மேலும்

அனைத்துலக விசாரணைப் பொறிமுறை சிறிலங்காவுக்கு புதியதல்ல – ‘தி ஹிந்து’

the_hinduசிறிலங்காவுக்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறை என்பது புதியதல்ல என தி ஹிந்து  ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றில் அனைத்துலக நீதிபதிகளின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கலப்பு நீதிமன்றம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் சிறிலங்காவானது இக்கலப்பு நீதிமன்றை ஏற்றுக்கொள்வதற்கான சமிக்கைகளை இன்னமும் வழங்கவில்லை.

இந்நிலையில் சிறிலங்காவைப் பொறுத்தளவில் கடந்த 50 ஆண்டுகளாக தன்னால் தீர்க்கமுடியாத சில பிரச்சினைகளுக்கு அனைத்துலக நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களின் உதவியை நாடியுள்ளதற்கான பல்வேறு ஆதரங்கள் உள்ளன.

செப்ரெம்பர் 1959ல் படுகொலை செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ,ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொலை வழக்குத் தொடர்பாக விசாரணை செய்வதற்காக எகிப்து மற்றும் கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய குழு, 1963 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நியமிக்கப்பட்டது.

இதேபோன்று 1993 ஏப்ரலில், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கிய  லலித் அத்துலத் முதலி கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட போது சிறிலங்காவின் உள்நாட்டு காவற்துறையினர் இந்த விசாரணையை மேற்கொள்வதற்கு ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறை  உதவியை வழங்கியது.

சிறிலங்கா இராணுவத்தின் வடபிராந்தியக் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக 1993 மே மாதத்தில் நியமிக்கப்பட்ட சிறிலங்கா விசாரணை ஆணைக்குழுவில் கானா, நியுசிலாந்து மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் உள்வாங்கப்பட்டனர்.

2006 நவம்பரில், சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி நிசங்க குமார உடலகமவுடன் இணைந்து அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடலகமவின் ஆணைக்குழுவின் விசாரணைகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட 11 பேர் கொண்ட அனைத்துலக சுயாதீன வல்லுனர் குழுவிற்கு பி.என்.பக்வதி தலைமை தாங்கியிருந்தார்.

இவ்வாறானதொரு வரலாற்றுப் பின்னணியில் சிறிலங்கா தனது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக வல்லுனர்கள் மற்றும் நீதிபதிகளையும் உள்ளடக்க முடியும்.

ஏனெனில் அனைத்துலக நீதி சார் தலையீடு என்பது சிறிலங்காவிற்குப் புதிதான ஒன்றல்ல எனவும், தி ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *