மேலும்

சிறிலங்கா சட்டங்களின் கீழேயே எல்லா விசாரணைகளும் நடக்கும் என்கிறார் ரணில்

RANILஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக,  விசாரணைக்காக அமைக்கப்படும் பொறிமுறைகள் அனைத்தும் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில், நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போருக்கு முழுமையான பொறுப்புக்கூற வேண்டியது புலிகள் அமைப்பு தான். பாரிய பொறுப்பை புலிகளும் பிரபாகரனுமே ஏற்க வேண்டும்.

எனினும் பிரபாகரனோ அவரோடு இணைந்து செயற்பட்ட பெரும்பாலானோரும் இப்போது உயிருடனில்லை. அவர்கள் உயிரோடிருந்திருந்தால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும்.

இதனால் ஒரு தரப்பினருக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடருவதால் நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியுமா என்பது எம் முன் உள்ள கேள்வியாகும்.

நீதிமன்றத்துக்கு இணங்கவே செயற்பட வேண்டியுள்ளது. தேவையானபோது வழக்குத் தொடர வேண்டும். எனினும் எந்தத் தரப்புக்கு எதிராக வழக்குத் தொடருவது என்பதும் கேள்வியே.

தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதானால் நல்லிணக்கம் அவசியம். இதற்கு சகலரையும் பற்றிய உண்மையை தெரிந்து கொள்வது முக்கியமாகிறது.

உண்மையைத் தெரிந்து கொண்ட பின் முடியுமானளவு ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதை வழக்குத் தொடருவதன் மூலம் மேற்கொள்ள முடியாது. அவ்வாறானால் அது சாத்தியமற்றுப் போகும்.

உண்மையைத் தெரிந்து கொள்ளும் பொறிமுறை இதற்கு அவசியமாகிறது. இதற்கென நாம் மூன்று நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

முதலாவது காணாமற்போனோர் தொடர்பான பணியகம், இரண்டாவது குற்றச்சாட்டு சம்பந்தமாகவும் நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தி அந்த விசாரணையை முன்னெடுத்துச் செல்வதா என்பதைத் தீர்மானிக்கும் சட்ட பணியகம். இவையிரண்டும் இலங்கையரின் தலைமையில் இலங்கைக்கேற்ப நாம் நடைமுறைப்படுத்துவோம்.

சிறப்பு சட்ட நிபுணர்கள் இதுபற்றி ஆராய்ந்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பர். அந்த ஆணைக்குழு உண்மையைக் கண்டறிந்த பின் எமது அடிப்படை விடயம் நிறைவு பெறும்.

இந்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க மதத் தலைவர்களைக் கொண்ட சபை நியமிக்கப்படும். கருணையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்வை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் அச்சபை செயற்படும்.

உலகில் உண்மையைக் கண்டறியும் குழு இருந்த போதும் மதத் தலைவர்களைத் தலைமையாகக் கொண்ட கருணையை முன்னிறுத்திய குழு இருந்ததில்லை.

தமது அரசாட்சி புத்த மதத்துக்கு ஏற்றதாக அமைய வேண்டும் என கலிங்கப் போருக்குப் பின் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனை முன்னுதாரணமாகக் கொண்டதே இந்த மதத் தலைவர்கள் சபை.

உண்மை நல்லிணக்கம் ஆகியவற்றுக்கே நாம் முன்னுரிமையளிக்க வேண்டும்.

வழக்குகள் தொடரப்பட நேர்ந்தாலும் எமக்கு தேசிய நீதிமன்ற பொறிமுறை உள்ளது. இவையனைத்துமே எமது சட்டம் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

கொமன்வெல்த் உட்பட அனைத்துலக நீதிபதிகள் இதில் ஒத்துழைக்க முடியும். எனினும் அனைத்து விசாரணைகளும் சிறிலங்காவின் சட்டப்படியே நடைமுறைப்படுத்தப்படும்.

நாடாளுமன்றமே அதனைத் தீர்மானிக்கும். நாடாளுமன்றத்திற்கே அதற்கான முழு அதிகாரமும் உள்ளது.

இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு எமது நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்கவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

ஒரு போதும் இந்த செயற்பாடுகள் எமது அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுத்தப்படமாட்டாது. மக்கள் இறையாண்மைக்கு முன்னுரிமையளிக்கப்படும்.

நாம் அனைத்துலக உட்ன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளோம் எனினும் சிறிலங்காவின் சட்டங்களுக்கு ஏற்பவே அது நடைமுறைப்படுத்தப்படும்.

இதன் மூலம் மக்கள் இறையாண்மைக்குக் கிடைத்த வெற்றி. இரு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்பட்டதாலேயே இதனை ஏற்படுத்த முடிந்தது.

இதனால் அனைத்துக் கட்சிகளுக்கும் நான் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். எந்த இன, மத, மக்களும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *