மேலும்

சிறிலங்காவின் நீதித்துறை மீது ஐ.நா மனித உரிமை ஆணையம் நம்பிக்கை கொள்ளாதது ஏன்?

Mohan-Peirisநாட்டின் நீதிமுறைமையில் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கான மிகப் பாரிய செயற்பாட்டை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.  இவ்வாறானதொரு சூழல் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்டது.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில், உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

2011ல், சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றங்களைத் தோற்கடிப்பதற்கான அமைச்சரவைச் சட்ட ஆலோசகராக சிறிலங்காவின் முன்னாள் நீதியரசர் மொகான் பீரிஸ் நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றிருந்தார். அப்போதைய சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவால், மொகான் பீரிஸ் அமைச்சரவை சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.

2011ல் நியுயோர்க்கிற்குச் சென்ற சிறிலங்காவின் பிரதிநிதிகள் குழுவில் மொகான் பீரிசையும் தெரிவு செய்தது மகிந்தவே ஆவார். சிறிலங்கா அரசாங்கத்தால் ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டு பொய்யானது என்பதை ஐ.நா வில் நிரூபிப்பதற்காக மொகானால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்றன.

இவர் தனது தரப்பு நியாயத்தை உறுதிப்படுத்துவதற்காக பொய்யான சாட்சியங்களை வழங்கினார். இதன்பின்னர் இவர் சிறிலங்காவின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். சிறிலங்காவின் 43வது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக மகிந்தவால் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதனால் சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இவருக்குப் பதிலாக மொகான் பீரிஸ் நியமிக்கப்பட்டார்.

இவரது தீர்ப்பின் பிரகாரம் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்டரீதியானது என அறிவிக்கப்பட்டது.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையகத்தின் ஆணையாளர் தனது அறிக்கையை தயார்ப்படுத்திய போது பிரதம நீதியரசராக மொகான் பீரிஸே பதவியிலிருந்தார். இதனால் சிறிலங்காவின் களநிலையை ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையகம் சந்தேகக் கண்ணுடன் நோக்கியதில் எவ்வித ஆச்சரியமுமில்லை.

இதன்பின்னர், மொகான் பீரசிற்குப் பதிலாக நீதிபதி கே.சிறிபவான் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். 1991 இற்குப் பின்னர் சிறிலங்காவின் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்றமை இதுவே முதற்தடவையாகும். 1999ல் சரத் என் சில்வா சிறிலங்காவின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட போது பல்வேறு எதிர்ப்புக்கள் தோன்றிய போதும், இவர் சிங்கள பௌத்தர் எனத் தெரிவித்து இவரது நியமனம் நியாயப்படுத்தப்பட்டது.

சரத் என் சில்வாவிற்கு முன்னர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டவர்கள் வேற்று இன மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் என இவரது நியமனத்திற்கு ஆதரவானவர்கள் விவாதித்தார்கள். நீதிபதி சிறிபவானின் நியமனமானது பிரதம நீதியரசர்களை நியமிக்கும் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல் தென்படுகிறது.

எவ்வாறெனினும், சிறிபவான் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டதன் பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் வழக்குத் தொடர்பான தீர்மானம் மீது பல்வேறு வினாக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவானது பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். ஏனெனில் இந்த மனுவின் பிரதிவாதியான சிறிலங்காவின் அமைச்சரவை இந்த வழக்குத் தொடர்பான அடுத்த விசாரணைத் திகதியில் மாற்றமடைந்திருக்கும்’ என கோத்தபாய ராஜபக்சவால் தாக்கல் செய்யப்பட்ட மனுத் தொடர்பில் நீதிமன்றால் அறிவிக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பும் தெரிவித்திருந்தார்.

கடந்த மே மாதம் சிறிலங்கா அறக்கட்டளை நிறுவகத்தின் அனைத்துலக ஊடக மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் விக்கிரமசிங்க இவ்வாறு வினவியிருந்தார். ஏனெனில் கோத்தபாயவின் மனுத் தொடர்பான அடுத்த வழக்குத் திகதி ஒக்ரோபரில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆனால் சிறிலங்காவின் புதிய அமைச்சரவை செப்ரெம்பரில் கூடவுள்ள நிலையில் கோத்தபாய தனது வழக்கிலிருந்து இலகுவாக வெளியேறுவதற்கான சாத்தியத்தைக் கொண்டிருப்பதாகவும் இவர் இதற்காக அடுத்த ஒக்ரோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டிய தேவையிருக்காது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது பொதுநலவாய நீதிபதிகள் சங்கத்தின் ஆலோசனையை நாடவேண்டும் எனவும் இவர் பரிந்துரைத்திருந்தார். தற்போது சிறிலங்கா பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளதால் இந்த அமைப்பின் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த உச்சி மாநாட்டில் அப்போதைய சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்த கருத்துக்கள் சிலவற்றையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார். எவரையும் இகழ்ச்சி செய்யாது தனியார் துறை ஊடகங்கள் சுயதணிக்கை நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என டீ சில்வா தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் பல பில்லியன் டொலர்களை வெளிநாட்டு வங்கி ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாக ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்தியானது மகிந்த ராஜபக்சவை மிகவும் வேதனைக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக டீ சில்வா தெரிவித்திருந்தார்.

கோத்தபாயவின் வழக்குத் தொடர்பான சிறிலங்காவின் உச்ச நீதிமன்றின் தீர்மானம் தொடர்பில் பொதுநலவாய சட்டவாளர் சங்கத்திடம் ஆலோசனை கேட்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருந்தார். சிறிலங்காவின் நீதிச் சேவையின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க கூட சந்தேகம் கொண்டுள்ளதையே இவரது கருத்துக்கள் சுட்டிநிற்கின்றன.

சிறிலங்காவின் 43வது பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, சிறிலங்காவின் நீதிச்சேவைகள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி பொதுநலவாய நீதவான் நீதிபதிகள் சங்கம், பொதுநலவாய சட்டக்கல்விச் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டவாளர்கள் சங்கம் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தன.

‘2012 நவம்பர் 19ல் வெளியிடப்பட்ட எமது அறிக்கைக்குக்கு மேலாக, தற்போது சிறிலங்காவின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையானது அந்நாட்டின் நீதிச்சேவைகள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளன என்பதைத் தெளிவாகக் காண்பிப்பதற்கான கூட்டறிக்கையை பொதுநலவாய சட்ட கல்விச் சங்கம், பொதுநலவாய நீதவான் நீதிபதிகள் சங்கம் மற்றும் சட்டவாளர் சங்கம் ஆகியன இணைந்து வெளியிடுகிறோம்.

சிறிலங்காவானது பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடாக உள்ளது என்ற வகையில் இந்த அமைப்பின் அடிப்படை விழுமியங்கள், கோட்பாடுகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு தனது நாட்டில் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற நீதிச்சேவையை முன்னெடுப்பதற்குத் துணைநிற்க வேண்டும்.

சிறிலங்காவில் நிலவும் துர்நடத்தைகள் மற்றும் மீறல்கள் போன்றவற்றைக் களையும் சந்தர்ப்பத்தில் மட்டுமே இங்கு சுயாதீன நீதிச்சேவை செயற்பட முடியும்’ என பொதுநலவாய நீதித்துறைச் சங்கங்கள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான கண்காணிப்பு அறிக்கைகளின் வாயிலாக சிறிலங்காவின் மூன்று முக்கிய துறைகளுக்கு இடையிலான பொறுப்புக்கூறல் மற்றும் உறவுநிலை தொடர்பான கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதாகவும் இதன் பெறுபேறாக இந்த நாட்டின் சட்டஆட்சி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுநலவாய அமைப்பின் நீதிசார் சங்கங்களால் இணைந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் டிசம்பர் 06, 2012 அன்று அனைத்துலக நீதிபதிகள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தாம் ஆதரிப்பதாகவும், சிறிலங்காவின் நீதிச்சேவைகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொதுநலவாய செயலாளர் நாயகம் மற்றும் சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக பொதுநலவாய நீதிசார் சங்கங்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

‘சுதந்திரமான நீதிச்சேவையானது ஒரு நாட்டின் சட்ட ஆட்சிக்கான அடிப்படைக் கோட்பாடாகும். இதன் மீறல் செயற்பாடுகளாலும் தனது சொந்த அரசியல்யாப்பின் சரத்துக்களின் பிரகாரம் நீதிபதிகளை பதவியிலிருந்து நீக்கத் தவறியுள்ளதன் மூலமும் சிறிலங்கா நாடாளுமன்றமானது பொதுநலவாய அமைப்பின் அடிப்படை கோட்பாடுகள் மற்றும் விழுமியங்களை மிக மோசமாகக் குழிதோண்டிப் புதைத்துள்ளது.

ஆகவே இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என பொதுநலவாய அமைப்பின் நீதிவாதன் மற்றும் நீதிபதிகள் சங்கத்தின் தலைவர் அறிவித்திருந்தார். ‘சிறிலங்கா அரசாங்கமும் நாடாளுமன்றமும் தனது நாட்டின் சுதந்திரமான நீதிச்சேவைக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் அதன் அரசியல் யாப்பைப் பின்பற்றுவதுடன் பொதுநலவாய அமைப்பின் கோட்பாடுகள் மற்றும் அனைத்துலக நியமங்களைப் பின்பற்றவேண்டும் எனவும் பொதுநலவாய அமைப்பின் நீதவான், நீதிபதிகள் சங்கம் மற்றும் சட்டவாளர் சங்கம் போன்றன வலியுறுத்துகின்றன’ என பொதுநலவாய அமைப்பின் நீதவான் மற்றும் நீதிபதிகள் சங்கத்தின் தலைவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியிருந்தார்.

சிறிலங்காவின் நீதிபதிகள் சேவையில் தற்போது பதவியிலுள்ள நீதிபதிகளில் பெரும்பாலானவர்கள் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டவர்களாவர். இதன்பிரகாரமே, உச்சநீதிமன்றின் நீதிபதிகளாக மகிந்தவால் நியமிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளால் கோத்தபாயவுக்குச் சார்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் அறிக்கை மற்றும் விசாரணை அறிக்கை போன்றன மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையே அதிகளவில் சுட்டிக்காட்டியுள்ளன. சிறிலங்காவில் போர் தீவிரம் பெற்றிருந்தபோது பாதுகாப்பு அமைச்சராக மகிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலராக கோத்தபாய ராஜபக்சவும் செயற்பட்டனர்.

இந்நிலையில் கோத்தபாயவுக்குச் சார்பாக சிறிலங்காவின் உச்சநீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்வு தொடர்பில் பொதுநலவாய  நீதிபதிகளிடம் ஆலோசனை பெறப்பட வேண்டும் என சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதற்கு முன்னர் மகிந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது.

நீதித்துறையின் இத்தகைய செயற்பாடுகளைக் கருத்திற் கொண்டே, நாட்டின் நீதிமுறைமையில் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கான மிகப் பாரிய செயற்பாட்டை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழல் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்டது. சிறிலங்கா வாழ் மக்கள் அப்போதைய நீதித்துறையில் நம்பிக்கை இழந்திருந்தனர்.

இதன் காரணத்தால் 1963 விசாரணை ஆணையகங்கள் சட்டத்தின் கீழ் S.W.R.D பண்டாரநாயக்கவின் படுகொலை தொடர்பாக விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் அனைத்துலக நீதிபதிகளை அப்போதைய பிரதமர் சிறிமாவோ நியமிக்க வேண்டிய நிலையேற்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்கவால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழுவில் எகிப்து நாட்டைச் சேர்ந்த அப்டெல் யோனிஸ், கானாவைச் சேர்ந்த ஜி.சி.மில்ஸ்-ஒடிச் மற்றும் ரி.எஸ்.பெர்னாண்டோ ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *