைகள் தொடர்பாக மட்டுமன்றி இவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாகவும் இந்தக் குடும்பங்களுக்கு என்ன தேவை என்பதையும் கண்டறிவதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்’ எனவும் விஜயரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை சிங்கள சமூகத்திடமிருந்து பாரியளவில் ஆதரவைப் பெறமுடியாத தீர்மானம் ஒன்றை முன்னெடுக்கத் தான் விரும்புவதாகவும் நாடாளுமன்றில் அதிக ஆசனங்கள் கிடைத்தால் இதனைச் செயற்படுத்துவேன் எனவும் கடந்த ஆகஸ்ட்டில் பொதுத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அதிபர் சிறிசேன தனது அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் சிறிசேனவின் கூட்டணிக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று நாடாளுமன்றின் அறுதிப்பெரும்பான்மையை வென்றெடுத்துள்ள நிலையில், அரசியல் யாப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான நகர்வுகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் இந்த விடயத்தில் மிக மெதுவாகச் செயற்படுவதாகவும், எல்லாத் தரப்பினரையும் நம்பவைத்து இதனை முன்னெடுப்பதற்கு சிறிது காலம் பிடிக்கும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அத்தாட்சிப் பத்திரங்கள் என்பது தமிழ் மக்கள் மத்தியில் திருப்தியை வழங்கவில்லை என தமிழ் அரசியல்வாதியான சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

‘காணாமற் போனவர்களுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு, அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்படுதல் வரவேற்கப்படுகின்ற விடயமாகும். ஆனாலும் பொறுப்புக்கூறல் என்பது இதை விட முக்கியமாகும். காணாமற் போதலை உறுதிப்படுத்துவதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் சாட்சியம் ஒன்று இருப்பது நல்லது. ஆனால் இவ்வாறான மீறல்களுக்கு யார் பொறுப்பு என்பதையும் அவர்கள் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்பதுவும் இங்கு தவிர்க்க முடியாது’ என சிவஞானம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல்வேறு மீறல்கள் இடம்பெற்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கான பலமான சாட்சியங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

220 பக்கங்களைக் கொண்ட ஐ.நா அறிக்கையில், சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், படுகொலைகள், பலவந்தமான காணாமற் போதல்கள், பாலியல் வன்புணர்வுகள் மற்றும் தமிழ்ப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள், படுகொலைகள், சிறுவர் ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாகவும் விபரிக்கப்பட்டுள்ளதாக செய்ட் சுட்டிக்காட்டியுள்ளார். போரில் ஈடுபட்ட இருதரப்பினரும் பல்வேறு யுத்த மீறல்களைப் புரிந்ததாக இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சில நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் இவ்வாறானதொரு தீர்மானத்தை சிறிலங்கா கடந்த பல ஆண்டுகளாக எதிர்த்து நின்றது.

போர் மீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் மூலம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கிய பல அரசியல்வாதிகளும், சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளும் தமிழ்ப் புலிகளும் தண்டனை அனுபவித்திருப்பார்கள்.

‘அனைத்துலக சமூகத்தின் பங்களிப்புடன் சிறிலங்காவில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கையின் பிரகாரம் அனைத்துலக சமூகம் தனது பங்களிப்பை வழங்கும்.

இவ்வாறான மீறல்கள் தொடர்பில் யாரும் தண்டிக்கப்பட வேண்டியிருந்தால் அதற்கான மேலதிக நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை நிலைநாட்டப்படும். இது சூனிய வேட்டையல்ல. இது தேசிய ரீதியில் மேற்கொள்ளப்படும் உண்மையைக் கண்டறிவதற்கான ஒரு நகர்வாகும் என சேனரட்ன தெரிவித்துள்ளார்.

போர்க் குற்ற விசாரணை என்பது சிறிசேனவின் முன்னுள்ள ஒரு சவாலாகும். இதற்கு முதல் ஆட்சியிலிருந்த ராஜபக்ச இவ்வாறான விசாரணைகளை முற்றிலும் நிராகரித்திருந்தார். இது தொடர்பில் தற்போதும் ராஜபக்சவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேசிய அளவில் மிகப் பலமான ஆதரவு காணப்படுகிறது.

குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையை வழங்குவதற்கான ஐ.நாவின் அழைப்பைத் தான் வரவேற்பதாக, 2010ல் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட, கார்டியன் ஊடகத்துடனான நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘தேர்தல் காலத்தில் சிறிலங்கா அரசாங்கமானது தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நகர்வுகளை முன்னெடுக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும். அதாவது மீளிணக்கப்பாடு தொடர்பில் கடினமான தீர்மானங்களை முன்னெடுக்க சிறிலங்கா அரசாங்கம் விரும்புகிறது’ எனவும் திருமதி எக்னலிகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *