மேலும்

ஐ.நா தீர்மானம் வலுவான அனைத்துலகத் தலையீட்டை உறுதிப்படுத்த வேண்டும்

HRWசிறிலங்காவில் போரின் போது, இடம்பெற்ற மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறை, வலுவான அனைத்துலகத் தலையீட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் அமைய வேண்டும் என்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கைத் தளமாக கொண்ட, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின், ஜெனிவாவுக்கான பணிப்பாளர் ஜோன் பிசர் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் செயற்பட வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதை, தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் புலப்படுத்துகிறது.

அனைத்துலக பங்களிப்புடனான நீதிப் பொறிமுறையை தீர்மானம் அங்கீகரித்துள்ளதன் மூலம் நீதிவழங்குவதற்கு அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்ற முக்கியமான விடயத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதுடன்,சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமான வாக்குறுதிகளையும் வழங்குகிறது.

எனினும் நேர்மையான நீதிச் செயற்பாடுகளில் உள்நாட்டு அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் காணப்படும் நிலையில், அனைத்துலக பங்களிப்பும், கண்காணிப்பும் அவசியம்.

சிறிலங்காவில் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய சீர்திருத்தங்களுக்கான உறுதியான வேண்டுகோளாகவும் இந்த தீர்மானம் அமைந்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், கலப்பு நீதிமன்றம் பற்றி குறிப்பிடப்படாத போதிலும், அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டால், கடந்த கால சம்பவங்களுக்கு நீதி வழங்கக் கூடிய ஓர் நிலைமை ஏற்படும்.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையின் போது ஏற்படக் கூடிய குழப்ப நிலைமைகள், பிரச்சினைகளை தவிர்க்க அர்த்தமுள்ள அனைத்துலகப் பங்பளிப்பு, அனைத்துலக கண்காணிப்புப் பொறிமுறைமை என்பன மிகவும்அவசியமானது.

அனைத்துலக தலையீடு இல்லாவிட்டால் உள்ளக அழுத்தங்கள் தலையீடுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாகவே காணப்படும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால், சிறிலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுகின்றதா அல்லது வேறுபெயரில் அதேபோன்ற மோசமான சட்டம் கொண்டு வரப்படுகின்றதா என்பதே இந்த விவகாரத்தில் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் நேர்மையை வெளிப்படுத்தப் போகின்றது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறிலங்காவின் மனித உரிமை கரிசனைகளுக்கு தீர்வை காண்பதில் அது மைல்கல்லாக அமையும்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்திடமே தற்போதுள்ளது. ஐ.நா உறுப்பு நாடுகள் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

கண்காணிக்கத் தேவையில்லாத நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவை சேர்ப்பதற்கான தருணம் இன்னமும் வந்துவிடவில்லை .

தீர்மானத்தின் பரிந்துரைகளை அனைத்துலகம் கண்காணிப்பதற்கு போதியளவு சட்ட அதிகாரம் இல்லாத நிலைமை நீடித்து வருகின்றது.

தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த அழுத்தமான நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படாமை கவனிக்கப்பட வேண்டியது.

சிறிலங்காவுடன் இணைந்து நிலையான மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர் பிசர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *